தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூன் 28, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

தந்தி சுருக்கம்!

புகழ்மிக்க பத்திரிகை ஆசிரியர் புலிட்சர் தம் இளம் வயதில் ஒரு பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்தார். இதழின் ஆசிரியரிடம், 'சுருக்கமாக எழுதுவது எப்படி' என்று கேட்டார்.

அதற்கு ஆசிரியர், 'கூற வேண்டியதை எல்லாம் எழுதிக்கொள், அதை இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு உன் சொந்த செலவில் தந்தி அடிப்பதாக வைத்து கொள். தானே செய்தி சுருங்கிவிடும்!' என்றார்.

இன்றைய நிலையில் ஆவணங்கள் இல்லாமல் வெளியே செல்வதே குற்றம் என்ற நிலை உருவாகி வருகிறது.

போஸ்ட்டில் டாக்குமெண்ட்ஸ்!

தீவிரவாதம் அதிகரிக்க, அதிகரிக்க, இந்த நடைமுறையும் சிக்கலாகி கொண்டே வருகிறது. எங்கும் ஆவணங்களுடன் செல்வது என்பது அத்தியாவசியமானதாக உள்ளது.

பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், ஏ.டி.எம்., கார்டு போன்றவற்றில் ஏ.டி.எம்., கார்டு தொலைந்தால், உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவித்து, ஏ.டி.எம்.,கார்டின் செயல்பாட்டை முடக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால், கணக்கில் இருக்கும் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

சரி, நீங்கள் போகும் பாதையில் வேறு யாராவது தொலைத்து விட்டு போன ஆவணங்களை கண்டெடுத்தால் என்ன செய்ய வேண்டும்?

அவற்றை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும். அவர்கள் அதனை உரியவர்களிடம் சேர்ப்பர். இன்றைய வேகமான உலகில் இதை செய்ய பலருக்கும் நேரமிருப்பதில்லை. எனவே, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற எந்த ஆவணமாக இருந்தாலும் அதை எடுத்து அருகில் இருக்கும் அஞ்சல் பெட்டியில் போட்டுவிட்டால் போதும். அந்த ஆவணங்களை அஞ்சல் துறை உரியவர்களிடம் சேர்த்துவிடும். மிக எளிமையான இந்த வேலையை செய்வதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு பெரும் உதவி செய்தவர்களாக மாறுவோம் என்பது உண்மை!

காசு, பணம், துட்டு, மணி.... மணி!

'உட்கார்ந்தவன் காலில் மூதேவி,

ஓடியவன் காலில் ஸ்ரீதேவி!'

விளக்கம்: நமது பண்டைய தமிழ் மரபில் 'மூதேவி' என்பது தரித்திரம் மற்றும் வறுமையின் அடையாளமாகும். 'ஸ்ரீதேவி' என்பது செல்வம்.

அதாவது, செல்வச் செழிப்பிற்கும், வளமைக்கும் உதாரணமாய் சொல்லப்படுவது யாவரும் அறிந்ததே. இந்த சொலவடையில் 'உட்கார்ந்தவன்' என்ற சொல்லுக்கு பொருள் உழைப்பை மறந்து விட்டு அல்லது மறுத்து விட்டு, சோம்பேறி தனத்துடன் ஊர்வம்பு பேசி கொண்டு 'சும்மா' இருப்பவர்களை குறிக்கிறது.

'ஓடியவன்' என்ற சொல் கடின உழைப் பாளியையும், கடமையை தவறாது செய்பவனையும் குறிக்கிறது.

அதாவது, உட்கார்ந்தவன் வறுமைக்கு சொந்தக்காரனாகி விடுகிறான். உழைக்கிறவன் வளமான வாழ்விற்கு அதிபதியாகி விடுவான் என்பதை ஆணித்தரமாக அடித்து சொல்கிறது.

இந்த பேச்சு வழக்கு சொலவடை. இதில் குறிப்பாக 'காலில்' என குறிப்பிட்டிருப்பதன் காரணம், ஒரு நபரின் உடலை கால் தாங்கி பிடிக்கிறது போல, அந்த நபரின் சோம்பலை யும், சுறுசுறுப்பையும் பொறுத்து அவரின் வாழ்வை மூதேவி என்ற ஏழ்மையும், ஸ்ரீதேவி என்ற செல்வமும் தாங்கி பிடிக்கும் என சொல்லியிருப்பதாக பொருள் கொள்ளலாம்.

அறிவுரைக்கெல்லாம் அசராத ஆசாமிகளிடம், இப்படி சொல்லால் அடிப்பது சுலபமும், பயனும் ஆகுமில்லையா?

சொல்லின் பொருள் தேடி மூளையும், தெளிந்த மூளையின் முடுக்கலில் உடலும் ஓடுவதற்கு தயாராகுமில்லையா?

வெள்ளியும் விர்ருனு ஏறும்!

தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகங்கள் பூமியில் உண்டு. ஆனாலும் தங்கத்திற்கு மட்டும் தனி மரியாதை எப்போதும் உள்ளது. அதனால் அதன் விலை எப்போதும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது...

என்ன இருந்தாலும் தங்கம்தான் உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை யாக உள்ளது. எந்த நாட்டில் தங்கம் அதிகமாக இருப்பு உள்ளதோ, அந்த நாட்டுக்குத்தான் பணக்கார அந்தஸ்து கிடைக்கிறது. தங்கத்திற்கு அடுத்து திரவத் தங்கமான பெட்ரோல் உள்ளது. இனியும் இந்த நிலை தொடருமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

ஏனென்றால், வெள்ளியின் சந்தை நிலவரம் தொடர்ந்து ஏறிக்கொண்டே வந்துள்ளது. கடந்த ஆண்டு தங்கத்தின் விலையேற்றம் 90 சதவீதமாக இருந்தது. ஆனால், வெள்ளியின் விலையேற்றம் 150 சதவீதத்தை தொட்டது.

தங்கம் போன்று வெள்ளி வெறும் அணிகலனாக மட்டும் இருப்பதில்லை. பல எலக்ட்ரானிக் பொருட்களிலும், மருத்துவம், நகை தயாரிப்பு, முலாம் பூசும் தொழில் பலவற்றிலும் வெள்ளியின் பங்கு அதிகமாகவே உள்ளது.

சமீபத்தில் வெள்ளியில் முதலீடு செய்ய வெள்ளி உற்பத்தியாளர்கள் அறை கூவல் விட்டிருப்பதும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.

2012-ல் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் 13.04 சதவீதத்தினர் லாபம் அடைந்தனர். இது 2013-ல் 11.08 சதவீதமாக குறையும் என்று சர்வதேச அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதே வேளையில் வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் 2012-ல் 13-46 சதவீதம் லாபம் அடைந்ததாகவும், இது 2013-ல் 34.08 சதவீதமாக உயரும் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

இதனால் வெள்ளியில் முதலீடு செய்வது இந்த ஆண்டு தங்கத்தை விட அதிகரிக்கும் என்று சொல்கின்றனர் சர்வதேச வல்லுநர்கள்.

வெள்ளியின் மதிப்பு கூடக் கூட நமது பெண்கள் அணியும் கொலுசு, மெட்டியின் எடையும் கூடிக்கொண்டே போகும் என்பதில் சந்தேகமே இல்லை.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுத்தாங்கம்மா!

இது 'பனீர் மசாலா பஜ்ஜி' செய்முறை நேரம்.

தேவையான பொருட்கள்: பனீர்-200 கிராம், கடலை மாவு-அரை கப், மைதா மாவு-கால் கப், இட்லி மாவு-1 குழிக்கரண்டி, மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன், சாட் மசாலாத் தூள்-ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை: கடலை மாவு, மைதா மாவு, இட்லி மாவு, மிளகாய்த்தூள், உப்பு எல்லா வற்றையும் தேவையான நீர் சேர்த்து சற்றே கெட்டியாக கரைக்கவும்.

பனீரை குட்டி, குட்டி சதுர துண்டுகளாக கட் பண்ணவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சதுரமாக கட் பண்ணிய பனீரை மாவில் அமிழ்த்தி காய்ந்த எண்ணெயில் போட்டு பொரிக்க, சூடான சுவையான பனீர் பஜ்ஜி ரெடி. இதை தட்டில் வைத்து சாட் மசாலாத் தூவி சுடச்சுட சாப்பிடவும்.

என்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us