தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹிப்போ... ஹிப்போ...!

ஹிப்போ... ஹிப்போ...!

ஹிப்போ... ஹிப்போ...!


PUBLISHED ON : ஜூன் 28, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி குதிபோட்டுக் கொண்டு ஓடினான். அவன் கையில் முழுசாக பத்து ரூபாய் இருந்தன. ஊரிலிருந்து வந்திருந்த அவன் மாமா அவனுக்குப் பரிசாகக் கொடுத்த ரூபாய் அது. நேரே ராவுத்தர் கடையை நோக்கி ஓடினான் கோபி. அவனுக்குப் பிடித்த மசாலா பாப்கார்ன் அங்குதானே கிடைக்கும்?

கடையில் கூட்டமில்லை. ராவுத்தர் மட்டும் கல்லாப் பெட்டியின் அடியில், பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். கோபியைக் கண்டதும், ''வா, தம்பி! என்ன வேணும்? ஏன் இப்படி ஓடி வந்தே? உனக்கு மூச்சு இறைக்குதே?'' என்றார்.

''கரம் மசாலா பாப்கார்ன் இருக்குதா?'' என்று கேட்டான் கோபி.

''நிறைய இருக்குது தம்பி, காலையிலே வந்திருந்தா கிடைச்சிருக்காது; இப்பதான் புது 'ஸ்டாக்' வந்திருக்கு. எத்தனை பாக்கெட்டுகள் வேணும்?'' என்றார் ராவுத்தர்.

''ஒண்ணு போதும்! அதுக்குத்தான் காசு இருக்கு என்கிட்டே,'' என்ற கோபி பத்து ரூபாயைக் கொடுத்தான்.

ராவுத்தர் ஒரு பாலித்தீன் பையிலிருந்த பாப்கார்னை கொடுத்துக் கொண்டே, ''தம்பி! உன் நண்பர்களிடம் ராவுத்தர் கடையிலே நிறைய பாப்கார்ன் வந்திருக்குன்னு சொல்லு...'' என்றார்.

''ஓ! சொல்றேன்!'' என்று கூறிக்கொண்டே ஓடினான் கோபி.

'பாவிப் பயல் இருபது பாக்கெட்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்க, ஐம்பது பாக்கெட்டைத் தலையிலே கட்டிட்டுப் போயிட்டான். எப்படித் தான் இத்தனையும் விக்கப் போகுதோ!' என்று அலுத்துக்கொண்டார் ராவுத்தர்.

வீட்டுக்குத் திரும்பும்போது தேர்முட்டிப் பக்கமாப் போனான் கோபி. அங்கு வழியில் மழைநீர் தேங்கிய ஒரு பெரிய குட்டை இருக்கும். அதில், எப்போதும் ஊரில் உள்ள எருமைகளும், வாத்துக்களும் உல்லாசமாக விளையாடிக்கொண்டிருக்கும். யாரும் அவைகளை லட்சியம் செய்ய மாட்டார்கள். அவையும் யாரையும் லட்சியம் செய்யாமல் குட்டை நீரில் குஷியாக நீந்திக் கொண்டிருக்கும். இன்று என்ன அதிசயம்! குட்டையைச் சுற்றி ஒரே கூட்டம்! கோபி எம்பிப் பார்த்தான். ஏதும் தெரியவில்லை. அவன் குள்ளம், ஆகவே கூட்டத்துக்குள் புகுந்து தலையை நுழைத்துப் பார்த்தான். கூட்டத்துக்கான காரணத்தை அறிய ஆவல் அவனுக்கு.

அங்கே...? என்ன ஆச்சரியம்! எருமைகளோ வாத்துக்களோ இல்லை. நட்ட நடுக் குட்டையில் அது என்ன மிருகம்? பெரிய தலை, பூத உடல்... ஓ! நீர் யானையல்லவா இது? இது எப்படி இங்கே வந்தது? கோபியின் குழப்பம் அங்கு கூடியிருந்தவர் களின் பேச்சைக் கேட்டபோது தெளிந்தது.

''ஊரிலே சர்க்கஸ் வந்திருக்கில்லையா? அதிலே இருக்கிறதாம் இந்த மிருகம். அவங்க கவனக் குறைவா இருந்த போது இது வெளியே கிளம்பி வந்துடுச்சி...''

''ஆமா! விறகுபேட்டைக்கிட்டே டேராப் போட்டிருக்குதே புது சர்க்கஸ் கம்பெனி, இன்னிலேயிருந்துதான் 'ஷோ' ஆரம்பம். இது நீர் யானை. இதுக்குத் தண்ணீன்னா ரொம்பக் குஷி. அடேயப்பா, எத்தனை பெரிய தலை இதுக்கு!''

கோபிக்கு இப்போது எல்லாம் விளங்கி விட்டது. புதிதாக வந்துள்ள சர்க்கஸ் கம்பெனி, இந்த நீர் யானைப் படத்தைப் போட்டே போஸ்டரெல்லாம் ஒட்டியிருந்தது. பாவம் வாத்துக்கள் 'க்வா க்வாக்' என்று கூச்சலிட்டபடி எதிர்க்கரையில் பீதியடைந்து போய்க் கூட்டமாய் ஒண்டியபடி நின்றிருந்தன. தீயணைப்புப் படைக்கு ஆள் அனுப்பியிருக் கிறார்களாம் நீர் யானையை ஏரியிலிருந்து கிளப்பிக் கொண்டு போக, சர்க்கஸ் கம்பெனி நிர்வாகிகள் கவலையோடு குட்டைக்கரையில் நின்று கொண்டிருந்தனர்.

'கிணிங், கிணிங்' என்று விடாமல் தொடர்ந்து கேட்ட மணியோசை தீயணைப்பு வண்டி வருவதை அறிவித்தது.

''வழி விடுங்கள், வழி விடுங்கள்,'' என்ற குரல் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பயர் என்ஜின் வண்டி ஆட்களுடன் குட்டைக் கரைக்கு வந்து நின்றது. நெருப்பணைக்கும் போது, நீரைப் பீச்சியடிக்க உதவும் குழாய் மூலம் ஹிப்போமீது நீரை வேகமாக அடித்தால் அது கரையேறி விடும் என்று முடிவு செய்தனர். அதன்படி மடித்துச் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தேர் வடம் போன்ற குழாயைப் பிரித்துப் பரபரப்புடன் செயல்பட்டபோது, நீர் யானை குப்பென்று குட்டை நீருக்குள் முங்கி மூழ்கி விட்டது. அதன் சிறிய காதுகளும் பிதுங்கிய கண்களும் மட்டுமே நீர் மட்டத்துக்கு மேல் தெரிந்தன. இந்த நிலையில் அதன்மீது எப்படித் தண்ணீரைப் பீச்சியடிப்பது? குட்டையிலிருந்து அதைத் தங்களால் வெளியேற்ற முடியா தென்று தீயணைப்புப் படையினர் தண்ணீர்க் குழாய்களைச் சுருட்டிக்கொண்டு, திரும்பிப் போயினர்.

இதற்குள் சர்க்கஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தபடி ஒரு லாரி வந்தது. அதில் ஒரு பளுதூக்கி (கிரேன்) பொருத்தப்பட்டிருந்தது. குட்டையின் கரை அருகில் பின்னோக்கி அந்தக் கிரேனைக் கொண்டு வந்து நிறுத்தினர். அதன் எந்திரம் 'கர்ர்... புர்ர்'' என்று சத்த மிட்டது. கிரேன் துதிக்கை போல் குட்டை நீரில் ஹிப்போவின் மீதாகத் தழைந்தது. அதை அப்படியே தூக்கிக் கரையில் வைத்து விடலாம் என்பது அவர்கள் முடிவு. ஆனால், ஏனோ வெகுநேரம் முயன்றும் முடியவில்லை. ஹிப்போவை அதன் நிலையிலிருந்து அசைக்கவே முடியவில்லை. அதைத் தூக்கும் அளவுக்கு அந்தக் கிரேனுக்குச் சக்தி இல்லையோ? அல்லது அதைத் தூக்க வசதியான தோது கிடைக்கவில்லையோ? எப்படியோ கிரேனும் தோல்வி கண்டு தொங்கிய முகத்துடன் குட்டைக் கரையை விட்டு நகர்ந்தது.

குட்டைக் கரையைச் சூழ்ந்திருந்த மக்கள், சர்க்கஸ் நிர்வாகிகள், வாத்துக்கள் எல்லாரும் ஹிப்போவைக் குட்டை நீருக்குள்ளிருந்து வெளியேற்றுவது எப்படி என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்று கொண்டிருந்தனர். இதில், வாத்துக்கள்தான் பாவம், தங்கள் உரிமை பறிபோய் விட்டதினாலோ என்னவோ அடிக்கடி இறக்கைகளை விரித்துத் தாவித் தாவி 'க்வாக், க்வாக்' என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தன.

கோபி இப்போது கூட்டத்தின் முன்னால் குட்டைக் கரையின் ஓரமாக நின்று கொண்டிருந்தான். பாப்கார்ன் சாப்பிட வேண்டும் என்ற நினைவே இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கிரேனும் திரும்பிப் போனபிறகு சட்டென்று அவன் நினைவு பாப்கார்ன் மீது சென்றது. அதே சமயம் ஹிப்போ தனது பிரமாண்ட மான வாயைத் திறந்து கொட்டாவி விட்டது.

கோபிக்கு என்ன தோன்றியதோ! அவனது விளையாட்டுக் குணம் தலைதூக்கவே, தன் கையிலிருந்த பாப்கார்னில் ஒரு பிடி எடுத்துக் குட்டை நீரில் உள்ள ஹிப்போவின் பக்கம் வீசினான். வெள்ளை வெளேர் என்ற சோளப் பொரி கறுப்பு நீரில் மிதந்தது. அது ஹிப்போ வின் கவனத்தைக் கவர்ந்தது. மிதக்கும் சோளப் பொரிகளைச் சாப்பிடத் தன் நிலையிலிருந்து நகர்ந்து வந்தது ஹிப்போ. எல்லாருடைய விழிகளும் வியப்பினால் விரிந்தன. கோபி இன்னொரு கையை அள்ளி வீசினான்.

'க்ளப் சலப்' ஹிப்போ சோளப் பொரிகளை விழுங்கியபடியே கரையோரமாக வந்தது. கோபி மீண்டும் ஒரு பிடி அள்ளிக் கரைமீது புல்தரையில் வைத்தான். கரம் மசாலா பாப்கானின் ருசி கண்ட நீர் யானை, நீரிலிருந்து வெளியேறிப் புல்தரைக்கு வந்தது. சர்க்கஸ் மானேஜருக்கு வியப்பான வியப்பு.

''பலே, பலே! பையா இவ்வளவு சுலபமாக, எங்கள் ஹிப்போவை வெளியேற்றி விட்டாயே!'' என்று அவனைத் தூக்கிக் கொண்டு கூத்தாடினார்.

கோபியின் கையிலிருந்த பாப்கார்ன் பை காலி! ஹிப்போ, 'இன்னும் இல்லையா?' என்பது போலத் தலையை நிமிர்த்திப் பார்த்தது. மறுபடியும் அது குட்டைக்குள் ஓடிவிடப் போகிறதே என்று பயந்து விட்டார் அந்தச் சர்க்கஸ் மானேஜர்.

''தம்பி! பாப்கார்னைக் காட்டியே இதை எங்கள் கூடாரத்துக்குக் கூட்டிக்கொண்டு போய்விடலாம் போலிருக்கிறதே. ஆனால், அதற்கு ஏராளமான பாப்கார்ன் தேவைப் படுமே. நீ எங்கிருந்து இதை வாங்கி வந்தாய்?'' என்றார்.

''கவலைப்படாதீங்க... ராவுத்தர் கடையிலே நிறைய இருக்கு. வாங்க, நான் வாங்கித் தருகிறேன்,'' என்றான் கோபி.

அடுத்த சில விநாடிகளில் சர்க்கஸ் கம்பெனியின் கார் ராவுத்தர் கடைக்கு கோபியோடு விரைந்தது. அங்கிருந்த அத்தனை பாப்கார்ன் பாக்கெட்டுக்களையும் அள்ளிப்போட்டுக் கொண்டு குட்டைக்குத் திரும்பியது.

ருசிமிக்க பாப்கார்ன் கிடைக்காததால், குளிர்ந்த குட்டைக்குத் திரும்ப முயன்று கொண்டிருந்த ஹிப்போவின் முன்னால் பாப்கார்ன் பாக்கெட்டுகளை உடைத்துக் கொட்டினான் கோபி. ஆசையோடு திரும்பியது ஹிப்போ.

இப்படியே நிறைய பாப்கார்ன் பாக்கெட்டு களைக் காலி செய்தே தன்னைப் பின்தொடர வைத்துச் சர்க்கஸ் கூடாரத்துக்குள், ஹிப்போவுக்காக அவர்கள் வேலியிட்டு அமைத்திருந்த குட்டைக்குள், கொண்டு வந்துவிட்டான் கோபி.

கோபியை எல்லாரும் பாராட்டோ பாராட்டு என்று பாராட்டினர்.

சர்க்கஸ் மானேஜர், ''தம்பி, இன்றுதான் சர்க்கஸ் ஆரம்பம். எங்கள் முக்கிய அயிட்டங்களில் ஹிப்போவும் ஒன்று. அது இப்படி ஓடிவிட்டதே என்று ரொம்பக் கவலைப்பட்டு போனேன், நல்லவேளை! உன் சமயோசிதமான செய்கையால் கவலை தீர்ந்தது. நீ தினமும் சர்க்கஸ் பார்க்க வந்துவிடு. உனக்குக் கட்டணம் கிடையாது,'' என்று அவன் இரு கைகளிலும் மீதமிருந்த இரண்டு பாப்கார்ன் பாக்கெட்டுக்களைக் கொடுத்து நன்றி கூறி அனுப்பினார்.

ராவுத்தருக்குத் தம் சரக்குகளெல்லாம் நொடியில் விற்றுப் போனதில் மகிழ்ச்சி.

வாத்துக்களுக்குக் குட்டையை ஆக்கிரமிப்புச் செய்த ஹிப்போ போனதில் மகிழ்ச்சி. இறகுகளை விரித்து நீர்மீது பறந்தபடி, ஒன்றையொன்று, துரத்திப் பிடித்து விளையாடின 'க்வாக், க்வாக்' ஒலியோடு.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us