
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பச்சை நிறமே... பச்சை நிறமே...!
ஆடு, மாடு மாதிரி ஏன் எப்பவும் இலையும் தழையுமா தின்னுக்கிட்டு இருக்கே என்று உங்களை யார் கிண்டலடித்தாலும் காதில் போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால் பீன்ஸ், பாகற்காய் போன்ற பச்சை நிற காய்கறிகளிலும், கீரை வகைளிலும் உள்ள 'பைட்டோ- கெமிக்கல்ஸ்' நம்முடைய கண்களில் வரக்கூடிய பலவிதமான பிரச்னைகளையும், முக்கியமாக கேன்சரையும் தடுக்க கூடியது! அதிலும் குறிப்பாக, பிரக்கோலியிலுள்ள (பச்சை நிற காலிப்ளவர்) 'சல்போரபேன்' நம் உடம்பில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திவிடும். அதோடு எல்லா வகை கேன்சர்களையும் அடித்து விரட்ட கூடிய ஒரே சூப்பர் மேன் பிரக்கோலிதான்!
அந்த பழத்தின் பெயரில் 30 இருக்கும்!
ஆல்பா கரோட்டீன்... பீட்டா கரோட்டீன்... இதெல்லாம் ஏதோ வெளிநாட்டு பெண்களின் பெயர் கிடையாதுங்க... நம்ம உடம்புக்கு தினமும் தேவைப்படுகிற சத்துக்கள்தான். இந்த சத்துக்கள் மற்ற காய்கறி, பழங்களை விட ஆரஞ்சு நிறமுள்ள கேரட், பப்பாளி, பூசணி போன்று காய்கறி மற்றும் பழங்களில்தான் நிறைந்து காணப்படுகின்றன. ஆரஞ்சு வண்ண காய்கறி மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அதிலுள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன் கேன்சர் வராமல் தடுக்கும். தினமும் ஒரு கப் பப்பாளி பழம் சாப்பிட்டு வர உங்களுக்கு தேவையான சி-யும் உடம்பில் ஏற்படும் புண்களையும் சீக்கிரம் ஆற்றும்.
தேவையற்றதை நீக்கும் பிரவுன்!
உடம்பிலுள்ள கழிவு பொருட்கள் சரியாக வெளியேறவில்லையென்றால், அதெல்லாம் விஷமாக நம் உடம்பிலேயே தங்கிவிடும். இந்த விஷத்தை விரட்டுவது நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் பிரவுன் பிரட் போன்ற உணவு பொருட்கள்தான். நார்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கழிவு பொருட்கள் முறையாக வெளியேறும்.இதனால் சருமம் பளிச் சென்று ஆகும். அதோடு தானியங்களிலுள்ள வைட்டமின்-பி உங்கள் எனர்ஜி ரேட்டையும் அதிகப் படுத்தும்.
ஐ-க்கு குட் ரெட்!
இரவிலும் கண்கள் பளிச்சினு தெரியணுமா?
அப்படின்னா நீங்க தக்காளி, கெட்சப், ஜுஸ், ஸ்ட்ரா பெர்ரி போன்ற சிவப்பு நிற பழங்களை நிறைய சாப்பிடணும். அதோடு இதிலுள்ள 'லைகோபென்' பெண்களை மட்டும் அச்சுறுத்தும் ஒரு வகை புற்றுநோயையும் வரவிடாமல் தடுக்க கூடியது. சிவப்பு நிறமுள்ள பழங்களில் குறிப்பாக ஸ்ட்ராபெரியிலுள்ள 'ஆன்தோசினானின்ஸ்' இரவில் கூட தெளிவாக பார்க்க கூடிய அளவுக்கு கண்களின் நரம்புகளை வலுவாக்கும். அதனால் சிவப்பு நிற பழங்களுக்கு நோ சொல்லாதீங்க. குறிப்பாக, எப்பவும் கிடைக்கும் எளிதாய் கிடைக்கும் தக்காளிக்கு வெல்கம் சொல்லுங்க.
ஊதா.. ஊதா... கேன்சருக்கு கல்தா!
லங் கேன்சர் என்னும் வில்லன் பார்த்து பயப்படும் ஒரு ஹீரோ யார் தெரியுமா?
ஊதா நிறம்... ஸாரி... ஊதா (பர்ப்பிள்) நிறத்திலுள்ள காய்கறிகள்தான். இந்த நிற காய்கறிகளான கத்தரிக்காய், பீட்ரூட், ஊதா முட்டைக்கோஸ் போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள, 'லங் கேன்சர்' வருமோ என்ற பயமே தேவையில்லை.
மொத்தத்தில் உங்கள் உணவில் பிரவுன், சிவப்பு, ஊதா என்று கலர் கலராக உணவு பொருட்களை சேர்த்து கொண்டால், எல்லா விதமான கேன்சருக்கும் குட்பை சொல்ல முடியும்.
உடனடி எனர்ஜி வேணுமா?
எல்லா வயதினருக்கும் சக்தி தேவைப்படுகிறது. நன்கு படிக்க, கடுமையாய் வேலை செய்ய, சிறப்பாய் உழைக்க சக்தி தேவைப் படுகிறது. சிலசமயம் உடனடியாக சக்தி தேவைப்படுகிறது. நல்ல உணவை உட்கொள்வது நம்மை எப்போதும் சக்தியுடன் வைத்திருக்கும். இன்ஸ்டன்ட் அதாவது உடனடியாக சக்தி பெற வேண்டும். அதற்கு இதோ ஒரு டிப்! அன்னாசிப்பழத்தின் மூன்று துண்டுகளை எடுத்து கொள்ளுங்கள். அதோடு ஒரு வாழைப்பழம். அப்புறம், பிரஷ்ஷான 6 ஸ்ட்ராபெர்ரி மற்றும் முளைவிட்ட கோதுமை ஒரு கைப் பிடி. இவை நான்கையும் ஜுஸாக்கி 'டல்'லாக பீல் செய்யும் நேரத்தில் குடித்து வந்தால், உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைத்து உடனடி சுறுசுறுப்பு அடைவீர்கள்!
உதடு கறுப்பா?
சிலருக்கு உதடுகள் கறுப்பாக இருக்கும். அதனை சிவப்பாக்க நினைப்பர். அம்மா அல்லது அப்பாவுக்கு உதடுகள் கருப்பாக இருந்தால், அவர்களின் பிள்ளைகளின் உதடுகள் சிவப்பாக வழியே இல்லை. அது பரம்பரை. அப்படி இல்லாத மற்றவர்கள் தேனை உதடுகளில் பூசி ஒரு மணி நேரங்கழித்து தண்ணீரில் கழுவி வந்தால் உதடுகள் சிவப்பாகும். இதே போல் பீட்ரூட் சாறை உதடுகளில் அப்ளை செய்து பதினைந்து நிமிடத்திற்கு பிறகு கழுவலாம். வாசலினையும் உதடுகளில் அப்ளை செய்யலாம். அல்லது வாசலினை கலந்த சாப்ஸ்டிக்கை வாங்கி உதடுகளில் பூசினாலும் நல்ல நிறம் கிடைக்கும். பச்சை பசேலென இருக்கும் கொத்தமல்லியை பற்களில் கடித்த சாறு உதடுகளில் படுமாறு செய்தாலும் நல்லதுதான்.
அம்மா ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது, 'வெல்லத்தில் பாதுஷா' செய்முறை நேரம்.
தேவையானவை: மைதா மாவு - 500 கிராம், பால் -அரை லிட்டர், தூள் வெல்லம்-500 கிராம், நெய்- 100 கிராம், உப்பு - 1 சிட்டிகை, பொரிப்பதற்கு-டால்டா தேவையான அளவு, கொப்பரை துருவல்- 2 ஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் உள்ள பாலை விட்டு, அத்துடன் தூள் வெல்லம், உப்பு, ஒரு ஸ்பூன் நெய் விட்டு, அவற்றுடன் மைதா மாவை கலந்து கெட்டியாக பிசையவும்.
கலந்த மைதா மாவு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து டால்டா வுடன் சிறிது நெய் கலந்து ஊற்றி, காய்ந்தவுடன் மைதா உருண்டையை, மெல்லிய வடையாக தட்டி, நடுவில் சுண்டு விரலினால் சிறிது அழுத்தி போட்டு, எண்ணெயில் பொன் நிறத்தில் இரு பக்கமும் பொரித்தெடுக்கவும்.ஒரு தாம்பாளத்தில் பொரித்த வெல்ல பாதுஷாக்களை பரப்பி வைத்து கொப்பரை துருவல் தூவி அழகுப்படுத்தவும்.
திகட்டாத 'வெல்ல பாதுஷா' சாப்பிட தயார்.
குட்டீஸ்... அம்மாவை தித்திப்பாய் பாராட்டி கொண்டே பாதுஷாவை உஷார் பண்ணிடுங்கள்!
என்றும் அன்புடன், அங்குராசு.