
அது ஓர் ராணுவப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்தில் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். பயிற்சி பெறும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஓடி ஆடி விளையாட வேண்டுமென்பது அவர்களது ஆசை. ஆனால், பள்ளிக்கூடத்தைச் சுற்றி எங்கு பார்த்தாலும் ஒரே பனியாயிருக்கும். பாறை பாறையாய்ப் பனிக் கட்டிகள் உறைந்திருக்கும். ஆகையால், அவர்கள் விளையாட முடியவில்லையே... என்று ஏங்குவர்.
அவர்களது ஏக்கத்தை அறிந்தான் புதிதாக அங்கு வந்து சேர்ந்த ஒரு மாணவன். உடனே, 'இதற்கு என்ன செய்யலாம்?' என்று யோசித்தான். சிறிது நேர யோசனைக்குப் பின், ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவுப்படி மற்ற மாணவர்களை அழைத்துக்கொண்டு பனிப்பாறைகள் நிறைந்திருக்கும் ஓர் இடத்திற்குச் சென்றான். அவர்களுடன் சேர்ந்து பனிக்கட்டிகளால் அங்கேயே ஓர் அரண் ஏற்படுத்தினான். பிறகு என்ன செய்தான் தெரியுமா?
நண்பர்களில் பாதிப்பேரை அரணுக்கு அந்தப் பக்கத்திலும், பாதிப்பேரை இந்தப் பக்கத்திலும் நிற்க வைத்தான். பிறகு, இந்தப் பக்கத்தில் நிற்போரைப் பார்த்து, ''தோழர்களே, நீங்கள்தான் எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும், தெரியுமா? இந்த அரணைத் தாக்க வேண்டும்,'' என்றான்.
அதே சமயம், அந்தப் பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, ''நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எதிரிகள் அரணைத் தாக்காதபடி தடுத்துக் காக்க வேண்டும். அது மட்டுமல்ல... அவர்களைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்யவும் வேண்டும். சரிதானா... ம் நடக்கட்டும் யுத்தம்!'' என்று முழங்கினான்.
அவ்வளவுதான், இரு சாராரும் யுத்தத்தில் இறங்கி விட்டனர். வெகு மும்முரமாக யுத்தம் நடந்தது.
அந்தப் போலி யுத்தத்தைப் பார்க்க சுற்றுப் புறத்திலுள்ள மக்களெல்லாம் வந்து கூடி விட்டனர். அவர்கள், யுத்தம் செய்யும் முறையைத் திறமையாகக் கற்றுக் கொடுத்த அந்த மாணவனைப் பாராட்டினர்.
'இவன் இவ்வளவு சிறியவனாக இருக்கிறான்! இந்த வயதிலேயே போர் நடத்தும் முறையை மிகவும் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறானே!' என்று கூறி வியந்தனர்.
அதே மாணவன் ஒரு காலத்தில் மிகமிகப் பெரிய வீரனாக விளங்குவான் என்றோ, ஐரோப்பாக் கண்டத்தை ஆட்டி வைப்பான் என்றோ, அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. உருவத்தில் குள்ளமான அந்த நபரை உங்களால் யூகிக்க முடிகிறதா?
விடை: அந்த வீரர், மாவீரன் நெப்போலியன். அவர் பெயரை கேட்டாலே பெரிய அரசர்கள் கூட நடுங்குவர்.