
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
வாலை விட வாலுகளாலே ஆபத்து!
பூமிக்கு ஆபத்து, பூமியின் மீது மோத வால் நட்சத்திரம் வரப்போகிறது. அதனால் பூமி காலி' என்பது போன்ற செய்திகளை படித்திருப்போம்.
ஆனால், உண்மையிலேயே பூமியின் மீது ஏதாவது ஒரு வால்நட்சத்திரம் மோதுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
அப்படியே மோதி னாலும் பூமி அழிந்து விடுமா?
பூமியை சுக்குநூறாக ஆக்குவதற்கான திறனுடன் விண்வெளியில் லட்சக்கணக்கான வால் நட்சத்திரங்கள் தொடர்ந்து சுற்றி வந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், நல்லவேளையாக, பூமி மீது மோதினால் மிகவும் பயங்கரமான பாதிப்புகளை உருவாக்க கூடிய மிகப்பெரிய வால் நட்சத்திரங்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளன.
பூமியில் இருந்து டைனோசர்களை ஒட்டு மொத்தமாக அழித்த பிரமாண்ட வால்நட்சத்திரங்களை போன்ற வால்நட்சத்திரங்கள் 10 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூமியின் தலையில் வந்து விழ வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட சிறிய விண்கற்கள் பூமியின் மீது அன்றாடம் விழுந்து வந்தாலும் (மாலை-இரவு நேரங் களில் இவை விண்வெளியில் உரசி வரும் போது எரிந்து தூள்தூளாவதை பார்த்திருக் கலாம்) 100 மீட்டர் சுற்றளவு கொண்ட பிரமாண்ட வால் நட்சத்திரங்கள் பெரும் பாலும் மக்கள் வாழாத பகுதிகள் அல்லது கடல்களில் விழுந்து விடுகின்றன.
சைபீரியாவில் உள்ள டுங்குஸ்கா காட்டு பகுதியில் 1908ம் ஆண்டு ஏற்பட்ட வெடிப்பு நிகழ்வில் சுமார் 2,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள காடுகள் தரைமட்டமாகின.
சிறிய விண்கல் அல்லது வால்நட்சத்திரம் வானில் வெடித்து சிதறியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது.
பூமியின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப் பெரிய விண்கல், வால் நட்சத்திர வெடிப்பு நிகழ்வு இது.
அதேநேரம் வால் நட்சத்திரம் தலையில் விழுந்து நாமெல்லாம் இறந்து போவதற்கான வாய்ப்பு என்பது, ஒரு சாலையில் நடந்து செல்லும்போதோ, வண்டி ஓட்டி செல்லும் போதோ இறப்பதற்கான வாய்ப்பை விட மிக மிக குறை வானதே என்பது வானியலாளர்களின் கணிப்பு.
வானத்து 'வால்'களால் ஆபத்து கம்மி தான். பூமியில் 'பைக்-கார்' கிடைத்தால் அதில் வாலுத்தனங்கள் செய்து போக்குவரத்து விதிகளை மீறும் வாலுகளால்தான் பெரிய ஆபத்து என்பதை சொல்லவும் வேண்டுமோ?
திருட்டில் மொழி பயன்பாடு!
திருட்டு, கொள்ளை என பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் படிக்க, கேட்க நிகழ் கிறது. இந்த இரண்டு சொற்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு பலருக்கும் தெரிவதில்லை.
பறிகொடுத்தது ஒரு பெரிய தொகை அல்லது கிலோ கணக்கில் நகைகள் என்றால் அது கொள்ளை என்றும், தொகையோ, நகையோ குறைவாக இருந்தால் அது திருட்டு என்றும் நினைக்கிறோம். அப்படி கிடையாது.
உங்கள் வீட்டில் உங்களுக்கு தெரியாமல் நுழைந்து, கோடி ரூபாயை அடித்து சென்றாலும் அது திருட்டுதான். அதே சமயம், உங்களுக்கு தெரிந்து நீங்கள் எதிர்க்கும் பட்சத்தில் வன்முறை மூலம் ஒரே ஒரு ரூபாயை அடித்து சென்றாலும் அது கொள்ளைதான்.
சாலையில் போகிறபோக்கில் உங்களிடம் அடித்து சென்றால் அது வழிப்பறி.
தொடர்பான சில சொற்கள்:- களவு, ஜேப்படி திருட்டு, ஜேப்படி திருடன், அபகரித்தல், களவாணி, திருடன், திருடி, கொள்ளையன்.
பாதிக்கப்பட்டவர்கள், 'போயே போச்சு' இதுல பெயரில் என்ன போச்சு என்று அலுத்து கொள்வது நியாயம்தான். ஆனால், ஆழ்ந்து பார்க்கும்போது, நாம் அன்றாடம் பயன்படுத் தும் முறையின் தவறும் மொழியின் உண்மை பயன்பாடும் விளங்குகிறது அல்லவா!
எல்லாம் வவுத்துக்காகதான்!
இந்தோனேஷியாவின் அருகே உள்ள மலுகு (மிளகு-இல்ல) தீவு கடலில் ஒரு புது விதமான சுறா மீன் அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இது கடலின் தரைப்பகுதியில், நாலு செதில் களையும் நான்கு கால் களை போல் பயன் படுத்தி நடந்து செல்கிறது.
இரை தேடும் போது, இத்தகைய தந்திரத்தின் மூலம் மற்றவற்றை ஏமாற்றிவிடும். திடீருன்னு ஒரு நாள் சிங்கம், புலி எல்லாம் தண்ணீல சும்மா ராஜா கணக்கா நடக்கப் போகுது பாருங்க!
இல்ல... ஆனா இருக்கு!
க்ராண்ட் கேன்யான் ஒரு மிகப்பெரிய அடுக்கு பாறைகளினால் ஆன ஒரு பள்ளத் தாக்கு. கொலராடோ நதியின் அரிப்புகளால், பல்லாயிரம் வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் உருவானது.
இப்போது க்ரீன்லாந்தில் பனிப் பாறை களுக்கு அடியில் மிகப் பெரிய பள்ளத்தாக்கு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
வெளியே தெரியாவிட்டாலும் ராடார் மூலம் இது அறியப்பட்டுள்ளது. விஞ்ஞானம் எப்படி எல்லாம், 'மாயாபஜார்' வேலை காட்டுது!
அதோடு சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம் போன்ற பயங்கரவாதிகள் தாக்குவதை மிக முன் கூட்டியே விஞ்ஞானம் அறிய வேண்டும். அந்த வித்தை கை வந்தால் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை தடுக்கலாம்!
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது, 'கத்திரிக்காய் மசாலா குழம்பு' செய்முறை நேரம்.
தேவையானவை: பிஞ்சு கத்தரிக்காய் -1/4 கிலோ, மிளகாய்ப் பொடி, கசகசா- தலா 2 டீஸ்பூன், தனியா-3 டீஸ்பூன், சோம்பு, கடலைப் பருப்பு - தலா 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1 கப், லவங்கம் -6, லவங்கப்பட்டை, மராட்டி மொக்கு தலா -1, ஏலக்காய்-4, புளி- எலுமிச்சை அளவு, எண்ணெய், உப்பு, கறிவேப் பிலை, கடுகு தேவைக்கு.
செய்முறை: கத்தரிக்காய் காம்பை நீக்கி நாலு துண்டாக பிளந்து எண்ணெயில் நன்கு வதக்கி கொள்ளவும்.
தனியா, சோம்பு, கடலைப் பருப்பு, கசகசா, தேங்காய் துருவலை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து விழுதாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு லவங்கம், லவங்கப் பட்டை, மராட்டிமொக்கு, ஏலக்காயைப் போட்டு வறுத்து, புளி கரைசல், உப்பு, கத்தரிக்காயை சேர்த்து கொதிக்கவிடவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள விழுது, மிளகாய்ப்பொடியை சேர்த்து சிறிது கொதித்ததும் தாளித்து பரிமாறவும்.
கத்தரிக்காய் என்றால் ஓடுபவர்கள் உண்டு. அவர்களை வசியம் செய்து வாயார-வயிறார உண்ண செய்துவிடும் இந்த பஞ்சு போன்ற பிஞ்சு கத்தரிக்காய்கள்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.