
ஒரு காட்டில் ஏரிக்கரையோரமாக, தவளையானது வசித்து வந்தது. அதன் பெயர் சின்னா. அது எப்போதும் தனிமையில் வாழ்ந்து வந்தது.
தவளையோடு நட்பு வைத்துக்கொள்ள கொக்கு முயற்சித்தது. அதன் பின்னர், காகம் முயற்சித்தது. அதன் பின்னர், ஆமை முயற் சித்தது. ஆனால், தவளை யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளாமல் தனிமையிலேயே வாழ்ந்து வந்தது.
ஒருநாள் அந்த ஏரிக்கரை பக்கமாக கழுகு ஒன்று பறந்து வந்தது. அந்தக் கழுகானது சின்னா தவளையை பார்த்து விட்டது. 'கொழு கொழுவென்று இருக்கும் தவளையை எப்படி யாவது சாப்பிட வேண்டுமென்று' மனதுள் நினைத்தது கழுகு.
வேகமாக பறந்து சென்று தவளையை பிடிக்க முயற்சித்தது. ஆனால், தவளை கழுகின் பிடியில் இருந்து தப்பித்துத் தண்ணீருக்குள் நீந்தியபடி உயிர் பிழைத்துக் கொண்டது. இது கழுகிற்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
'நாம் தவளையைப் பிடிக்க வேண்டி கடினமாக முயற்சி செய்தும் கூட அது கிடைக் காமல் போய்விட்டதே. இதுவரைக்கும் நாம் இரையைப் பிடிக்கச் சென்று எந்த இடத்திலும் ஏமாந்தது இல்லை. இந்த ஏமாற்றமானது நமக்கு முதல் தடவை. நமக்கு ஏற்பட்டிருக்கிற இந்த ஏமாற்றத்திற்குத் தக்க பதிலடி கொடுத் தாக வேண்டும். எப்படியாவது நாம் தவளையைப் பிடித்தாக வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது.
ஒருநாள் கழுகானது தவளையைப் பிடிக்க என்ன செய்யலாம் என்ற யோசனையோடு ஏரிக்கரையின் மேலே பறந்து கொண்டிருந்தது. அப்போது ஏரிக் கரையில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கவனித்தது.
அந்தப் பாம்பைப் பார்த்ததும், கழுகின் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அந்தப் பாம்பின் உதவியோடு நாம் தவளையைப் பிடித்து விடலாம் என்று மனதில் நினைத்தது கழுகு.
உடனே வேகமாகக் கீழே பறந்து வந்து தன் கூர்மையான அலகினால் பாம்பைத் தாக்கத் தொடங்கியது. கழுகின் திடீர் தாக்குதலால் பாம்பு சற்றுத் தடுமாறியது.
''கழுகே என்னை ஒன்றும் செய்து விடாதே... நீ என்ன சொன்னாலும் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்,'' என்றது பாம்பு.
பாம்பு இவ்வாறு சொல்லாதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த கழுகானது, இதனைக் கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி யடைந்தது.
உடனே கழுகு, ''பாம்பே, நான் சொல்கிற படி நடந்து கொண்டால், என்னால் உனக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது,'' என்றது.
''கழுகே நீ என்ன சொன்னாலும் அதனை நான் கேட்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் சொல்,'' என்று கேட்டது பாம்பு.
''பாம்பே, இந்த ஏரிக்கரையில் சின்னா என்ற தவளை வசித்து வந்தது. அந்தத் தவளையை இரையாக்கிக் கொள்ள வேண்டு மென்று நான் முயற்சித்தேன். ஆனால், அந்தத் தவளையோ எனக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்திச் சென்றுவிட்டது. அந்தத் தவளை யோடு நீ நட்புக் கொள்ள வேண்டும். சமயம் பார்த்து அந்தத் தவளையை நீ எனக்குப் பிடித்துக் கொடுக்க வேண்டும்,'' என்றது கழுகு.
''சரி கழுகே என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி தெரியவில்லை. அதனால் நீ சொல்கிறபடி நான் நடந்து கொள்கிறேன்,'' என்றது பாம்பு.
அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தபடி பறந்து சென்றது கழுகு.
பாம்பு தவளையின் வருகையை எதிர் பார்த்துக் காத்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அங்கே தவளையும் வந்தது.
''சின்னா, சின்னா சற்று நில்!'' என்று கூறிக்கொண்டே தவளையை நோக்கிச் சென்றது பாம்பு.
தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத பாம்பானது தன் பெயரைச் சொல்லி அழைக்கிறதே... என்று வியப் படைந்தது தவளை. தைரியமாக பாம்பின் வருகைக்காகக் காத்து நின்றது.
''பாம்பே, உன்னை நான் இப்போதுதான் பார்க்கிறேன். நீ என்னுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறாயே,'' என்றது தவளை.
''தவளையே, உன்னோடு நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதனால்தான் உன்னுடைய பெயர் என்ன வென்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். நாம் இருவரும் நட்போடு பழகலாம்,'' என்று அன்போடு கேட்டுக் கொண்டது. அதனைக் கேட்ட தவளையோ சிறிது நேரம் யோசனை செய்தது.
'பாம்பே, நீ சொல்வது சரியாகுமா? நாம் இருவரும்தான் எதிரிகளாயிற்றே. எதிரிகள் எங்காவது நட்போடு பழக முடியுமா?'' என்று கேட்டது தவளை
''தவளையே, ஏன் பழக முடியாது? எல்லாவற்றிற்கும் மனம் ஒன்றுதான் காரண மாக அமைக்கிறது. மனம் மட்டும் தெளி வாகவும், அன்பாகவும் இருந்தால் யாரும், யாருடனும் நட்பு வைத்துக் கொள்ளலாம். அதில், எந்தவிதமான மாற்றமும் இல்லை,'' என்றது பாம்பு.
பாம்பு சொன்ன கருத்தை தவளையும் ஏற்றுக்கொண்டது.
''பாம்பே, இது வரையிலும் நான் யாரிட மும் நட்பு வைத்துக் கொள்ளவில்லை. ஆனால், இப்போது உன்னோடு நட்பு வைத்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்குக் காரணம், நீ உன் மனதில் தோன்றிய கருத்தினை தெள்ளத் தெளிவாக என்னிடம் கூறிவிட்டாய். அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் உன்னோடு நட்பு வைத்துக் கொள்கிறேன்,'' என்றது தவளை.
அதனைக் கேட்டதும், பாம்பு மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
'நாம் எளிதில் கழுகின் விருப்பத்தை நிறைவேற்றி அதனிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்' என்று மனதில் நினைத்துக் கொண்டது பாம்பு.
''நண்பா சின்னா! இந்த நாளை நான் இனிய நாளாக நினைக்கிறேன். உன்னைச் சந்தித்து உன்னோடு நட்புக் கொண்ட இந்த நாள் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட நாம் இருவரும் ஏரிக்கரையைச் சுற்றி வருவோம்,'' என்றது பாம்பு.
''நண்பா, உனது விருப்பத்தை நிறை வேற்றுவது என்னுடைய கடமை. நாம் இருவரும் இதோ இப்போதே ஏரிக் கரையைச் சுற்றி வரலாம்,'' என்று பாம்போடு கிளம்பியது தவளை.
பாம்பும், தவளையும் ஏரிக்கரையில் ஒரு பகுதியில் சென்று கொண்டிருந்தன. அந்த நேரத்தில் கழுகானது மேலே வட்டமடித்துக் கொண்டு கீழே பாம்பு எப்போது தவளையைப் பிடிக்கப் போகிறது என்பதை கவனித்துக் கொண்டிருந்தது.
மேலே வட்டமடித்தபடி பறந்து கொண்டி ருக்கும் கழுகின் நிழலானது, கீழே தரையில் விழுந்தது. கழுகின் நிழலைத் தவளை கவனித்தது.
ஏற்கெனவே, கழுகின் பிடியில் இருந்து தப்பித்த தவளைக்கு பாம்பின் மீது சந்தேகம் எழுந்தது.
'இந்த பாம்பானது கழுகின் கட்டளைக்கு உட்பட்டு நம்மைக் கழுகிடம் சிக்க வைக்க அழைத்து வருவது போன்று தெரிகிறதே. நண்பன் என்று கூறி நம்மை ஏமாற்றி நம்பிக்கைத் துரோகம் செய்கிற பாம்பிற்கு நாம் சரியான பாடம் புகட்ட வேண்டும்' என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டது. உடனே அது ஆழ்ந்த யோசனையோடு பாம்பைப் பின்தொடர்ந்தது.
கழுகோ தவளையை தன் வாயினால் கவ்விப் பிடிப்பதற்கு தக்க நேரத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் தவளை பாம்பை நோக்கியது.
''நண்பனே, நாம் அதோ அந்த ஏரிக் கரையின் வேலியோரமாகச் செல்லலாம். வேலியைச் சுற்றி மரங்களில் இருந்து குளிர்ந்த காற்றானது நம் மீது வீசும். அந்தக் குளுமையான சுகத்தை நாம் அனுபவிக் கலாம்,'' என்றது.
'இன்னும் சிறிது நேரத்தில் நீ <உயிரை விடப் போகிறாய். அதற்குள் உனக்கு குளுமை கேட்கிறதா?' என்று தவளையைப் பார்த்து தனக்குள் கூறிக் கொண்டது பாம்பு.
பின்னர் தவளையின் வேண்டுகோளைத் தான் ஏற்றுக்கொண்டது போல் நடித்துக் கொண்டு வேலியோரத்தை நோக்கிச் சென்றது. தன் தலையை மேலே தூக்கியபடி கழுகைப் பார்த்த பாம்பு, தான் தவளையைப் பிடிக்கப் போகிறேன் என்பதைத் தன்னுடைய பார்வையால், கழுகிற்கு உணர்த்தியது.
கழுகும் கீழே இறங்கத் தயாரானது. அப்போது தவளை வேலியோரத்தை ஒட்டியபடி சென்று கொண்டிருந்தது. பாம்பு தன் வாயைப் பிளந்தபடி தவளையைப் பிடிக்கத் தயாரானது.
கழுகும் மின்னல் வேகத்தில் தவளையைத் தின்னும் ஆசை யில் பாம்பின் அருகே பறந்து வந்தது. அப்போது வேலியில் மறைந்திருந்த கீரியானது மின்னல் வேகத்தில் பாம்பின் மீது பாய்ந்தது. திடுக்கிட்ட பாம்போ, துள்ளிச் சுருண்டபடி வேலியின் மறுகரைக்குச் சீறிப் பாய்ந்தது.
பாம்பின் அருகே பறந்து தரையிறங்கிய கழுகின் கழுத்தானது கீரியின் வாயில் சிக்கிக் கொண்டது. பாம்பு கிடைக்காத ஆத்திரத்தில் கழுகின் கழுத்தைக் கடித்துத் துண்டாக்கியது கீரி.
தவளையோ அமைதியுடன் அங்கிருந்து தத்தி தத்திச் சென்றது.
'நம்மை கொல்ல எண்ணிய கழுகு ஒழிந்தது. பாம்புக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கீரிகள் வாழும் வேலியோரப் பகுதிக்கு அதனை அழைத்து வந்தேன். அதிர்ஷ்ட வசமாக அது தப்பித்துச் சென்றாலும், இனிமேல் அது இங்கு வந்து நமக்கு எந்தத் தொல்லையும் கொடுக்காது. அதனை அடிமைப் படுத்திய கழுகு ஒழிந்ததால் இனிமேல் நமக்கு எந்தக் கவலையுமில்லை' என்று மனதில் நினைத்துக் கொண்டபடி மகிழ்ச்சியுடன் சென்றது தவளை.
***