PUBLISHED ON : பிப் 21, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பர்ஸ்ட் ரேங்க் புடின்!
உலகின் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் புடின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போபர்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான பட்டியலில் சமீபத்தில் வெளியிடப்பட்டவர்களின் லிஸ்ட் இப்படி சொல்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக முதல் இடம் பிடித்திருந்த ஒபாமா, இந்த முறை பின்னுக்கு தள்ளப் பட்டுள்ளார்.
சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் திட்டத்தை தடுத்தது, ரஷ்யாவில் 13 ஆண்டுகள் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தியது, கடந்த 2012 மார்ச் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது என்ற வகையில் புடினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக போபர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், 4ம் இடத்தில் போப் பிரான்சிஸ், 5ம் இடத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலாக மெர்க்கெல் ஆகியோர் உள்ளனர்.
செல்வாக்கு மிகுந்தவர்களை தேர்வு செய்ய போபர்ஸ் பத்திரிகை இந்த ஆண்டு 72 உலக தலைவர்களின் பெயர்களை பரிசீலித்தது.
இதில் 13 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சாம்சங் நிறுவன தலைவர் லீ குன் ஹீ 41வது இடத்திலும், நைஜீரியா கோடீஸ் வரர் அலிகேர்டாங்கோடி 64வது இடத்திலும் உள்ளனர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி நிறுவன தலைவர்கள், கோடீஸ்வரர்கள் என பல தரப்பினரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் உலக அளவில் 9 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
மிருகம் பாதி - மனிதன் பாதி!
விலங்கின உந்துதல் என்பது எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிற அம்சம். இது முழுக்க நல்லதுமல்ல; முழுக்க கெட்டது மல்ல.
சிலர் விலங்கின் உந்துதல் குணத்துக்கு முக்கியத்துவம் தந்து, தங்கள் நலனை மட்டுமே பாதுகாத்து கொள்ள முயல்வர்.
சிலரிடம் விலங்கு குணத்தாக்கம் குறையும். அவர்கள் பிறர் நலனுக்காக தங்கள் நலனை விட்டுத் தரும்படி வளர்ந்திருப்பர். இன்னும் சிலர் விலங்கு குணத்தை முற்றாக கடந்து வந்து தெளிந்த நிலையை எட்டியிருப்பர். சராசரி வாழ்வில், சாதிக்கும் விருப்பத்தில் இருப்பவர்களுக்கு பிறர் நலனை மையப்படுத்தும் பெருந்தன்மை மிகவும் அவசியம்.
அதே நேரம், தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் விழிப்புணர்வும் அவசியம்.
தங்கள் நலனுக்காக பிறரை தாக்கும் விலங்கு நிலை, இரண்டுக்கும் இடைப்பட்டு தற்காப்புக்காக மட்டும், கட்டி வைக்கப்பட்ட நாயின் உறுமல் அளவே மிருக குணம் இருந்தால் போதும். ஓர் எல்லைக்கு பிறகு அந்த விலங்கை ஒழித்து விட்டு ஞானியாகலாம்.
அழகு முகத்திற்கு டிப்ஸ்!
*முகத்தில் பருக்கள் அதிகமிருந்தால் சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகியவற்றை அரைத்துப் பூசி வரலாம்.
* முகத்தை பால் தோய்த்த பஞ்சினால் துடைத்து வர, முகம் பளபளப்பாகும். அழுக்குகள் வெளியேறும். பன்னீரையும் பயன்படுத்தலாம்
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
