PUBLISHED ON : ஏப் 18, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
சந்திரனில் கிடைக்கும் மின்சாரம்!
சமீபத்தில் ஜப்பானின் புருஷிமாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் அங்கிருந்த அணு உலை வெடித்தது. இதை யடுத்து பொதுமக்கள் அணு <உலைகளுக்கு எதிரான போராட்டங்களை தொடங்கியதால் அவை படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், அந்த நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று வழிகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி இயற்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் ஒரு மிகப்பெரிய திட்டத்தினை அவர்கள் தயார் செய்துள்ளனர்.
சூரிய ஒளி குறிப்பிட்ட நேரம் மட்டுமே பூமியின் ஒரு பகுதியில் கிடைக்கிறது. வானிலை மோசம் அடையும் நிலையில் அதுவும் முழுமையாக இல்லை. இவற்றை கருத்தில் கொண்ட விஞ்ஞானி கள் சந்திரன் மீது விழும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து அதனை பூமிக்கு கொண்டு வர முடிவு செய்தனர்.
அதன்படி, சந்திரனின் மத்திய ரேகை பகுதியைச் சுற்றிலும் சோலார் பேனல் களை வைத்து, அதன் மூலம் சூரிய மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானின் ஷிமிஷீ கார்பரேஷன் என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதற்கு 'ஜனாரிங்' என்று பெயரும் சூட்டி உள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயார் செய்து பூமிக்கு கொண்டு வர முடியுமாம். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் மின்சாரம் ஆகும். அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளில் ரோபோக்களை பயன்படுத்த உள்ளனர். அவை சந்திரனில் சோலார் பேனல்கள் மற்றும் மின்கலன்களை அமைக்கும். இதன்படி மின்சாரம் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கும் வகையில் சந்திரனின் மத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கிலோ மீட்டர் பரப்பளவில் 400 கிலோ மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப் பட உள்ளன. இதன் மூலம் தயார் செய்யப்படும் மின்சாரம் மைக்ரோ வேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிஷன் நிலையங்களில் இணைக்கப் பட்டு, 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆன்டெனாக் கள் மூலம் பூமிக்கு வந்து சேரும் என்று கூறு கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது என்று கூறுவர். அது உண்மைதான் போலிருக்கிறது. அதிலும் ஜப்பான் முன்னணியில் உள்ளது.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
நம் எல்லாருக்கும் பிடித்தவைகளில் மசாலா பாலிற்கும் இடமுண்டு.
கடைகளில் பெரிய சட்டி வைத்து மணக்க மணக்க மஞ்சள் நிறத்துடன், ஆடை அணிந்து இருக்கும் மசாலா பாலை வீட்டிலேயே செய்யலாம்.
தேவையானவை: பால்-500 மி.லி., சர்க்கரை - 50 கிராம், பாதாம், முந்தரி, பிஸ்தா - தலா 10, குங்குமப் பூ - 4 இதழ்கள், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பாதாம் பருப்பை வெந்நீரில் ஊறப் போட்டு, தோல் நீக்கவும். பாதாம், முந்திரி, பிஸ்தா... இவற்றை சிறிதளவு பால் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். பாலை சூடாக்கி, பொங்கி வந்ததும் அரைத்த விழுது, சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப் பூ சேர்த்து கலந்து தீயை நிறுத்தி, ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும். இந்த மசாலா பாலை மிதமான சூட்டுடன் பரிமாறலாம். நன்கு ஆற வைத்து ப்ரிட்ஜில் குளிர வைத்துப் பரிமாறலாம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
