PUBLISHED ON : மே 02, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
குடிக்கலாமா - கூடாதா?
ஒரு காலத்தில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்றார்கள். இப்போது தண்ணீர் நிறைய குடிப்பதால் அதிகமாக வேலை செய்து சிறுநீரகம் பாதிக்கும் என்று சொல்கின்றனர்.
பிறந்த குழந்தைக்கு ஒரு நாளில் 200 மில்லி சிறுநீர் வெளியேறினாலே போதும். வளர்ந்த மனிதனுக்கு ஒன்றரை லிட்டர் முதல் 2 லிட்டர் சிறுநீர் வெளியேறினால் சரியான அளவு என்று அர்த்தம். சிலர் ஏழு, எட்டு மணி நேரம் கூட தண்ணீர் குடிக்காமல் இருப்பர்.
இதனால் வெளியேற வேண்டிய கழிவு சரியாக வெளியேறாமல், 'யூரினரி இன்பெக்ஷன்' வந்து எரிச்சல் ஏற்படும். வேறு சிலர் காலையில் எழுந்ததும் சொம்பு சொம்பாக தண்ணீர் குடிப்பர். அதுவும் போதாதென்று எந்த நேரம் பார்த்தாலும், லிட்டர் கணக்கில் தண்ணீரை உள்ளே தள்ளுவர்.
எவ்வளவு சிறுநீர் வந்தாலும் சுலபமாக வெளியேற்றும் இதயம் மற்றும் சிறுநீரகம் வாய்த்தவர்கள் இப்படி நிறைய தண்ணீர் குடிக்கலாம். ஆனால், இதயம் பழுதானவர்களும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும் கண்டிப்பாக இப்படி தண்ணீர் குடிக்கக் கூடாது. இந்த கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் நிறைய 'பம்ப்' செய்ய வேண்டியது வரும். வியர்க்காத வேலை எந்த நோய், நொடியும் இல்லாதவர்களுக்கு ஒரு நாளில் இரண்டு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுப்பது தான். இது நமது உடம்புக்கு தேவை இல்லாததும் கூட.
இப்படி எக்கச்சக்கமாக தண்ணீர் குடிப்பதை மனநோய் என்று கூறுகின்றனர். இதற்கு தண்ணீரை நிறைய குடித்தால் உடம்பு சுத்தமாகி விடும். ஒல்லியாகி விடலாம் என்ற இவர்களது மூட நம்பிக்கையே காரணம். அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவர்கள் பற்றித்தான் இப்படி சொல்லப்படுகிறது. மற்றபடி காலையில் எழுந்து அளவாய் தண்ணீர் குடிப்பது உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது.
நாம் குடிக்கும் நீரின் அளவை விட கூடுதலாக சிறுநீர் வெளியேறினால் நமது உடலில் உள்ள நீர்ச்சத்தும் சிறுநீரோடு சேர்ந்து வெளியேறுவதாக அர்த்தம். இது உடலை உருக்கிவிடும். எப்படிப்பட்ட திடகாத்திரமான மனிதரும் ஒல்லியாக மாறிவிடுவர். இதனால் சிறுநீர் அதிகமாக வெளியேறினால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'இது ஜவ்வரிசி கட்லெட்' செய்முறை நேரம்.
தேவையானவை: ஜவ்வரிசி- அரை கப், ரவை-2 டீஸ்பூன், கார்ன் பிளேவர்- 1 டீஸ்பூன், அவல்-4 டீஸ்பூன், உருளைக் கிழங்கு - 2, பிரெட் துண்டுகள் - 4, பெருங்காயம் - கரம் மசாலா - மஞ்சள் பொடி - உப்பு, மற்றும் காரப்பொடி தேவைக்கேற்ப.
எப்படி செய்வது: முதலில் ஜவ்வரிசி, அவல், ரவையை தனித்தனியே பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரிக்கவும். ரவை ஊறியதும் தண்ணீரை இழுத்து கொள்ளும். ஜவ்வரிசி, அவலை நன்கு பிழிந்து ரவை யோடு சேர்த்து வாயகன்ற பாத்திரத்தில் போட வேண்டும்.
பின்பு அதில் பிரெட் துண்டுகள், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயம், கரம் மசாலா, காரப்பொடி, கார்ன் பிளேவர் சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும். இதை விரும்பிய வடிவத்தில் கட்லெட் களாக செய்து தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு எடுக்கவும். சத்துக்கள் நிறைந்ததோடு ஜவ்வரிசி முத்து முத்தாக கண்ணை கவரும் வகையில் இருப்ப தால் குழந்தைகள் அடம் செய்யாமல் இதனை விரும்பி உண்ணுவர்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு
