PUBLISHED ON : மே 16, 2014

வாழ்வில் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பட்டுபட்டு உருளைக்கிழங்கு!
உணவு பழக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. ஒருவர் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் இன்னொருவருக்கு பிடிக்காமல் போவதுண்டு. ஆனால், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கோ அதிசயமான உணவு பழக்கம் இருக்கிறது. அங்குள்ள வெல்லிங் பர்க் நகரில் வசிக்கும் கிளாரி ஜோன்ஸ் (வயது 23) என்ற பெண்ணுக்கு அவரது குழந்தை பருவத்தில் இருந்தே சாதாரண உணவின் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டு விட்டது.
இவருடைய முழு பசியையும் போக்கும் உணவு எது வென்றால் உருளைக்கிழங்குகள் தான். உருளைக் கிழங்குடன் பாலாடைக் கட்டியை சேர்த்து உணவு தயாரித்து சாப்பிடு கிறார். இத்துடன் முட்டைக் கோசையும் அவ்வப்போது சேர்க்கிறார். இதுவரையில் இவர் ஏராளமான உருளைக்கிழங்கை வயிற்றுக்குள் தள்ளி விட்டார். இவருக்கு மற்ற உணவை கண்டாலே குமட்டல் வந்து விடுகிறது. இது பற்றி அவரே கூறுகையில், 'இது மோசமான பழக்கம் என்பதை உணருகிறேன். அதே நேரத்தில், புதிய உணவை சாப்பிட பயமாக இருக்கிறது. இதனால் நோய் வந்து விடுமோ என அஞ்சுகிறேன். பிறந்தநாள், 'கேக்'கை கூட சாப்பிட மாட்டேன் என்றாலும், என்னுடைய தாய் விருப்பத்துக்காக, ஆண்டு தோறும் கேக் மட்டும் வெட்டி கொண்டாடுகிறேன்' என்கிறார்.
சீட்டுக்கு பெல்ட் போட்டது யார்?
இன்றைய கார்கள் சீட் பெல்ட் இல்லாமல் வருவது இல்லை. இந்தியாவில் பல மாநிலங் களில் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது தண்டனைக்கு உரிய குற்றம். சீட்பெல்ட் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு.
விபத்துக்களில் பெரும்பாலான இறப்புகள் சீட்டில் இருந்து மனிதன் தூக்கியெறியப் படுவதாலேயே நடக்கின்றன. அந்த மனிதனை சீட்டோடு கட்டி வைத்து விட்டால் விபத்து நடந்தாலும் மரணம் ஏற்பட வழியில்லை என்பதை உணர்ந்தே சீட்பெல்ட்டை கண்டு பிடித்தனர். சீட்டுக்கு அருகே பொருத்தப் பட்டிருக்கும் இந்த பெல்ட்டின் நாடாவை மெதுவாக இழுத்தால் வெளிவரும். அதுவே வெடுக்கென்று இழுத்தால் லாக் ஆகிக் கொள்ளும். இந்த தொழில்நுட்பம் தான் விபத்தில் இருந்து நம்மை காக்கிறது.
சீட்பெல்ட் முதன் முதலில் விமானங்களில் தான் பயன்படுத்தப்பட்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜார்ஜ் கெய்லி என்பவர் சீட் பெல்ட்டை கண்டுபிடித்தார். இந்த பெல்ட்டுக்களை கார்களில் பயன் படுத்துவது நல்லது என்று 1920களில் டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இதையடுத்து கார்களிலும் இதை கொண்டு வர ஏற்பாடுகள் நடந்தன. ராணுவத்தில் விமான ஆய்வாளராக இருந்த எட்வர்ட் ஜெஹாக் என்பவரால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு பெல்ட்டை 'போர்டு' கார் நிறுவனம் தனது கார்களில் முதன் முதலாக பயன்படுத்தியது.
1955ல் 'சாப்' என்ற கார் தயாரிப்பு நிறுவனம், சீட் பெல்ட்களை முதன் முதலாக காரின் அடிப்படை வசதிகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டது. முன் மற்றும் பின் சீட்களில் இருப்போர் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று கட்டாயமாக்கியது ஆஸ்திரேலிய அரசுதான். ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் தான் உலகில் முதன்முதலாக சீட்பெல்ட் கட்டாயமாக்கப்பட்டது.
வால்வோ நிறுவனம் 1956ல் 'டூ பாயிண்ட் கிராஸ் செஸ்ட் டயகனாஸ் பெல்ட்' என்ற ஒரு பாதுகாப்பு பெல்ட்டை அறிமுகப்படுத்தியது. இது முந்தைய பெல்ட்டுக்களை விட பாது காப்பானதாக இருந்தது. 1958ல் 'திரீபாயிண்ட் சேப்டி பெல்டுகள்' அறிமுகமாயின. சுவீடனில் 1959-லும், அமெரிக்காவில் 1963 லும் இந்த திரீபாயிண்ட் சேப்டி பெல்ட்கள் புழக்கத்தில் வந்தன.
என்றென்றும் உங்கள் அன்பு, அங்குராசு.
