PUBLISHED ON : டிச 26, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
வார்த்தைகள்!
ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள கியோஸ்க் காபி கடை வித்தியாசமான விலைப் பட்டியலை வைத்திருக்கிறது. இங்கு ஒரே காபி, விதவிதமான விலைகளில் கிடைக்கிறது. எப்படி?
'ஒரு காபி' என்றால் 5 டாலர். 'ஒரு காபி ப்ளீஸ்!' என்றால் 4.50 டாலர். 'குட்மார்னிங் ஒரு காபி ப்ளீஸ்!' என்றால் 4 டாலர். சக மனிதர்களை மதிக்கும் பண்பு குறைந்து வருவதால், இப்படி விலைப்பட்டியலை எழுதி வாசலில் வைத்திருப்பதாகச் சொல்கிறார் கடையின் சொந்தக்காரர் கேவ் சில்வர்.
உண்மையிலேயே இந்த யோசனை வெற்றி பெற்று விட்டது. விலைப்பட்டியலைப் பார்க்கும் பெரும்பாலானவர்கள் சொல்வது, 'குட் மார்னிங், ஒரு காபி ப்ளீஸ்' என்பதைத் தான். ப்ளீஸ், தாங்க் யூ என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தினால், நம்மை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்கிறார் சில்வர்.
பூண்டு டாக்டர்!
* பூண்டை பொடியாக நறுக்கி பாலுடன் சேர்த்து உட்கொண்டால் இதய கோளாறு கட்டுப்படும்.
* நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நசுக்கி உட்கொண்டால் வாயு கோளாறு நீங்கும்.
* பூண்டை தேங்காய்ப் பாலில் வேக வைத்து நன்கு மசிய அரைத்து, சுளுக்கினால் ஏற்பட்ட வீக்கத்தின் மேல் தடவினால் வீக்கம் குறையும்.
* ஒரு தேக்கரண்டி பூண்டு விழுதுடன் தேங்காய் எண்ணெய் கலந்து உட்கொண்டால் வாத நோய் கட்டுப்படும்.
* பூண்டுச் சாறுடன் எலுமிச்சை பழச்சாற்றை கலந்து தடவினால் சரும நோய்கள் கட்டுப் படும்.
* பூண்டை சிறிதளவு நீர் கலந்து நசுக்கி சாறெடுத்து அத்துடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் இருமல் கட்டுப்படும்.
* பூண்டை நசுக்கி ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோயினால் உருவாகும் வீக்கம் குறையும். ரத்த கொதிப்பும் கட்டுப்படும்.
* பூண்டை நெருப்பில் சுட்டு அதை இளம் சூட்டில் மைபோல் அரைத்து தொண்டைக்கு வெளிப்புறம் தடவினால் தொண்டை வீக்கம் குறையும்.
* உணவில் மருந்தாக உபயோகப்படுவது பூண்டு, பல மருத்துவ குணம் உள்ளடங்கியது என்பதால் தினசரி உணவில் பூண்டை அனைவரும் சேர்த்து கொள்ள வேண்டும்.
பூண்டு என்பது குட்டி மருத்துவர். அதன் பலனோ மிகப் பெரியது. பிடிக்கலைன்னு தள்ளமா பூண்டை சாப்பிடுங்க. ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமான வாண்டு, இந்த பூண்டு.
சான்றிதழ் ஜாக்கிரதை!
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள், லேமினேட் செய்வதாக தகவல் வருகிறது. சான்றிதழை லேமினேட் செய்தால் அது பழுதாகும். மதிப்பெண் சான்றிதழில் பெயர் திருத்தம், பிறந்த தேதியில் திருத்தம் என தெரியவரும் போது, சான்றிதழில் திருத்தம் செய்வது கடினம். மாணவர்கள், வெளிநாடு செல்ல முயன்றால், அவர்களின் சான்றிதழின் பின் பக்கத்தில் அரசு முத்திரை இட வேண்டும். இதற்காக லேமினேட்டை பிரிக்கும் போது, சான்றிதழ் சேதமாகும். எனவே, சான்றிதழ்களை 'லேமினேட்' செய்ய வேண்டாம் என மாணவர்களை, தேர்வுத் துறை கேட்டுக் கொள்கிறது.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு!
