PUBLISHED ON : டிச 26, 2014

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் ஓர் அரசர் இருந்தார். அவர் மன்னருக்கே உரிய நெறிமுறைகளுக்கு உட்பட்டு, மக்கள் நலம் பேணும் வகையில் நல்லாட்சி நடத்தி வந்தார்.
அம்மன்னருக்கு வாய்த்த மந்திரி, எல்லா விஷயங்களிலும் மன்னருக்கு அனுசரணையாக இருந்து வந்தான். அதனால், மந்திரியின் மீது மன்னருக்கு அளவுகடந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. மந்திரியும் இந்த நம்பிக்கை மேலும் வளரும் பொருட்டுத் தன் நடவடிக்கைகளை அதற்கேற்ப மாற்றிக் கொண்டான்.
நாட்கள் கடந்தன.
ஒருநாள்...!
ராஜகுரு மன்னரைச் சந்திப்பதற்காக அரண்மனைக்கு வந்தார். ராஜகுருவை மிகவும் மரியாதையுடன் வரவேற்று, இருக்கையில் அமர வைத்தார் மன்னர்.
ராஜகுரு மன்னரைப் பார்த்து, ''மன்னா! நான் சொல்லப் போகும் செய்தி தங்கள் மனதைச் சஞ்சலம் அடையச் செய்வதாக இருக்கும். அதனால்தான், அதை எப்படிச் சொல்வதென்று தயங்குகிறேன். ஆனால், சொல்லாமல் என்னால் இருக்கவும் முடியாது...'' என்று பேச்சை இழுத்தார் ராஜகுரு.
''ராஜகுருவே! என்ன செய்தியாக இருந்தாலும் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம்,'' என்று கூறினார் மன்னர்.
''மன்னா! நேற்றைய இரவில் நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில், உங்களது தம்பியும் இன்னும் சிலரும் கூடி, உங்களைக் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடிப்பதாகக் காட்சி தோன்றியது. என் கனவு பலிக்கும் தன்மை கொண்டது மன்னா! அதனால், தாங்கள் எதற்கும் உஷாராக இருப்பது நல்லது. இதைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று எண்ணியே இங்கு வந்தேன்,'' என்று கூறினார் ராஜகுரு.
ராஜகுரு, மன்னரை மீண்டும் வணங்கி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
மன்னர் தனிமையில் அமர்ந்து சிந்திக்கத் தொடங்கினார். ராஜகுருவின் கனவுக் காட்சியில் உண்மை இருப்பதாகவே, மன்னரின் மனதிற்குப் பட்டது.
அடுத்த நாள் காலை...!
மன்னர், மந்திரியை அழைத்து, அவரிடம் நேரில், தனது தம்பியின் போக்கு குறித்துப் பேசினார்.
''மந்திரியாரே! உங்கள் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்! எனவே, உங்களை நம்பி ஒரு பரம ரகசியத்தை உங்களிடம் சொல்லப் போகிறேன். அதனை யாரிடமும் சொல்லாமல், நான் சொல்லப் போகும் காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும்,'' என்று கூறினார் மன்னர்.
''என்ன விஷயம் மன்னா? சொல்லுங்கள்! உங்கள் மீதுள்ள எனது விசுவாசத்தின் பொருட்டு, தாங்கள் சொல்லும் காரியத்தைச் செய்து முடிக்கிறேன்,'' என்று கூறினார் மந்திரி.
''மந்திரியாரே! அண்மைக் காலமாக, எனது தம்பியின் மீது ஒரு சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவன் என்னைக் கொன்று விட்டு, அரியணை ஏறுவதற்குச் சதி செய்து வருவதாக எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. நீர் அவனிடம் நேரில் சாதுரியமாகப் பேசி, அவனது சதி முயற்சியைத் தடுக்க வேண்டும்,'' என்று மன்னர் கேட்டுக் கொண்டார்.
''அப்படியே செய்கிறேன்,'' என்று வாக்குறுதி கொடுத்து விட்டு, மன்னரிடம் விடை பெற்றுச் சென்றார் மந்திரி.
மறுநாளே, மன்னரின் தம்பியைப் பார்ப்பதற்காக மந்திரியார் சென்றார்.
மந்திரியின் திடீர் விஜயத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார், மன்னரின் தம்பி.
''ஏது இவ்வளவு தூரம்? எனது தமையனார் ஏதும் சொல்லியனுப்பினாரா? என்று மந்திரியைப் பார்த்து ஆவலுடன் கேட்டார், மன்னரின் தம்பி.
''விஷயம் பெரியதுதான். அதுவும் பரம ரகசியம்! தங்களைக் கொல்லுவதற்கு தங்கள் தமையனாரான அரசர் முடிவு செய்துள்ளார். இந்த ரகசியத்தை என்னிடம் மட்டுமே கூறினார். காரணம், அவருக்கு என் மீது அளவு கடந்த நம்பிக்கை. அதனால் தாங்கள் உஷாராயிருப்பது நல்லது. இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போகவே நான் வந்தேன்,'' என்று ரகசியத்தை அவிழ்த்து விட்டார் மந்திரி.
''நன்றி மந்திரியாரே! தக்க சமயத்தில் வந்து விஷயத்தைச் சொன்னீர்! நான் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள உதவி செய்தீர்கள்! உங்களுக்கு என்றாவது ஒருநாள் நான் பெரிய வெகுமதி அளிப்பேன்,'' என்று கூறி, மந்திரியை அனுப்பி வைத்தார் மன்னரின் தம்பி.
ஒரு சில நாட்கள் சென்றன-
மன்னர் இயற்கை எய்தினார், தம்பி பட்டத்திற்கு வந்துவிட்டான்!
மந்திரிக்கோ பெருத்த உற்சாகம்! ரகசியத்தை வெளியிட்டமைக்கு புதிய மன்னரிடம் இருந்து பெரிய வெகுமதிகள் கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அரச பதவியேற்ற அடுத்த நாளே, தம்பி போட்ட முதல் உத்தரவு மந்திரிக்கு மரண தண்டை என்பதுதான்!
மன்னரின் உத்தரவைக் கேட்டு, மந்திரி அதிர்ச்சி அடைந்தார்.
''நான் தங்களுக்குச் செய்த உதவிக்குத் தாங்கள் கொடுப்பதாகச் சொன்ன பெரிய வெகுமதி இதுதானா?'' என்று மன்னரைப் பார்த்துக் கேட்டார் மந்திரி.
''ஆம், மந்திரியாரே! மன்னர் சொன்ன பரம ரகசியமான விஷயத்தை மற்றவர்களிடம் போய்ச் சொல்லுகிற எவனும் மரண தண்டனை அடைவதே நியாயம் ஆகும். அந்தப் பயங்கரக் குற்றத்தை நீர் செய்திருக்கிறீர்! உங்களிடம் நம்பிக்கை வைத்து என் தமையனார் சொன்ன ரகசியத்தை உடனே, என்னிடம் ஓடி வந்து சொன்னீரல்லவா? என் தமையனாருக்குத் துரோகம் செய்த நீர், எனக்கும் துரோகம் செய்யமாட்டீர் என்பது என்ன நிச்சயம்? குற்றங்களுக்கு ஏற்பத் தண்டனை வழங்கப்படுதல் மரபுதான். ஆனால், நம்பிக்கைத் துரோகம் என்ற குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவதுதான் நியாயம் ஆகும்!'' என்றார்.
மந்திரிக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை, நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துவிட்டது!
***
