PUBLISHED ON : பிப் 12, 2016

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
கரப்பு... வைக்க முடியுமா ஆப்பு?
பூச்சிகளில் அழிக்கவே முடியாத, தடுக்கவே முடியாத பூச்சி, கரப்பான் பூச்சி.
ஒளி தேவையில்லை. பல காலம் தண்ணீர், உணவு தேவையில்லை. தலையில்லாமலும் வாழும், இப்படி எந்த உயிரினத் திற்கும் இல்லாத அனுகூலங்கள் கரப்பானிற்கு உண்டு.
இதனை அழிப்பது சிரமம். உருவாகாமலே தடுப்பது எளிது. வீட்டிற்குள் குப்பைகள் சேராமலே இருந்தால், கரப்பான் பூச்சி தோன்றாது.
போரிக் ஆசிட் பவுடரில் சமபங்கு மாவு கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மூலை முடுக்குகளில் போட்டு வைக்க வேண்டும். அதனை சாப்பிடும் கரப்பான் பூச்சி வயிறு வெடித்து இறந்து போகும்.
தண்ணீர் செல்லும் வழிகள், சிங்க், வாஷ்பேசின், ஆகியவற்றில் நாப்தலின் உருண்டைகளை போட்டு வைக்க வேண்டும்.
கன்னத்தில் வெட்டலாமா குழி!
முகத்தின் அழகிற்கு அழகு சேர்ப்பது பல விஷயங்கள். அவற்றில் மிக முக்கியமானது கன்னக்குழி.
இயற்கையான கன்னக் குழிகளில் இருவகை இருக்கிறது. முதல் வகையினருக்கு பேசும் போதும், சிரிக்கும் போதும் மட்டுமே குழி வெளிப்படும்.
இரண்டாவது வகையினருக்கு எப்போதும் பளிச்சென அந்த குழி தெரியும். பொதுவாக பெண்களுக்கு இயற்கையாக கன்னத்திலும், தாடையிலும் குழி விழுவதுண்டு.
முகத்தில் 'ஜைக்கோமேட்டிக்கஸ் மேஜர்' என்ற தசைப் பகுதியில் ஏற்படும் மாற்றமே குழியாக மாறுகிறது.
அந்த தசையின் தடிமனாலோ, தொடர் தசையில் ஏற்படும் பிளவாலோ குழி உருவாகிறது. இயற்கையாக குழி இல்லாவிட் டால், 'டிம்பிள் கிரியேஷன் சர்ஜரி' மூலம் குழி வெட்டிக்கலாம்!
லோக்கல் அனஸ்தீஸ்யா கொடுத்து 20 நிமிடங்களில் குழியை உருவாக்கி விடுகின்றனர்.
முகத் தசையின் பலம், அதில் அடங்கியிருக்கும் கொழுப்பின் அளவு, முகத்தின் அமைப்பு, உடலின் அமைப்பு போன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டு குழியை உருவாக்குகின்றனர்.
ஆபரேஷன் முடிந்த முதல் வாரத்தில் முழு நேரமும் காணப்படும் இந்த செயற்கை குழி, பின்பு சிரிக்கும் போதும், பேசும் போதும் மட்டும் தெரியும். குழி அழகாக இல்லாவிட்டால் எளிதான ஒரு ஆபரேஷனால் குழியை மூடியே மூடி விடலாம்.
வசதி எப்படி?
இரவில் 8 மிமீ!
மனிதனின் உயரம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பகலில் இருப்பதை விட இரவில் அவனது உயரம் 8 மில்லி மீட்டர் அதிகரிக்கிறது. மீண்டும் காலையில் அவன் எழுந்ததும் பழைய உயரத்துக்கே வந்துவிடுவான். பகலில் உயரம் குறைவதற்கு காரணம் புவியீர்ப்பு விசையே. அதுதான் மனிதன் நிற்கும் போதும், உட்காரும் போதும், எலும்புகள் கீழ் நோக்கி இருப்பதால் உயரம் குறைகிறது.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
