
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
பூலோக சொர்க்கம்!
மனிதர்கள் மறைந்தபின் சொர்க்கத்திற்கு போக நினைக்கின்றனர். மனிதர்களில் வெகு சிலரே வாழும்போதே வாழ்கிற நாளே சொர்க்கமாக இருத்திட செய்கின்றனர். மகிழ்ச்சியாய் இருப்பதே சொர்க்கத்தின் சிறந்த அடையாளமாய் கூறலாம் அல்லவா!
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக, 'அந்த நாடு' இருக்கிறது. அது ஏன் மகிழ்ச்சியான நாடாக இருக்கிறது என பல்வேறு காரணங்களை வரிசைப்படுத்து கின்றனர் ஆய்வாளர்கள்.
25 எங்களிடம்: அந்த நாட்டின் மக்கள் தொகை 80 லட்சம்தான் என்றாலும், 25 நோபல் பரிசு வல்லுநர்களை இந்நாடு உருவாக்கியுள்ளது.
26 தன்னாட்சி: இந்த ஜனநாயக நாட்டில் சாதாரண குடிமகன் கூட அரசியலமைப்பு திருத்தத்துக்கு வேண்டு கோள் விடுக்கலாம். எந்த சட்டம் குறித்தும் வாக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் அந்நாட்டு மக்களுக்கு உண்டு. இதனால்தான் இங்குள்ள 26 மண்டலங்களும் சிறந்த வகையில் தன்னாட்சியை நடத்தி வர முடிகிறது.
வயது 82.8: இந்த நாட்டு மக்கள் சராசரியாக 82.8 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் சர்வதேச அளவில் இவர்கள் 10-வது இடத்தில் இருக்கின்றனர்.
சண்டையா, போரா... அப்படின்னா: கடந்த 1847ம் ஆண்டிலிருந்து இன்றுவரை எந்த போரிலும் பங்கேற்காத அல்லது ஆதரவு தராத நாடு இது. ராணுவத்திற்காக ஆண்டுதோறும் கொட்டி கொட்டி, பணத்தை செலவழிப்பதில்லை. அம்மக்கள் அமைதி விரும்பிகள்.
சிறந்த சிகிச்சை: மருத்துவ சிகிச்சை களுக்காக காத்திருப்பு நேரம் மிகவும் குறைவு. நியாயமான கட்டணத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இயற்கை கொஞ்சுகிறது: அந்த நாடு முழுவதும் ஆல்ப்ஸ் மலைகள் மற்றும் பசுமை யான நிலப்பரப்புகள் சூழ்ந்துள்ளது. அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
அழுத்தத்தை ஏறி மிதி: அந்த நாட்டில் பெருமளவில் அழகிய ஏரிகள் உள்ளதால், பொழுதுபோக்குக்காக ஏரிகளின் கரைகளில் அமர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
அழகு ரயில்: இந்த நாட்டில் வலம் வரும் ரயில்களில் பயணித்தால், அந்நாட்டின் ஒட்டுமொத்த அழகையும் கண்டுகளிக்கும் வகையில் ரயில் பாதைகளின் அமைப்புகள் உள்ளன.
நேரமே தவறாதே: அந்நாட்டு மக்கள் கடிகாரங்களுக்கு மட்டும் பிரபலமானவர் களல்ல. எந்த காரியத்தையும் உரிய நேரத்தில் காலம் தவறாமல் செய்வதில் கெட்டிக்காரர்கள்.
மூன்று நகரமா: அனைத்து வகையில் வாழத் தகுதியான நகரங்களின் பட்டியலில் அந்நாட்டின் சூரிச் நகரம் உலகளவில் 2-வது இடத்திலும், ஜெனீவா 8-வது இடத்திலும், பெர்ன் நகரம் 13-வது இடத்திலும் உள்ளன.
பணி நேரம் குறைவு: அதிக அளவு வருமானம் பெற்றாலும், அந்நாட்டு மக்கள் அலுவலகங்களில் பணி செய்யும் நேரம் வாரத்திக்கு 35.2 மணி நேரம்தான்.
இது இங்கிலாந்து 36.4, ஸ்பெயின் 38, கிரீஸ் 42.1, துருக்கி 48.9 ஆகிய நாடுகளின் அலுவலக நேரத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
குண்டு இல்லை: சுவைமிக்க சாக்லேட்டை விரும்பி உண்டாலும், அந்த நாட்டு மக்களில் பருமனானவர்கள் வெகு அரிது.
சாக்லேட்-லாந்து: சாக்லேட் தயாரிப்புக்கு புகழ் பெற்ற நாடு இது. இவர்கள் தயாரிக்கும் சாக்லேட்டுகள் சுவையானவை மட்டுமல்ல; மூளையின் செயல்பாட்டையும் தூண்டுபவை.
மணி... மணி...: இந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் பணக்காரர்கள். அந்நாட்டில் தனிநபர் வருமானம் மிக அதிகம்.
பன்மொழி நாடு: இந்நாட்டு மக்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழியை சரளமாக பேசுவர்.
சாம்பியன் டென்னிஸ்: டென்னிஸ் விளையாட்டு என்றாலே ஞாபகத்துக்கு வருபவர், ரோஜர் பெடரர். சர்வதேச அளவில் தன் நாட்டுக்கு புகழ் தேடி தந்த அவர் இந்த நாட்டின் குடிமகன்.
சுவைமிக்க பாலாடைக்கட்டி வகைள்: பல வகைகளில் ஆரோக்கியமான பாலாடைக் கட்டிகளை உணவுகளில் பயன்படுத்துவதால், இந்நாட்டு மக்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
தேசியக்கொடி: செஞ்சிலுவை சின்னத் துடன் உலக புகழ் பெற்றிருக்கும் இந்த நாட்டு தேசியக் கொடி அந்நாட்டு மக்களின் பெருமித அடையாளம்.
அந்த நாடு எது என்று கண்டு பிடிச்சிட்டீங்களா?
எந்த குறிப்பில் இந்த நாடு,'சுவிட்சர்லாந்து' என கண்டுபிடித்தீர்கள்?
பல்லுல இருக்க கூடாது பற்பசைல இருக்கலாம்!
நம்முடைய பற்கள் வெள்ளையை தவிர வேறு நிறமாக இருக்க கூடாதல்லவா!
நாம் பயன்படுத்தும் பற்பசை டியூப்பின் அடிப்பாகத்தில் பட்டையாக பச்சை, சிவப்பு, நீலம், கருப்பு போன்ற நிறங்களில் கோடு இருக்கும். இந்த கோடுகள் எதை குறிக்கிறது தெரியுமா? பச்சை நிறக்கோடு அந்த பற்பசை இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை குறிக்கும்.
நீலநிறக் கோடு இயற்கையான மூலப் பொருட்கள் 75 சதவீதம், செயற்கையான மூலப் பொருட்கள் 25 சதவீதம் கலந்து தயாரிக்கப்பட்ட பற்பசையாகும்.
சிவப்புக் கோடு - செயற்கையான மூலப் பொருட்கள் 75 சதவீதம், இயற்கையான மூலப் பொருட்கள் 25 சதவீதம் கலந்து உருவாக்கப்பட்டது என்பதை குறிக்கும்.
இதுவே கருப்பு நிறம் - முழுவதும் செயற்கையான ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஆனால், இதில் உண்மை இல்லை. உள்ளிருக்கும் பற்பசையில் எந்த வகையான பொருட்கள் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை பாக்கெட் மேல் இருக்கும் பட்டியலில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தனியாக ரகசிய கோடு ஒன்று கொடுக்க வேண்டியதில்லை. அப்படியென்றால் இந்த கோடுகள் எதை குறிக்கின்றன? அது தயாரிப்பு மற்றும் பேக்கிங் சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கிறது.
நீளமாக வரும் டியூப்பை எங்கு, 'கட்' செய்ய வேண்டும்? அதில் எவ்வளவு பற்பசையை நிரப்ப வேண்டும்?
எந்த இடத்தில் மடித்து, அதில் தயாரிப்பு தேதியை குறிப்பிட வேண்டும் என்பன போன்ற விவரங்கள், அந்த கோடுகளில் கொடுக்கப்பட்டு இருக்கும்.
இந்த கோடுகளை அதிவேகத்தில் செல்லும் இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரானிக் கண்கள் பார்த்துவிடும்.
அந்த கோடுகளின் அளவு தடிமன், நிறம் ஆகியவற்றை கொண்டு அதற்கான பேக்கிங் முறையை தேர்ந்தெடுத்து கொள்ளும். அதற்கான தொழில்நுட்ப குறியீடுதான் நிறத்தினாலான அந்த கோடுகள்.
அட! சப்புனு போச்சே- வடை போச்சே!
வைரத்தை விட உறுதி - கம்பி கரெண்ட்!
நாம் கரெண்ட் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலையில் இருக்கிறோம். பஞ்ச பூதங்களோடு சேர்த்து கரெண்ட் ஆறாவது பூதமாகவே ஆகிவிட்டது. சூரியன், நிலாவுக்கு அடுத்து மட்டுமல்ல, இவை இல்லா விட்டாலும், பல்புகள் நமக்கு உதவுகின்றன.
இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் டியூப்லைட், குண்டு பல்பு போன்றவை புவியை சூடாக்கும் தன்மை கொண்டவை.
இவை அதிக மின்சாரத்தையும் பயன்படுத்த கூடியது. தற்போது விஞ்ஞானிகள் முற்றிலும் புதுமையான, உலகின் மென்மையான விளக்கை உருவாக்கி இருக்கின்றனர்.
கொலம்பியா பல்கலைக் கழகம், சியோல் தேசிய பல்கலைக்கழகம், கொரியா அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழுவினர் இந்த மெல்லிய விளக்கை உருவாக்கி உள்ளனர்.
மிக மெல்லியதும், வைரத்தை விட உறுதியானதுமான 'கிராபின்' அணுக்களால் இந்த விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.
இது மிக அதிகமான வெப்பத்தை தாங்குகிறது. அதோடு பிரகாசமாகவும் ஒளிரக்கூடியது. வெளிச்சத்திற்கான விளக்காக மட்டும் அல்லாமல், கட்டடத்தின் சுவர்களில் இந்த மெல்லிய விளக்குகளை பதித்து அழகூட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.
விஞ்ஞானம் என்பது புதிது புதிதாக கண்டுபிடிப்பது மட்டுமல்ல... இருப்பதை சிறப்பாக மேம்படுத்துவதும்தான்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.