sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

வயதான குரங்கு என்ன சொல்லிச்சு!

/

வயதான குரங்கு என்ன சொல்லிச்சு!

வயதான குரங்கு என்ன சொல்லிச்சு!

வயதான குரங்கு என்ன சொல்லிச்சு!


PUBLISHED ON : ஆக 26, 2016

Google News

PUBLISHED ON : ஆக 26, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு காட்டிலுள்ள மாமரத்தில் ஏராளமான பச்சைக் கிளிகள் வசித்து வந்தன.

ஒருநாள்-

அந்தப் பக்கமாக குரங்கு ஒன்று வந்தது. அந்தக் குரங்கானது பச்சைக் கிளிகளைப் பிடிக்க நினைத்தது.

கிளிகள் எதுவும் தன்னை அறிந்து கொள்ளாதவாறு மெல்ல, மெல்ல மரத்தை நோக்கி ஏறியது குரங்கு. கிளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற அவசரத்தில், கவனிக்காமல் காய்ந்த மரக்கிளை ஒன்றினைப் பற்றி ஏறியது.

உடனே, அந்தக் கிளை ஒடிந்து விடவே, மரத்தின் மேலிருந்து 'பொத்'தென்று தரையில் விழுந்தது.

'பொத்'தென்று குரங்கு கீழே விழவே, அந்த சத்தத்தைக் கேட்ட கிளிகள் எல்லாம் உடனடியாக மரத்தை விட்டுப் பறந்து சென்றன.

இது குரங்குக்கு மிகவும் அவமானமாக இருந்தது. கோபத்துடன் மரத்தைப் பார்த்தது.

''மரமே! நீ என்ன காரியம் செய்து விட்டாய்! உன் காய்ந்து போன கிளையைப் பிடித்ததால் நான் இந்த நிலைக்கு ஆளாகி விட்டேன். உன்னையும் இந்தக் கிளிகளையும் சும்மா விடமாட்டேன்,'' என்று கூறியது.

பின்னர், கோபத்துடன், தன் இருப்பிடத்திற்கு வந்த குரங்கானது, தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய நண்பர்களுக்கு தெரியப்படுத்தியது. அதை கேட்டு எல்லாக் குரங்குகளும் ஆத்திரமடைந்தன.

''நண்பனே! உனக்கு நேர்ந்த இந்த அவமானத்தை எங்களுக்கு நேர்ந்ததாக கருதுகிறோம். இது நம் இனத்திற்கு பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. இதை நாம் சும்மா விடக்கூடாது. இதற்கு இப்போது ஒரு முடிவு கட்ட வேண்டும். உன்னை தரையில் விழ வைத்த மரத்தை அழிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என, நாம் கூட்டமாக அமர்ந்து ஆலோசனை செய்யலாம்,'' என்றது ஒரு குரங்கு.

நன்கு கொழுத்து வாட்ட சாட்டமாக இருக்கின்ற அந்த இளம் குரங்கின் பேச்சை எல்லா குரங்குகளும் ஏற்றுக் கொண்டன.

''நண்பனே! நீயே ஒரு யோசனையை உடனே தெரியப்படுத்து! நாங்கள் எல்லாரும் அதனை அறிய ஆவலாக இருக்கிறோம்,'' என்றன.

''நண்பர்களே! காட்டில் ஏராளமான வேடர்கள் குடிசை போட்டு தங்கியிருக்கின்றனர். அவர்களிடம் விஷ அம்புகள் இருக்கிறது. அந்த விஷ அம்பில் ஒன்றை நாம் எடுத்து வரவேண்டும். அதனை மாமரத்தின் அடிப் பகுதியில் ஆழமாகக் குத்தி வைக்க வேண்டும். அம்பில் இருக்கின்ற விஷமானது மரத்தில் இறங்கி நாட்பட நாட்பட மரமானது பட்டு விடும். பின்னர் பட்ட மரமாக, காய்ந்து விடும். அதன் பின்னர், கிளிகள் அந்த மரத்தில் தங்காது,'' என்றது அந்த குரங்கு.

''நண்பனே! அற்புதமான யோசனையை வழங்கினாய்! இதனை செய்கின்ற ஆற்றல் உன்னிடம்தான் இருக்கிறது. நீதான் வாட்ட சாட்டமாகவும், திடகாத்திரமாகவும் இருக்கிறாய். உன்னால்தான் மாமரத்தில் ஆழமாக அம்பினை குத்தி வைக்க முடியும்,'' என்றன மற்ற இளம் குரங்குகள்.

''உங்கள் விருப்பம் அதுவானால், நானே இந்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறேன்,'' என்றது அந்த குரங்கு.

அந்த கூட்டத்தில் இருந்த வயதான குரங்கு ஒன்று, இதனையெல்லாம் கவனமுடன் கேட்டுக் கொண்டிருந்தது.

உடனே அது, மற்ற குரங்குகளை நோக்கியது.

''நண்பர்களே! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள்! நாம் இவ்வாறு செய்வதால் பெரும் துன்பத்தை விலை கொடுத்து வாங்கப் போகிறோம்,'' என்றது.

வயதான குரங்கின் பேச்சு மற்ற குரங்குகளுக்குப் புரியவில்லை.

''பெரியவரே! நீர் என்ன சொல்கிறீர்! சற்றுப் புரியும்படியாகக் கூறுங்கள்,'' என்றன இளைஞர் குரங்கு கூட்டம்.

''நாம் இப்போது வாழைத் தோட்டத்தை நம்பியே இதுநாள் வரையிலும் வாழ்ந்து கொண்டிருந்தோம். தோட்டத்தில் கிடைக்கும் வாழைப் பழங்களை சாப்பிட்டு பசியைப் போக்கி வருகிறோம். இதுநாள் வரையிலும் நாம் வசிக்கின்ற வாழைத் தோட்டத்திற்கு காவலாளிகள் யாருமே கிடையாது. ஆனால், நேற்று இரண்டு காவலாளிகள் வந்து வாழைத் தோட்டத்தை சுற்றிப் பார்த்து சென்றதை நாம் கவனித்தோம்.

''அந்தக் காவலாளிகளும் கூட்டமாக இருக்கின்ற நம்மைப் பார்த்து விட்டனர். நாளை முதல் அவர்கள் இருவரும் இங்கு தங்கி காவல் காக்க ஆரம்பித்து விடுவர். அதன் பின்னர் நமக்கு இங்கே இருப்பிடமில்லை. நாம் இந்த வாழைத் தோட்டத்தை விட்டு ஓட வேண்டியதுதான்.

''நாம் தங்குவதற்கு வேண்டுமானால் வேறு இடத்தை தேடிக் கொள்ளலாம். ஆனால், உண்பதற்கு எங்கேச் செல்வது? இந்த நேரத்தில் நாம் மாமரத்தில் இருக்கின்ற மாம்பழங்களை சாப்பிடலாமே! அதனை விட்டு, விட்டு அந்த மரத்தைப் பாழாக்க நினைத்தால் அந்த மரமானது யாருக்கும் பயன்படாமல் போய் விடும்,'' என்றது.

வயதான குரங்கின் பேச்சைக் கேட்ட மற்ற குரங்குகள் எல்லாம் தெளிவடைந்தன.

''பெரியவரே! தக்க நேரத்தில் சரியான அறிவுரையை வழங்கினீர்! இல்லையென்றால் நாங்கள் எல்லாரும் சேர்ந்து அநியாயமாக அந்த மரத்தினைப் பாழாக்கியிருப்போம்!'' என்றது.

''நண்பர்களே! நாம் எந்தப் பொருளையும் பாழாக்கக் கூடாது. அதனை நமக்கு தக்க நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்பதை யோசித்துப் பார்த்து செயலாற்ற வேண்டும்,'' என்றது வயதான குரங்கு.

வயதான குரங்கின் அறிவுரையை மற்ற எல்லா குரங்குகளும் ஏற்றுக் கொண்டன.






      Dinamalar
      Follow us