PUBLISHED ON : செப் 16, 2016

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
கட்டடம் கட்ட கிரேன் இல்லாமலா!
கிரேன்கள் பல வகைப்படும். தீயணைப்பு கிரேனும், அடுக்குமாடிகள் கட்ட கிரேனும் நாம் அறிவோம்.
அடுக்குமாடிகள் கட்டப்படும் இடங்களில் எல்லாம், தவறாமல் டவர் கிரேனைப் பார்க்க முடியும். கட்டுமானப் பொருட்களை எந்த உயரத்திற்கும், எந்த திசையிலும் எடுத்து செல்வதற்கு, 'டவர் கிரேன்'கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் லியபெர் என்ற பொறியாளர், 1949ம் ஆண்டில் முதலாவது டவர் கிரேனை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் முக்கிய கட்டடங்கள் எல்லாம் தரைமட்டமாகிப் போய்விட்டன. மிச்சமிருந்த கட்டடங்களும் கடுமையான சேதம் அடைந்திருந்தன.
போரின் பாதிப்பிலிருந்து, ஜெர்மனி உடனடியாக மீண்டு வருவதற்கு கட்டடங்களை விரைவாக கட்டி முடிக்க வேண்டியிருந்தது. ஆனால், அதற்குப் போதுமான நவீன இயந்திரங்கள் எதுவும் அப்போது இல்லை. அந்த தேவையை நிறைவு செய்வதற்காகவே, 'டவர் கிரேன்' உருவாக்கப்பட்டது.
மனித சக்தியை விடவும் பல நூறு மடங்கு திறனும், வேகமும் கொண்டது இந்த டவர் கிரேன். இதைப் பயன்படுத்தி இரண்டு டன் முதல், 12 டன் வரைக்கும் உள்ள பொருட்களை தூக்க முடியும். பொதுவாக, 12 மீட்டர் உயரத்துக்கு மேலே உள்ள கட்டங்களுக்கு இந்த கிரேனை பயன்படுத்தலாம்.
ஒரு காலத்தில், மேற்கத்திய நாடுகளிலும், சீனாவிலும் மட்டும் டவர் கிரேன்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது, இந்தியாவில் குறிப்பாக சென்னையிலேயே இந்த கிரேன்கள் தயாரிக்கப்படுகின்றன.
அடுத்தது என்ன?
ஒரு கதையோ, விளையாட்டோ, திரைப்படமோ, அடுத்தது என்ன என்று ஆவலை தூண்டினால் அது அமோக வெற்றி பெறும்.
அதே, பரீட்சையில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, 'அடுத்தது என்ன?' என்று யோசித்தோம் என்றால்...
படிப்பவர்களின் மெயின் பிரச்னைகளில் ஒன்று இந்த நினைவாற்றல்.
நம்ப, செல்ல பாட்டி வைத்தியத்தில் சொல்லப்பட்டு இருக்கிற சில குறிப்புகளில் நம்மால் முடிந்த ஒன்றை செய்வோம். நினைவாற்றல் பெறுவோம்.(பாட்டியை மறவோம்)
* திரிபலாவை (நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய்) கால் ஸ்பூன் எடுத்து தேன்ல கலந்து தினமும் சாப்பிட்டு வந்தா நினைவாற்றல் பெருகும்.
* இதே மாதிரி கோரைக்கிழங்கை பொடி பண்ணி, அரை ஸ்பூன் எடுத்து, அதோட தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.
* வல்லாரை இலைப்பொடியை கால் ஸ்பூன் அளவு காலையிலும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தாலும் நினைவாற்றல் பெறலாம்.
* அமுக்கிராங்கிழங்கு சூரணம் ரெண்டு ஸ்பூன், பாதாம் பருப்பு நாலு, காய்ந்த திராட்சை ஒரு ஸ்பூன் எடுத்து, 200 மில்லி பசும்பால்ல போட்டு காய்ச்சி, ஆறினதும் காலையிலும், சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா நினைவாற்றல் அதிகரிக்கும்.
* வல்லாரைத்தூள் 10 மடங்கு. வசம்புத்தூள் ஒரு மடங்கு சேர்த்து கலந்து வச்சிடணும். இதுல அரை ஸ்பூன் அளவு தேன்ல கலந்து காலை - மாலை சாப்பிட்டு வரலாம்.
இதையெல்லாம் ஒரு மண்டலம் சாப்பிடணும். தேவைப்பட்டா சில நாள் இடைவெளி விட்டு தொடரலாம்.
குட்டின்னா அழகுதான்!
குட்டில கழுதை கூட அழகாதான் இருக்கும்னு சொல்வாங்க.
எதுவும் அளவா- கரெக்டா-குட்டியா இருந்தா சூப்பராதான் இருக்கும்.
இது, 'குட்டித் தூக்கம்' பற்றிய செய்தி.
* மதியம் சுமார் முப்பது நிமிடங்கள் தூங்குவது இதயநோய் தாக்கும் ரிஸ்க்கை நாற்பது சதவிகிதம் குறைக்கும். வாரத்துக்கு குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது மதிய தூக்கம் போடவும்.
* பைலட்டுகள் தொலைதூர பயணத்தில் சுமார் இருபத்தாறு நிமிடங்கள் தூங்கியபோது, அவர்களது சுறுசுறுப்பும், எச்சரிக்கை உணர்வும், 50 சதவீதம் வரை அதிகரித்தது என்கின்றனர்.
* டாக்டர்கள், நர்சுகள் முதலியோர் நைட் ஷிப்டுகளின் நடுவில், ஒரு குட்டி தூக்கம் போட்டால், அவர்களின் செயல்பாடு நன்றாக இருக்குமாம்.
அதுக்காக ரொம்ப தூங்கிடாதீங்க. குட்டி தூக்கம் உங்களை சிறப்பாக செயல்பட செய்யும். அளவற்ற தூக்கம் உங்களை செயல்படாதவராய் செய்யும்.
மனிதனில் இத்தனை கடல்களா!
மனிதனின் உடலில் உறுப்புகள் உண்டு. சிலரிடம் சிறப்பான திறமைகள் இருக்கும். மனிதனிடம் கடல்கள் இருக்கிறதா? இருக்கிறது. தாமஸ் ஜாய்சன் என்பவர் இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற இளம் நாவலாசிரியர்.
சாமானிய மக்களின் மன உணர்ச்சிகளை அற்புதமாக படம் பிடித்து காட்டுபவர் என்ற பெயர் அவருக்கு உண்டு!
ஒரு தடவை பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஜிம் மார்வல் என்ற விஞ்ஞானி, உலகத்திலேயே உயர்ந்த நிலையில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் விஞ்ஞானிகள்தான்.
கதாசிரியர்கள் போன்றவர்கள் மக்கள் மயங்கும்படி அவர்கள் அறிவை குழப்புகின்றனர் என்றார்.
அந்த கூட்டத்தில் அமர்ந்திருந்த தாமஸ் ஜாய்சன், 'விஞ்ஞானிகளை விட கதாசிரியர்கள்தான் அதிக அறிவு உள்ளவர்கள்' என்று எதிர்க்குரல் கொடுத்தார்.
உடனே ஜிம் மார்வல் கோபத்துடன், 'விஞ்ஞானிகளை விட கதாசிரியர்கள் எந்த விதத்தில் அதிக அறிவு படைத்தவர்கள்? ஒரு உதாரணம் கூறுங்களேன்' என்றார்.
'விஞ்ஞானிக்கு புற உலகில் கண்களுக்கு தெரியும் பசிபிக் கடல், இந்துமாக்கடல், கருங்கடல், செங்கடல் போன்றவைதான் தெரியும்.
'ஒரு கதாசிரியனோ, மனித உள்ளங்களில் மறைந்து கிடக்கும் துன்பக் கடல், இன்பக்கடல், கண்ணீர் கடல் போன்ற பல கடல்களை அறிவான்' என்றார் தாமஸ் ஜாய்சன்.
எப்படி வார்த்தை ஜாலம்ல விளையாடறார் இல்ல! ஆனால், அவர் சொன்னது ரொம்ப உண்மையான விஷயமும் கூட.
சந்தோஷமில்லாத மனதில் கடல்கள் மட்டுமல்ல, எரிமலை, பூகம்பம், சுனாமி எல்லாமே இருக்கும்.
ராஜா பனால்!
இந்தியாவின் சிறப்புகளில் ஒன்று, 'செஸ்' எனப்படும் சதுரங்கம்.
எல்லா அரச சபையிலும் அங்கமாய் இருந்திருக்கிறது இந்த சதுரங்க விளையாட்டு.
இந்த விளையாட்டில், 'செக்மேட்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை அறிந்து இருப்பீர்கள்.
அந்த வார்த்தையை பற்றி அறிவோமா!
கி.மு.,500ல் இந்தியாவில் (கி.பி., அல்ல கி.மு.,) தோன்றிய விளையாட்டு செஸ்.
இருவர் விளையாடும் இவ்விளையாட்டில் இருவருக்கும் ராஜா, ராணி தவிர, காலாட்படை, குதிரை, தேர், யானை என்று, 16 காய்கள் இருக்கும்.
ஒருவர் மற்றவரின் ராஜாவை வீழ்த்துவதன் மூலம் வெற்றியடைய வேண்டும்.
இந்தியர்களிடம் இருந்து இந்த விளையாட்டை முதலில் கற்று கொண்டவர் பாரசீகர்கள்.
அவர்களிடம் இருந்து அரேபியர்கள் கற்றனர். ஸ்பெயினை கைப்பற்றிய அரேபியர்கள், இவ்விளையாட்டை ஐரோப்பாவுக்கு கொண்டு சென்றனர்.
அரசர் என்பதற்கான பாரசீகச் சொல், 'ஷா' அரேபிய 'ஷாமட்' என்பதில் இருந்து, 'செக்மேட்' என்ற வார்த்தை தோன்றியது.
அதன் அர்த்தம், 'அரசன் இறந்துவிட்டான்' - (புட்டுக்கிட்டான் - நட்டுக்கிட்டான் - நாண்டுகிட்டான் - நாக் அவுட்டாயிட்டான்) என்பதாகும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
