
சுற்றுலா தெரு!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, குன்றுகள் நிறைந்த நகரம். இந்நகரில், சில பகுதிகள் மிகவும் உயரமாக அமைந்துள்ளதால், பல ஏற்ற இறக்கமான தெருக்களில், ஏறி இறங்கி தான், அவற்றை அடைய முடியும்.
அப்படி வளைந்து நெளிந்து செல்லும், 'லோம்பார்டு தெரு' மிகவும் பிரபலமானது. பல குறுகலான திருப்பங்கள், வளைவு கள் காரணமாக, இந்த தெரு உலகிலேயே மிகவும் சிக்கலான தெரு, என்ற பெயரை பெற்றுள்ளது.
மேடான குன்று பகுதியில், இதுபோன்று தெரு அமைத்ததற்கு முக்கிய காரணம், பாதுகாப்பு தான். இங்கு நேராக தெரு அமைக்கப்பட்டிருந்தால், வாகனங்களும், பாதசாரிகளும் தடுமாறி விழும் நிலை ஏற்படும்.
இந்த தெரு, பார்வைக்கும் மிக அழகாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, கோடை மற்றும் வசந்த காலங்களில் இந்த தெருவின் இருபுறமும் பூத்து குலுங்கும் செடிகள் கண்ணை கவரும். எனவே, ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகவும், லோம்பார்டு தெரு விளக்குகிறது.
ஓவிய பொக்கிஷங்கள்!
உலகப் புகழ்பெற்ற ஓவியர்களில் ஒருவர் வான்கோ; நெதர்லாந்தை சேர்ந்தவர். 1853ல் பிறந்த இவர், இறைப்பணியில் ஈடுபட்டார். ஓவியம் வரையும் கலைத்திறமையும் பெற்றிருந்தார்.
முதன் முதலாக, 1885ல் அவரது, 'தி பொட்டடோ ஈஸ்டர்' என்னும் ஓவியம் புகழ்பெற்றது. அதன்பின், ஏராளமான ஓவியங்களை வரைந்தார். 1888- - 90ல், சுமார், 2 ஆயிரம் சிறந்த ஓவியங்களை தீட்டினார். இவற்றில் பெரும்பாலானவை, அவர் மன நலம் பாதிக்கப்பட்டு, ஆசிரமம் ஒன்றில் சிகிச்சை பெற்ற சமயத்தில் வரைந்தவை. 37 வயதில் மறைந்தார்.
உயிரோடு இருக்கும் வரை, ஒரே ஒரு ஓவியத்தை தான் விற்பனை செய்திருந்தார். ஆனால், இறந்த பின், அவரது ஒவ்வொரு ஓவியமும், கற்பனை செய்ய முடியாத விலைக்கு விற்றன. தற்போது ஏராளமான ஓவியங்கள், 'வான் கோ' அருங்காட்சியகத்தில், பாதுகாக்கப்பட்டு வருகிறது.
'பீல்டு வித் ஐரிஸஸ் நியர் ஏர்லஸ்' மற்றும் 'தி பெட்ரூம்' போன்றவை வான்கோ-வின் புகழ்மிக்க ஓவியங்களாகும். இவை, பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட்டு வந்தாலும், தற்போது, நிறம் மாறிவிட்டதால் சர்ச்சையை கிளப்பி உள்ளது. கருஞ்சிவப்பு வண்ணத்தில், ஐரிஸ் பூக்கள் தோட்டத்தை, வான்கோ வரைந்திருந்தார். ஆனால், அவை தற்போது நீல நிறமாக மாறிவிட்டன.
இதை ஆய்வு செய்ததில், 'சிவப்பு வண்ணம் காலமாற்றத்தால், பொலிவை இழந்து, இப்படி மாறக்கூடும் என்றும், அருங்காட்சியகத்தில் உள்ள ஒளிமிக்க விளக்குகள் இதற்கு ஒரு காரணமாக இருக்கின்றன' என்று கூறினர் ஆராய்ச்சியாளர்கள்.
இதையெடுத்து அருங்காட்சியக அதிகாரிகள், வான்கோ-வின் புகழ்மிகு படைப்புகளை பராமரிப்பதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.