PUBLISHED ON : ஜூன் 22, 2018

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
உயிர் காற்று!
ஆக்ஸிஜனை கண்டுப்பிடித்த, ஜோசப் பிரிஸ்ட்லி, தன் வாழ்நாளில், 150க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார்; அவற்றில், மிக முக்கியமானது ஆக்சிஜனை கண்டறிந்தது தான்.
ஒரு நாள், சிவப்பு நிற பவுடர் ஒன்றை, ஒரு கண்ணாடிக் குடுவையில் போட்டு சூடாக்கினார் பிரிஸ்ட்லி. அதிலிருந்து, ஒரு வாயு கிளம்பியது. எரியும் மெழுகுவர்த்தி ஒன்றை, அந்த குடுவைக்குள் வைத்தார். அது, இன்னும் பிரகாசமாக எரிந்தது. தான் புதிதாக கண்டுபிடித்த அந்த வாயுவை, ஆச்சரியமாக பார்த்தார்.
அவர் பயன்படுத்திய சிவப்பு நிற பவுடர், மெர்குரிக் ஆக்ஸைடு; இது பாதரசமும், ஆக்சிஜனும் இணைந்த கூட்டுப் பொருள். இதை சூடாக்கிய போது, ஆக்சிஜன் பிரிந்து, வாயுவாக வெளிப்பட்டது. அது எரியும் நெருப்பை, இன்னும் பிரகாசமாய் எரியச் செய்ததால், அது தொடர்பான ஆராய்ச்சியை, தீவிரப்படுத்தினார் பிரிஸ்ட்லி.
ஒரு ஜாடியில், ஒரு எலியை வெறுமனே போட்டு மூடி விட்டார்; மற்றொரு ஜாடியில், தான் கண்டுபிடித்த ஆக்சிஜனை செலுத்தி, அதற்குள், மற்றொரு எலியை போட்டு மூடினார். சிறிது நேரத்திற்குப் பின், இரண்டு ஜாடியையும் திறந்துப் பார்த்தார்.
முதல் ஜாடியில் இருந்த எலி, இறந்து கிடந்தது; ஆக்ஸிஜன் செலுத்தப்பட்ட ஜாடியில் இருந்த எலி, துள்ளி குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.
சாதாரண காற்றில் இருந்த ஆக்ஸிஜன் தீர்ந்து போனதால், முதல் எலி மரணமடைந்தது என்பதை, இதன் மூலம் கண்டறிந்தார். மனிதனும் மற்ற உயிரினங்களும் உயிர் வாழ, தான் கண்டறிந்த ஆக்ஸிஜன் தான் காரணம் என்ற முடிவுக்கு வந்தார். இதை தொடர்ந்து, ஆக்சிஜனை, நேரடியாக சுவாசித்த போது, அவருக்கு புத்துணர்ச்சி கிடைத்தது.
அதனால், உடல் தளர்ச்சி, உடல் பலவீனம் போன்ற சூழ்நிலைகளில், ஆக்சிஜனை சுவாசிப்பது நல்லது என்று அறிவித்தார்.
மற்ற உயிரினங்களைப் போலவே, மரங்கள், தாவரங்களும் சுவாசிக்கின்றன என்பதையும், கண்டுபிடித்தார்.
அதற்காக, ஒரு தாவரத்தை, மண்ணோடு பெயர்த்து எடுத்து. அதை, ஒரு ஜாடிக்குள் போட்டு மூடினார். சூரிய ஒளி படுமாறு வைத்தார்.
ஒரு மாதம் வரை, அந்த தாவரத்தின் வளர்ச்சியை கண்காணித்தார். அந்த தாவரம் வாடிப் போகாமல், செழிப்பாக இருந்தது. அந்த தாவரத்தை, மேலும் ஆராய, எரியும் மெழுகுவர்த்தியை அந்த ஜாடிக்குள் நுழைத்தார். அது, இன்னும் பிரகாசமாக எரிந்தது. அப்படியானால், அந்த ஜாடியில் ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்து கொண்டார்.
தொடர்ந்து, ஒரு எலியை அந்த ஜாடிக்குள் விட்டு மூடினார்.எலியும் உற்சாகமாக, அங்கும் இங்கும் ஓடியது. அப்போது தான், மரங்கள், தாவரங்கள் போன்றவை, ஆக்ஸிஜனை வெளியேற்றுவதை கண்டறிந்தார்; இப்படித்தான், ஆக்சிஜன் கண்டுப்பிடிக்கப்பட்டது.
பயனுள்ள டிப்ஸ்!
* கண்டதையும் சாப்பிடுவது, கண்ட நேரத்திலும் சாப்பிடுவது; சாப்பிடாமல் இருப்பது ஆகியவை, பெரும்பாலான வயிற்று சங்கடங்களுக்கும் காரணம்.
* குறைந்த அளவு காரத்துடன், புளியம் பூவையும், கொழுந்தையும் அரைத்து, உணவுடன் சாப்பிட்டு வந்தால், பித்தம், வயிற்று வலி, பசி மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும்.
* வயிற்று உபாதைகள் மற்றும் சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள், காராமணியை வேக வைத்து, சுண்டலாக சாப்பிட்டு வந்தால், நோய் குணமாகும்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு!
