தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாந்தோப்புல...

மாந்தோப்புல...

மாந்தோப்புல...


PUBLISHED ON : ஜூன் 22, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சந்தனும், கார்த்திக்கும், எட்டாம் வகுப்பு படித்தனர். சந்தன் படிப்பில் கெட்டிக்காரன்; அனைத்துப் பாடங்களிலும் முதலிடம் பெறுவான். ஆசிரியர்கள் அவனை பாராட்டி, பரிசு கொடுப்பர்.

சந்தன் மிகவும் ஏழை; அவன் தந்தை விவசாயி; உடுத்திக் கொள்ள, நல்ல துணிமணி கிடையாது; பல நாட்கள் பட்டினியாகவே பள்ளிக்கு வருவான்.

கார்த்தியோ, பணக்கார வீட்டுப் பையன்; மிகவும் துஷ்டன்; படிப்பில் மகா மக்கு; அவனைத் திட்டாத ஆசிரியரே இல்லை; திருட்டு,பொய் சொல்லுதல் போன்ற, பல கெட்ட பழக்கங்கள் உண்டு.

ஆசிரியர்கள், சந்தனை புகழ்வதையும், தன்னைத் திட்டி தீர்ப்பதையும் மனத்திற்குள் வெறுத்தான் கார்த்திக்.

'எப்படியும் பழி வாங்க வேண்டும்' என நினைத்தான். கார்த்தியின் குணங்கள், சந்தனுக்கு தெரியும் என்றாலும், வலிய வந்து பேசும் நண்பனை நிராகரிக்க முடியவில்லை.

ஒரு நாள் -

சனிக்கிழமை பள்ளி விடுமுறை-

''சந்தன்... திங்கள் கிழமை மாதத்தேர்வு ஆரம்பமாகுது ;வர்றியா தோப்புப் பக்கம் போய்ப் படிப்போம்...'' என்றான் கார்த்தி.

சந்தன் வீடு மிகவும் சிறிய ஓட்டு வீடு; பல நேரங்களில் வெளியில் சென்று தான் படிப்பான்.

எனவே, இருவரும் மாந்தோப்புக்கு சென்றனர்.

மாமரங்கள் பழுத்து நின்றன.

''அடடா... என்ன அருமையான பழங்கள்; இந்த மரத்தின் பழங்கள் மிகவும் சுவையாக இருக்கும்; அந்த மரம் கற்கண்டு போல் இனிக்கும்; அது காசா லட்டு, இது சப்பட்டை, அந்த பெரிய மரம் கிளிமூக்கு...''

'''உனக்கு எப்படி இந்த பழங்களின் சுவை தெரியும்...''

'இந்த மாந்தோப்பு என் மாமாவோடது; ஒவ்வொரு பழத்தையும் ருசி பார்த்திருக்கேன்...''

''சரி... மரத்து நிழல்ல அமர்ந்து படிக்கலாம் கார்த்தி...''

''உனக்கு மரம் ஏறத் தெரியுமா சந்தன்...''

''தெரியாது ...''

''நா ஏற சொல்லித் தர்றேன்...''

''எதுக்கு மரம் ஏறணும்...''

''ரெண்டு பழம் பிடுங்கிச் சாப்பிடலாம்...''

''ஐயய்யோ அதெல்லாம் தப்பு...''

''தப்பு ஒண்ணுமில்லே... தோப்பே என் மாமாவோடது தான்; பயப்படாதே; ஒண்ணும் சொல்ல மாட்டார்.

''மாமரம் ஒன்றின் கிளையிலே ஏற்றி விட்டு, 'இப்படி தான் ஏறணும்; கொம்பைப் பிடி, ஜாக்கிரதை. வேணும்கிற அளவுக்குப் பழத்தைச் சாப்பிடு; கொஞ்சம் காயானத கீழே பிடுங்கிப் போடு, வீட்டில போய் சாப்பிடலாம்...''

''நீ எங்க போற...''

''அதோ இருக்கிற பெரிய மரத்துல ஏறி பழம் பறிக்கிறேன்...''

சந்தன், பல பழங்களைப் பறித்து, கீழே போட்டான்; ஒரு பழத்தைப் பிடுங்கிக் கடித்துச் சுவைத்து தின்றான்.

அப்போது விடுபட்ட அம்பாக அங்கிருந்து சென்ற கார்த்தி, குடிசையில் அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்த காவல்காரனை தட்டி எழுப்பினான்.

''ஐயா... ஐயா... காவல்காரரே... சீக்கிரம் எழுந்திருங்க...''

''என்ன தம்பி ஏன் கூப்பிட்டே...''

''ஏய்யா... இப்படி பகல்ல துாங்கிக்கிட்டு இருந்தா, எவனாவது திருட்டுப்பய , பழங்கள பிடுங்கிக் கிட்டுப் போயிட மாட்டானா...''

''இந்த குப்புச்சாமி காவல்னா ஊரே பயப்படும்; எவன் பட்டப் பகல்ல வந்து திருடுவான்...'' என்றவாறே, எழுந்து உட்கார்ந்தான்.

''உங்க அப்பன் ஒருத்தன் அதோ அந்த மரத்துல திருடிக்கிட்டு இருக்கான் போய்ப் பாருங்க...'' என்று கூறி, வேகமாக நகர்ந்தான்.

''டேய்... எந்த திருட்டு நாய்டா என் தோப்பிலே வந்து களவாடுது...'' என்று, ஏகவசனத்தில் திட்டியபடியே, சந்தன் ஏறியிருந்த மரத்திற்கு வந்தான்.

''காவல்காரரே திட்டாதீங்க...''

''திருட்டுப்பயலைத் திட்டாம, பூமாலை போட்டா வரவேற்பாங்க; கீழே இறங்கி வாடா; உன் முதுகுத் தோலை உரிக்கிறேன்...''

''நான் யார் தெரியுமா... கார்த்தியோட நண்பன்; அவன் அதோ அந்த மரத்திலே...''

''இன்னொரு திருடனா...'' என்றபடி மரத்தைப் பார்த்தான் ஆள் இல்லை...

''திருடுறதிலே பொய்யுமா சொல்றே...''

''கார்த்தியின் மாமாவோட தோப்புத்தானே...''

''இல்லே... உங்க அப்பன் வீட்டு தோப்பு; இறங்குடா திருட்டுப்பயலே...''

''கீழ்கிளைக்கு வந்த சந்தனின் தலைமுடியை கொத்தோடு பிடித்துத் துாக்கி, இரண்டு அறை விட்டான்; பின், அவனது சட்டையைக் கழற்றி, அதனால், கையைக் கட்டி, மரத்தோடு கட்டி வைத்தான்.

''ஐயா... ஐயா... என்ன விட்டிருங்கய்யா தெரியாம செஞ்சிட்டேன்...''

''விட மாட்டேன்; உன்ன தேடி, வீட்டிலேர்ந்து ஆள் வரட்டும்... உன் அப்பா பெயர் என்ன...''

''நடராஜன்...''

''திருட்டுப் பிள்ளைய பெத்து வச்சிருக்கான் பாரு...'' என்று, மேலும் இரண்டு அறை விட்டான்.

இவற்றை எல்லாம் புதர்மறைவிலிருந்து, பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கு, மகிழ்ச்சி தாங்க முடியல.

'விர்'ரென்று ஊருக்குள் சென்றான்.

எதிரில் நண்பர்களுடன் சுரேஷ் வந்து கொண்டிருந்தான்.

''சுரேஷ்... உனக்கு சேதி தெரியுமா... நம்ம சந்தன் மாந்தோப்பில மாம்பழம் களவாண்டிருக்கான்; காவல்காரன் கிட்ட வகையா மாட்டிக்கிட்டான்; அவன மாமரத்திலேயே கட்டிவச்சு அடிச்சிக்கிட்டு இருக்கான்.

''சந்தன் நல்ல பையனாச்சே... அப்படியெல்லாம் திருட மாட்டானே...''

''நான் பொய் சொன்னாலும், நீயே வந்து பார்...''

''சரி... வா போவோம்...''

''இன்னும் நம்ம பசங்க நாலு பேரை கூட்டிப் போவோம்; அப்பதான், காவல்காரன் பயந்து போய், சந்தனை விடுவிப்பான்.''

பிரேம், பிரவீன், வினோத், அமரன், பிரபு, ஜீவா என, பத்து மாணவர்களின் வீடுகளுக்கும், வகுப்பு ஆசிரியர் வீராச்சாமி வீட்டிற்கும் சென்று கூறினான்.

பத்துப் பையன்களை திரட்டி சென்ற கார்த்தி, தொலைவில் நின்றபடி அவர்களை அனுப்பினான்.

பரிதாபமாக அழுதபடி நிற்கும் சந்தனை பார்த்தனர் பையன்கள். இவர்களைக் கண்ட காவல்காரனுக்கு மேலும் கோபம் வந்தது.

''என்னடா படை திரண்டு வந்து பையனை விடுவிக்கலாம்ன்னு பாக்கிறீங்களா... வெட்டிப் புடுவேன்; ஜாக்கிரதை...'' அரிவாளைத் துாக்கிக் காண்பித்தான்.

''ஐயா... மன்னிச்சிடுங்கய்யா... தயவு செஞ்சு அவனை விட்டிருங்கய்யா...'' என்று சொன்னான், ஜீவா.

''ஒரு நாள் செஞ்சா விட்டிரலாம்; இவன் பலநாள் திருடின பய; வகையா இன்னிக்கு மாட்டிக்கிட்டான்...''

''இனிமே வரமாட்டான்யா; நாங்க உறுதி அளிக்கிறோம்...'' என்றான், பிரவீன்.

''அதெல்லாம் முடியாது; இவன் அப்பா வரணும்...'' என்றான் காவல்காரன்.

அமரனும், பிரபுவும் ஓடிச் சென்று, சந்தனின் தந்தையைக் கூட்டி வந்தனர்.

நடராஜனை கண்ட காவல்காரன், ஏகவசனத்தில் பேச ஆரம்பித்தான்.

''ஏண்டா திருட்டுப் பிள்ளையப் பெத்து வச்சிருக்கீங்க... பத்து ரூவா கொடுத்து, மாம்பழம் வாங்க கதியில்லையா... இனிமே, உன் மகன் தோப்புப் பக்கம் வந்தான்னா... காலை வெட்டிப் பிடுவேன்...''

மன்னிப்பு கேட்டுக் கொண்டார், நடராஜ்.

பையனை அவிழ்த்து விட்டார், காவல்காரர். அமைதியாகக் சந்தனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற தந்தை, 'இனிமே திருடுவியா... திருடுவியா...' என்று சொல்லி செம சாத்து சாத்தினார்.

சந்தன் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.

மறுநாள் -

பள்ளியில் இந்த செய்தி பரவியது. நண்பர்களும், ஆசிரியர்களும் அவனை விசாரித்தது, அவமானமாய்ப் போய் விட்டது.

நடந்த உண்மையை கூறினான். ஏற்கனவே, கார்த்தியின் குணம் தெரியும் என்பதால், ரெண்டு போடு போட்டார் தலைமையாசிரியர்.

பெரியவர்கள் எதற்கு, கெட்ட நண்பர்களின் சகவாசம் கூடாது என சொல்கின்றனர் என்பதை உணர்ந்தான், சந்தன்.

குட்டீஸ்... கெட்ட நண்பர்கர்களோடு பழகக்கூடாது; அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்கக்கூடாது; அவர்கள் உட்காரும் இடத்தில் உட்காரக்கூடாது. நல்ல நண்பர்களுடன் பழகுங்க...நல்லவர்களா இருங்க... சரியா...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us