PUBLISHED ON : மார் 11, 2011

அனைவருக்கும் எனது அன்பு கண்ணின் கண்ணே!
குழந்தைகளை 'கண்ணே' என்று பெற்றோர் கொஞ்சுவர். அந்த கண்ணின் கண்ணே என்பது குழந்தைகளின் கண்கள் தானே.
கண்கள் ஒரு மனிதனின் மிக பெரிய சொத்து அல்லவா! அதை காப்பது பெற்றோர்களின் பெரும் பொறுப்பு. சத்துக்குறைவு, பழக்க வழக்கங்களில் உள்ள பிரச்னை காரணமாக பார்வை குறைபாடுகள் வரலாம்.
பெரும்பாலான குழந்தைகள் 'டிவி'க்கு மிக அருகில் இருந்து பார்ப்பதினாலேயே கண்ணில் உலர்வுத்தன்மை அதிகமாகி தலைவலி வந்து விடுகிறது.
அதை கவனிக்காமல் விடும்போது பார்வை கோளாறாகவும் மாறி விடுகிறது. படிக்கும் போது புத்தகங்களை சரியான தூரத்திலும் 'டிவி'யை குறைந்தது நான்கு அடி தூரத்தில் இருந்தும் பார்க்கும்படி பெற்றோர் தான் செய்ய வேண்டும்.
சாப்பாட்டில் காய்கறி, பழங்கள் கீரைக்கு சரியான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகள் எதையும் இமைக்காமல் நீண்ட நேரம் பார்க்க அனுமதிக்க கூடாது. இமைப்பது குறையும்போதும் கண்களில் ஈரத்தன்மை குறைந்து வறட்சி ஏற்பட்டு தலைவலி வர வாய்ப்புகள் அதிகம். கண்களை கசக்காமல் கண்ணீர் வர குழந்தைகள் அழுவதும் கூட கண்களுக்கு ஆரோக்கியம் தான். ஆனால், இமைக்காமல் 'டிவி'யின் அருகில் சென்று பார்ப்பதை தவிர்த்தாலே தலைவலி முதல் பார்வை கோளாறு வரை வருவதை தவிர்க்கலாம்.
பிஸ்கெட்டுக்கு சர்க்கரை!
சாயந்திரம் வீட்டுக்கு வந்தவுடன், நாம் தேடுவது ஸ்நாக்ஸ். சத்திற்கு சத்து, வித வித டேஸ்ட். எளிதில் கிடைக்க கூடியது. நிறைய வாங்கி வைத்து கொள்ளலாம். அவ்வளவு எளிதில் கெடாது என்று பற்பல விதங்களில் டாப் ஸ்நாக்ஸாக இருப்பது பிஸ்கெட்ஸ்!
பிஸ்கெட் டப்பாவில் பிஸ்கெட்டுகளை போட்டு வைத்தால் இரண்டு நாட்களுக்குள் மொறுமொறுப்பு போய்விடுகிறது. குழந்தைகள் பிஸ்கெட்டை எடுத்துவிட்டு சரியாக மூடுவதில்லை. இப்படியெல்லாம் பிஸ்கெட்டில் பிராப்ளம் இருக்கிறது. பிஸ்கெட்டை மொறுமொறுவென பிரச்னை இல்லாமல் பாதுகாக்க வழி... வழி... அதுவும் இருக்கிறது!
பிஸ்கெட் டப்பாவில் கொஞ்சம் சர்க்கரையை கொட்டி வையுங்கள் அல்லது சர்க்கரை டப்பாவில் பிஸ்கெட்டை வையுங்கள். மொறுமொறுப்பு நீடீத்து இருக்கும். அதற்காக டப்பாவை 'பப்ரபான்'னு திறந்து போட்டு விட கூடாது. பிஸ்கெட்டை எடுக்கும் குழந்தைகள் சர்க்கரையை சாப்பிடாமல் பார்த்து கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
இந்தா பிஸ்கெட் டப்பா திற. வேண்டி பிஸ்கெட்டுகளை தட்டில் எடுத்து வைத்து கொள். மிச்சம் வைக்க கூடாது. மறுபடியும் கேட்க கூடாது. டைட்டா மூடிவிட்டு, போய் உட்கார்ந்து சாப்பிடு என்று கூட இருந்தும் கவனித்து கட்டளையிட்டு செய்வதானாலும் செய்யலாம். அல்லது உன் பொருள், உன் கவனம் என்று குழந்தைகளுக்கு புரிய வைத்துவிட்டால், அது உங்களுக்கும், அவர்களுக்கும் ஏன் பிஸ்கெட்டுகளுக்கும் மிக, மிக நல்லது.
தோ... பாருடா... இ-மெயில் இல்லையாம்!
அமெரிக்காவில் ஒரு இளைஞன் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஆபீஸ் பையன் வேலை கேட்டு சென்றான். நான்கு பேர் அவனை ரவுண்டு கட்டி இண்டர்வியூ செய்தனர். எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலை சொன்னதால் அவனுக்கு அந்த உத்தியோகத்தை கொடுத்தார்கள்.
அப்பொழுது, 'நீ எப்போது வேலையில் சேர வேண்டும் என்பதை இ-மெயில் அனுப்புகிறோம். உன் இ-மெயில் ஐ.டியை கொடு?' என்று கேட்டனர்.
அந்த பையன் சொன்னானாம், 'சார் எனக்கு இ-மெயிலும் கிடையாது ஐடியும் கிடையாது, கம்ப்யூட்டரும் கிடையாது' என்று.
அவர்களுக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.
'என்ன இது? இந்த மைக்ரோசாப்டில் வேலை தர போகிறோம் என்கிறோம் இ-மெயில் இல்லையாம் இவனிடம் என்று யோசித்துவிட்டு, பிறகு உனக்கு வேலை கொடுக்க முடியாது, என்று, திருப்பி அனுப்பிவிட்டனர்.
அப்போது அந்த பையன் கையில் 100 டாலர் தான் இருந்தது. அதை வைத்து தான் அவன் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். அங்கேயே சாலையின் ஓரத்தில் ஒரு சின்ன கடையை அவன் தொடங்கினான். கிடுகிடுவென்று வளர்ந்து அந்த கடை ஒரு பெரிய பிஸினஸ் சென்டராகிவிட்டது.
நம்ம சினிமாவில் ஹீரோ ஒரே பாட்டில் பணக்காரனாகி விடுவது போல், நூற்றுக்கணக்காண கடைகளை திறந்து அவன் பெரும் பணக்காரனாகி விட்டான்.
அவனை ஒரு பிஸினஸ் பத்திரிகைகளில் பேட்டி எடுத்தனர். 'இந்த கட்டுரையை உங்களுக்கு இ-மெயில் அனுப்புகிறோம். உங்கள் இ-மெயில் ஐடியைக் கொடுங்க' என்று அந்த பத்திரிகையாளர்கள் கேட்டார்கள்.
'எனக்கு இ-மெயில் ஐ.டி இல்லையே' என்று அவர் சொன்னார்.
அப்பொழுது அந்த பத்திரிகையாளர், 'கம்ப்யூட்டரும், இ-மெயிலும் இல்லாமலேயே நீங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கீங்க. இ-மெயில் இருந்திருந்தால் நீங்கள் எங்க இருப்பீங்கன்னு தெரியுமா?' என்று கேட்டார்.
அப்போது நம்ம ஆள் சொன்னார், 'எனக்கு நன்றாக தெரியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆபீஸ் பையனாக இன்னமும் இருந்திருப்பேன்!' என்றார்.
எனவே, நமக்கு இ-மெயில் ஐடி இருக்கா, கம்ப்யூட்டர் இருக்கா என்பது முக்கியமில்லை படிப்பு தான் முக்கியம். தினமும் பாடப் புத்தகம் படிப்போம். மீதப்பட்ட நேரத்தில் அறிவு வளர்க்கும் புத்தங்களை படிக்கவும் நேரம் ஒதுக்குவோம்!
உள்ளங்கை விமானம்
போர் முனையில் எதிரிகளை உளவு பார்ப்பதற்காக உள்ளங்கை அளவுக்கு ஒரு உளவு விமானத்தை கலிபோர்னியாவில் உள்ள ஒரு கம்பெனி தயாரித்து உள்ளது. அமெரிக்க ராணுவத்துக்காக இந்த விமானம் தயாரிக்கப்பட்டது சிட்டுக்குருவி மாதிரி இது அளவில் சிறியது. பேட்டரியால் இயங்க கூடியது.
இந்த விமானத்தை தயாரிப்பதற்கு அமெரிக்க ராணுவம் ஏரோவிரேன் மெண்ட் என்ற கம்பெனிக்கு 20 கோடியை கொடுத்து உள்ளது. இந்த உளவு விமானம் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து விடும். மின்சார கம்பியில் உட்கார்ந்து கொள்ளும். அங்கு இருந்தபடி எதிரிகள் அனுப்பும் ஆடியோ, வீடியோ செய்திகளை உளவு பார்க்கும். இந்த விமானத்தில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். இது மணிக்கு 17 கி.மீ வேகத்தில் பறக்கும். இது ஏறவும், இறங்கும் செய்யும். இதில் தொலை தூரத்துக்கு தகவல்களை அனுப்பும் வசதியும் இருக்கிறது.
அன்புடன் அங்குராசு.
***
