PUBLISHED ON : செப் 21, 2018

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்துக் கொண்டாடுவோம்!
நம்ம அரிசி! நம்ம வெங்காயம்! நம்ம மிளகா!
தமிழகத்தில், பிரதான உணவு அரிசி. இதை, மூன்று வேளையும் சாப்பிடுவதால், வளர் பருவத்தினர் உடல் எடை கூடும்; அதனால், சர்க்கரை நோய் தாக்கும் அபாயம் அதிகரிக்கும். புழுங்கல் அரிசியோ, பச்சரிசியோ, 'பாலீஷ்' செய்ததே புழக்கத்தில் உள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.
தற்போது உணவு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது!
உமி மட்டும் நீக்கி, தீட்டப்படாத கைக்குத்தல் புழுங்கல் அரிசி, உடல் நலனுக்கு உகந்தது. புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச் சத்து உள்ளதால் நோய் நெருங்காது; உடல் எடை கூடாது.
நார்ச்சத்து இதய நோயைத் தவிர்க்கும்; மலச்சிக்கலை நீக்கும்; பித்தப்பையில் கல் உருவாகுவதை தடுக்கும்; ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
இதில் உள்ள, 'மங்கனீஸ்' சத்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். குடல் புற்றுநோயை தவிர்க்கும்; தைராய்டு சுரபிகளை செயல்பட வைக்கும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, உகந்தது; மார்பகப் புற்றுநோய் தவிர்க்கும்.
அரிசியை தீட்டி சத்துக்களை, வெளியில் விட்டு, வெறும் மாவுச் சத்தை மட்டும் உண்பது கெடுதல். உடலுக்கு சக்தி கிடைத்தாலும், 'கலோரி' கூடுதலாகும். ரத்த சர்க்கரை அதிகரிக்க காரணமாகிவிடும்.
பச்சரிசியில் கொழுப்பு உள்ளது. ஒல்லி உடம்புக்கு ஏற்றது. செரிமான பிரச்னை இருந்தால், பச்சரிசியை தவிர்க்கவும். மூங்கில் அரிசி, ஊட்டச்சத்து மிக்கது; புரதம், வைட்டமின் - டி, நார்ச்சத்து கொண்டது; சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்; உடல் எடையையும் மட்டுப்படுத்தும்.
பாசுமதி அரிசி, நார்ச்சத்து நிரம்பியது; தனி மணம், சுவை கொண்டது.
இயற்கை முறையில் விளைந்த பெரிய அரிசி ரகமே நல்லது; சுவையானது. ஆனால், சமைக்க அதிக நேரமாகும். சன்ன ரக அரிசியில், பலன் குறைவு.
கைக்குத்தல் அரிசியை சமைத்து, வடித்த சோற்றில், இரவில் நீர் ஊற்றி, மறுநாள் காலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கலந்து, கஞ்சியாக குடிப்பது கிராம வழக்கம்! வயல், காடுகளில், வேலை செய்வோர், உடல் குளிர சாப்பிடுவர். இதை, 'காலை அமிர்தம்' என்பர். இதில் அடங்கிய சத்துக்கள் ஏராளம்.
வெங்காயம்: இதன் மருத்துவ குணம், உடலை பாதுகாக்கும். உடலில் அடிப்பட்டால் தாராளமாக சாப்பிடலாம். கொழுப்பைக் கரைத்து, இதயத்தை பாதுகாக்கும். சின்ன வெங்காயத்தை, பச்சையாக சாப்பிட்டால், முழு பலன் கிடைக்கும். சமைத்தால் சத்துக்கள் குறையும். நறுக்கி நெடுநேரம் வைக்க கூடாது.
நோய் எதிர்ப்பு சக்தியை வெங்காயம் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். சுவாச கோளாறுகளைக் குறைக்கும். வாயில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். குடல் பிரச்னைகளைத் தடுக்கும்.
பச்சை மிளகாய்: செரிமான சக்தியை கூட்டும், குடலில் தங்கும் நச்சுகளை அகற்றும்; புற்றுநோயை தடுக்கும். அளவோடு உண்டால் நன்மை கிடைக்கும்!
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
