தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 08, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அனைவருக்கும் எனது அன்பு.

தமிழ்நாட்டு குழந்தைகளுக்கு தமிழே தெரியவில்லை!

'பூரதம்' என்ற தொண்டு நிறுவனம் 2010-ம் ஆண்டிற்கான கல்வி இறுதி அறிக்கையை தயாரித்து வெளியிட்டது. அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவர்கள் விகிதம் உயர்ந்து உள்ளது. ஆனால், தாய் மொழியையே படிக்க முடியாமல் குழந்தைகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

6 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், குழந்தைகளின் படிக்கும் திறன் மிகக் குறைந்த அளவில் உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் ரேங்க்தான் மிக குறைவாக உள்ளது. கணக்கு போடும் திறன் மாணவர்களிடம் மிக மோசமான நிலையில் உள்ளது.

3-ம் வகுப்பு படிக்கும் 80 சதவீத குழந்தை களுக்கு சாதாரண கூட்டல், கழித்தல் கூட தெரியவில்லை. கணித பாடத்தில் தமிழக பள்ளி சிறுவர்கள் கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேச மாநிலத்தை விட குறைவாக உள்ளனர். 48 சதவீத முதல் வகுப்பு மாணவர்கள் அ,ஆ,இ., தமிழ் எழுத்துக்கள் புரிந்து கொள்கின்றனர். 49 சதவீத 2-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வார்த்தைகளை படிக்கின்றனர். 31 சதவீத ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டாம் வகுப்பிற்குரிய தமிழ் கதையை படிக்க கூடியவர்களாக உள்ளனர் என்று கல்வி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2005-ம் ஆண்டு முதல், மாணவர்களின் படிக்கும் திறன் கூடவில்லை. கல்வி தொடர்பான இந்த ஆய்வு அறிக்கையை 24 தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 611 ஊழியர்கள் தயாரித்தனர். மாநிலம் முழுவதும் உள்ள 830 கிராமங்களில் 26 ஆயிரத்து 19 குழந்தைகளிடம் நேரில் ஆய்வு நடத்தி தயாரித்து வெளியிடப் பட்டது.

எப்படி முடிவெடுக்கணும்!

ரயில் பெட்டி ஒன்றில் ஒரு இளைஞனும் அவனது தந்தையும் அமர்ந்திருந்தனர். அவர்கள் எதிரே ஒரு ஆள் அமர்ந்திருந்தார். வந்ததிலிருந்து அந்த இளைஞனின் செய்கைகள் அந்த ஆளுக்கு விநோதமாகப்பட்டது.

அந்த இளைஞன் ஒவ்வொன்றையும் பார்த்து சிரித்து கொண்டே இருந்தான். ரயில் கிளம்பியது. அந்த இளைஞன் இன்னும் உற்சாகமாயிட்டான். 'அப்பா வயலை பாருங்க', 'அப்பா மரத்தை பாருங்க' என்று கண்ணில் படுவதையெல்லாம் அப்பாவிடம் காட்டி பரவசப்பட்டு கொண்டிருந்தான். பத்து வயது சிறுவன் இப்படி பரவசப்பட்டால் வித்தியாசமாக தெரியாது. ஆனால், ஒரு இருபது வயது இளைஞன் இப்படி வேடிக்கை பார்த்து கொண்டாடுவது எதிர் சீட் ஆளுக்கு ரொம்பவே வினோதமாக பட்டது.

'பாவம் மனநிலை சரியில்லாத மகனை அழைத்து போகிறார், என்று மனதில் நினைத்து கொண்டார். நினைத்ததோடு நிற்கவில்லை. அந்த தந்தையுடன் பேச்சு கொடுத்தார். 'பையனுக்கு ரொம்ப நாளா இப்படி இருந்ததா?, என்று ஆரம்பித்தார்.

'எதை கேட்கிறீங்க?' எதிர் கேள்வி கேட்டார் அப்பா. 'இல்ல பையன் கொஞ்சம் வித்தியாசமா இருக்கானே... எனக்கு தெரிஞ்ச மனோதத்துவ டாக்டர் இருக்கார் அவர் மனநோய் எல்லாம் நல்லா பார்ப்பார்...' என்றார்.

'மனநோயா யாருக்கு? என்ன சொல்றீங்க?' தந்தை கொஞ்சம் படபடப்பானார்.

'பையனுக்குத்தான் இந்த வயதுல அஞ்சாங் கிளாஸ் பையன் மாதிரி நடந்துக்கிறானே... அதான் டாக்டரை பார்க்கலாமேனு சொன்னேன்...' என்றார்

'நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவனுக்கு மனநோய் இல்ல. என் பையனுக்கு பிறவியில் இருந்தே கண்ணு தெரியாது. போன வாரம்தான் ஆபரேஷன் செஞ்சு கண்ணை சரி பண்ணோம். இன்னைக்குத்தான் கட்டை பிரிச்சோம். இப்போ தான் உலகத்தை முதல் தடவையாக பார்க்கிறான்!' என்று அவர் சொன்னபோது எதிர் சீட் ஆசாமிக்கு தன்னுடைய தவறான அவசர முடிவு புரிந்தது.

''அவசரப்பட்டு முடிவெடுக்காதே ஆராய்ந்து முடிவெடு!''

போன் என்றால் என்ன?

சென்னையிலும், பிற நகரங்களிலும் ஏன் கிராமங்களிலும் அங்கிங்கெணாத படிக்கு எங்கும் ரீங்காரித்து கொண்டிருப்பது செல்போன். ஒருவரிடம் இரண்டு செல்போன் என்பதெல்லாம் கூட இன்னும் கொஞ்ச காலத்தில் சாதாரணமாகி விடும் போலிருக்கிறது. நம் நாட்டில் தொலை தொடர்பு புரட்சி இப்படி நடந்து கொண்டிருப்பது ஒருபுறம்; இன்னும் பொது தொலைபேசி வசதி கூட இல்லாமல் 62, 443 கிராமங்கள் உள்ளனவாம். இது எப்படி இருக்கு.

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'கொங்குநாட்டு சாய்குழம்பு' செய்முறை நேரம்.

தேவையான பொருட்கள் (4 பேருக்கு)

சிவப்பு பூசணி(100 கிராம்), சேனைக் கிழங்கு-100 கிராம், அவரைக்காய் - 150 கிராம், சர்க்கரை வள்ளி கிழங்கு-100 கிராம், கத்திரி க்காய்-100 கிராம், பீர்க்கங்காய்-100 கிராம், காய்ந்த மொச்ச கொட்டை-50 கிராம், கருப்பு கொண்டை கடலை-25 கிராம், கருவடகம்-1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள்-1 டீஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், உ.பருப்பு-1 டீஸ்பூன், கடுகு-1 டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, பச்சை மிளகாய் - இரண்டு, காய்ந்த மிளகாய்-ஒன்று, உப்பு மற்றும் கறிவேப்பிலை மற்றும் எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

சேனைக்கிழங்கு, சிவப்பு பூசணி கத்திரிக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பச்சை மிளகாய் இவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, மொச்சை கொட்டையை கலந்து புளி கரைசல், உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும். இத்துடன் வறுத்த கருவடகம் சேர்க்க 'கம கம' காய் குழம்பு தயார்.

சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான சத்தான குழம்பு இது.

மல்லிகை பூ மணமே!

பூக்களில் மல்லிகை ஒரு தேவதை. அதன் நிறம், நறுணம், வடிவம் மிக ரம்மியமானது. மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயன பொருள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. நரம்புகளின் செல்களில் உள்ள கபா எனப்படும் ரசாயன பொருளை அதிகரிக்கும் சக்தி மல்லிகை பூவின் வாசனைக்கு உள்ளது.

இது பதட்டத்தை குறைக்கிறது. உடலுக்கு அமைதியை தருகிறது. இந்த கபா என்ற ரசாயன சக்தி தூக்க மாத்திரை போல செயல்படுகிறது. இது உடலுக்கு ஓய்வு தருகிறது.

என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us