PUBLISHED ON : ஏப் 08, 2011

ஏரிக்கரையில் காகம் ஒன்று கவலையுடன் நின்று கொண்டிருந்தது. அந்தக் காகத்தைப் பார்த்த மைனா அதன் அருகே வந்தது.
''காகமே! நீ எதற்காக கவலையுடன் இருக்கிறாய்? உனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?'' என்று கேட்டது.
''மைனாவே நான் வசிக்கிற இடத்தில் கழுகு ஒன்று வசித்து வருகிறது. அந்தக் கழுகு என்னை அடிக்கடி கொத்தி விரட்டுகிறது. நான் தினமும் அந்தக் கழுகோடு வாழ்க்கைப் போராட்டம் நடத்தி வருகிறேன். அந்தக் கழுகிடம் இருந்து எப்படி தப்பிச் செல்வது என்பதைப்பற்றி நினைக்கும்போது, எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.'' என்றது காகம்.
காகத்தைப் பார்த்த மைனாவிற்கு அதன் மீது இரக்கம் ஏற்பட்டது.
''காகமே நீ கவலைப்படாதே... உன் இருப்பிடத்திற்கு என்னை அழைத்துச் செல். நான் அந்த கழுகோடு பேசி உனக்குத் தொல்லைக் கொடுக்காத அளவுக்கு நான் அதனிடம் பேசுகிறேன். உன்னுடைய கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்!'' என்றது மைனா.
''மைனாவே! நீ இவ்வாறு கூறுவது எனக்கு ஆறுதலலிக்கிறது. இதோ இப்போதே நான் உன்னை என்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்!'' என்றது காகம்.
மைனாவை அழைத்துக் கொண்டு தான் வசிக்கிற அரச மரத்திற்கு வந்தது காகம். அங்கே அரச மரத்தடியில் கழுகு கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கழுகைப் பார்த்ததும் காகம் பயத்தால் நடுங்கியது. மைனா கூடவந்த தைரியத்தில் கழுகின் அருகில் போய் நின்றது.
''கழுகாரே! நீர் சர்வ வல்லமைப் படைத்தவர்தான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக ஒன்றுமறியாத காகத்திடம் உமது வீரத்தைக் காட்டுகிறீரே... இது எந்த வகையில் நியாயம்?'' என்று கேட்டது மைனா.
மைனாவின் பேச்சுக்கு கழுகால் பதில் சொல்ல முடியவில்லை. அது மவுனமாகவே நின்று கொண்டிருந்தது.
''கழுகே! ஏன் இப்படி மவுனமாக நிற்கிறாய்? நான் சொல்ல வந்ததைப்பற்றி சொல்லிவிட்டேன். அதற்கு நீ ஏதாவது பதில் கூறத்தான் வேண்டும்!'' என்றது மைனா.
''மைனாவே! நான் காகத்திற்கு துன்பம் கொடுத்து வந்தது உண்மைதான். நான் இனிமேல் ஒருபோதும் காகத்திற்கு துன்பம் கொடுக்க மாட்டேன். இதனை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!'' என்றது கழுகு.
காகத்தைப் பார்த்து, ''காகமே! இந்த கழுகு கூறியதை நீ கேட்டுக் கொண்டாயா? இனிமேல் நீ இந்த அரசமரத்தில் பயமில்லாமல் வாழலாம். இந்தக் கழுகால் உனக்கு எந்தத் துன்பமும் நேராது!'' என்றது மைனா.
''மைனாவே! உன்னுடைய உதவியை நான் என்றுமே மறக்கமாட்டேன். கழுகிற்கு என்மீது இரக்கம் ஏற்பட வைத்து விட்டாய். உனக்கு கோடி கோடிப் புண்ணியம் கிடைக்கும்!'' என்றது காகம்.
''சரி காகமே. நான் வந்த வேலை முடிந்தது. இனி நான் என்னுடைய இருப்பிடத்திற்குச் செல்கிறேன்!'' என்று விடை பெற்று பறந்தது மைனா. அதன் பின்னர் சில நாட்கள் வரையிலும் கழுகு, காகத்திற்கு எந்த விதமானத் தொல்லையும் கொடுக்கவில்லை.
ஒருநாள் காகம் இரைதேடி விட்டு திரும்பி வந்த வேளையில், காகத்தின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது கழுகு.
''காகமே! உன்னிடம் ஒன்றைக் கேட்க வேண்டும் என்று பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. என்னுடைய கேள்விக்கு நீ சரியானப் பதிலைச் சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன்!'' என்றது கழுகு.
''கழுகே! நீ இதுநாள் வரையிலும் எனக்குத் தொல்லைகள் கொடுக்காமல் இருப்பதே நான் பெரும் பாக்யமாக கருதுகிறேன். எனவே, நீ என்னக் கேட்டாலும் அதற்குப் பதில் சொல்ல நான் தயாராக இருக்கிறேன்!'' என்றது காகம்.
''காகமே! நீ புத்திசாலித்தனமாகப் பேசுகிறாய். எனவே, உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. நான் இப்போது உன்னிடம் ஒரு வேலையைச் செய்யச் சொல்வேன். நீ மறுக்காமல் அந்த வேலையை செய்து முடித்துவிட வேண்டும்!'' என்றது கழுகு.
''கழுகே! நீ சொல்கிற வேலை எதுவாக இருந்தாலும், அதனை நான் உடனடியாக செய்து முடித்து விடுவேன். முதலில் என்ன வேலையென்று சொல்!'' எனக் கேட்டது காகம்.
''காகமே! எனக்கு நெடுநாட்களாக மைனாவின் முட்டையை குடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எனவே, மைனாவின் இருப்பிடம் எது என்பதை நீ அறிந்துவா! மைனாதான் உனக்கு நெருக்கமான நண்பனாயிற்றே; அதனால், மைனாவின் இருப்பிடத்தை என்னிடம் அறிந்து வந்து சொல்!'' என்றது கழுகு.
''இவ்வளவுதானே! இதோ இப்போது நான் மைனாவை சந்திக்கிறேன். இந்நேரத்தில் மைனா கோவில் மண்டபத்தின் பக்கமாக இரை தேடிக் கொண்டிருக்கும். அதோடு சென்று அதன் இருப்பிடத்தை அறிந்து வந்து உன்னிடம் தெரியப்படுத்துகிறேன்!'' என்றது காகம்.
''நல்லது காகமே! நீ என்னிடம் தெரிவிக்கிற செய்திக்காக நான் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருப்பேன்!'' என்றது கழுகு.
காகம் உடனே மின்னல் வேகத்தில் அந்த அரசமரத்தை விட்டு பறந்து சென்றது. வெகு விரைவில் கோவில் மண்டபத்தை வந்தடைந்த காகம், அங்கே இரை தேடிக் கொண்டிருந்த மைனாவை சந்தித்தது.
''மைனாவே! உன்னைப் பார்க்கத்தான் வேகமாக பறந்து வந்தேன்!'' என்றது காகம்.
''காகமே! எதற்காக என்னைப் பார்க்க இப்படி வேகமாக வந்தாய்? உனக்கு அந்தக் கழுகு மீண்டும் தொல்லை தருகிறதா?'' என்று கேட்டது மைனா.
''மைனாவே! அதெல்லாம் ஒன்றுமில்லை. இதுவரையிலும் உன்னுடைய இருப்பிடத்தை அறிந்து கொள்ளாமலேயே... நான் நெருக்கமாக பழகி வருகிறேன். இனிமேலும் நான் இப்படியே இருந்தால் நம் நட்பிற்கு அழகில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. எனவே, நான் இன்று உன்னுடைய இருப்பிடத்தை அறிந்து கொள்ளாமல், எங்கும் செல்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். நீ கண்டிப்பாக என்னை உன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்!'' என்றது காகம்.
காகத்தின் கபட நாடகத்தை மைனா அறியவில்லை. உடனே அதற்கு சம்மதித்தது.
''நண்பனே! என்னை நினைத்து நீ ஒரு போதும் கவலைப்பட வேண்டாம். இதோ இப்போதே உன்னை நான் என்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்!'' என்றது மைனா.
மைனாவும் காகத்தை அழைத்துக் கொண்டு, தான் வசிக்கும் பூவரசு மரத்திற்கு வந்தது. அந்த மரத்தில் மைனா அழகிய கூடு கட்டியிருந்தது. மைனாவின் கூட்டில் முட்டைகளும் இருந்தன. அந்த முட்டைகளைப் பார்த்த காகம் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தது.
'அடேயப்பா! மைனா ஏராளமாக முட்டைகளை தன் கூட்டில் வைத்திருக்கிறதே. கழுகு மட்டும் இங்கு வந்து விட்டால் உடனடியாக மைனாவின் முட்டைகளை எல்லாம் அலகினால் கொத்தி உறிஞ்சி குடித்துவிடும். எனவே, நாம் நாளையே அந்த அதிர்ஷ்டக்கார கழுகினை அழைத்து வந்திடவேண்டும்' என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டது காகம்.
''மைனாவே! உன் இருப்பிடத்தை அறிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது நான் போய்வருகிறேன்!'' என்றபடி அந்த இடத்தை விட்டு பறந்து சென்றது.
வேகமாக கழுகு இருக்கும் அரச மரத்தடியை வந்தடைந்தது காகம்.
''கழுகே! நீ அதிர்ஷ்டக்காரன்தான். நீ கூறியபடியே நான் மைனாவின் இருப்பிடத்தை அறியச் சென்றேன். அங்கே மைனா அதன் கூட்டில் ஏராளமான முட்டைகளை இட்டு வைத்திருக்கிறது. பகல் நேரத்தில் அது இரைதேட வேண்டி வெளியே கிளம்பிவிடும். பின்னர் மாலை நேரத்தில்தான் தன்னுடைய கூட்டிற்குத் திரும்பும். அந்த இடைப்பட்ட வேளையில் நாம் எளிதாக மைனாவின் முட்டைகளை கைப்பற்றி குடிக்கலாம்!'' என்றது காகம்.
காகம் இவ்வாறு கூறியதும் கழுகு மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டது. ''காகமே! இப்போதே நாம் இருவரும் அந்த மைனாவின் இருப்பிடத்திற்குச் செல்வோம். அதன் கூட்டில் இருக்கிற முட்டைகளை எல்லாம் நாம் ஆசைதீர சாப்பிடலாம்!'' என்றது கழுகு.
உடனே காகம், கழுகை அழைத்துக் கொண்டு மைனாவின் இருப்பிடமான பூவரசு மரத்திற்கு வந்தது. அங்கே மைனாவின் கூடு காணாமல் போயிருப்பதைக் கண்டதும் திடுக்கிட்டது காகம்.
''கழுகே! இந்த மரத்தில்தான் மைனாவின் கூடு இருந்தது. அந்தக் கூட்டில் ஏராளமான முட்டைகளும் இருந்தன. இப்போது அந்த முட்டைகளும், கூடும் காணாமல் போயிருப்பது வியப்பை அளிக்கிறதே!'' என்றது காகம்.
''காகமே! நீ சொல்வதெல்லாம் உண்மைதானா?'' என்று கேட்டது கழுகு.
''ஆமாம் கழுகே! நான் உண்மையைத்தான் சொல்கிறேன். இதோ இந்த பூவரசு மரத்தின் மரக்கிளையில் மைனாவின் கூடு இருந்ததையும், கூடு நிறைய முட்டைகள் இருந்ததையும் நான் கண்ணால் பார்த்தேன். ஆனால், இப்போது மைனாவின் கூடு மாயமாக மறைந்ததுதான் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது!'' என்றது காகம்.
காகத்தின் பேச்சை கழுகு நம்பவில்லை. காகம் நம்மை பழிக்குப்பழி வாங்கவே இப்படியொரு தவறான தகவலை தருகிறது என்று கழுகு தவறாக புரிந்து கொண்டு. காகத்தை பார்த்து ஆத்திரமடைந்தது.
''காகமே! என்னை நீ வேண்டுமென்றே ஏமாற்றுகிறாய். பழைய பகையினை மனதில் வைத்துக் கொண்டு, எனக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டாய். எனவே, உன்னை நான் சும்மா விடமாட்டேன். இதோ இப்போதே கொத்திக் கொல்கிறேன்!'' என்று காகத்தைக் கொத்தத் தொடங்கியது கழுகு.
அக்காட்சியைப் பார்த்த மைனா தனக்குள் சிரித்துக் கொண்டது. அது சற்றுத் தொலைவில் தன் நண்பர்களோடு நின்று கொண்டிருந்தது.
'நல்ல வேளையாக நான் அந்த காகத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் நண்பர்களின் உதவியோடு, கூட்டை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டேன். இல்லையென்றால் இந்தக் கழுகாலும், காகத்தாலும் எனக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கும்.
'இப்போது கழுகும், காகமும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் அவைகளுக்குள் பேரழிவுதான் ஏற்படும். என்னை ஏமாற்றி கழுகிற்கு உதவி செய்ய நினைத்த காகத்திற்கு, கழுகாலேயே துன்பம் ஏற்பட்டு விட்டது. அதன் செயலுக்குச் சரியான தண்டனைக் கிடைத்து விட்டது' என்று மனதுள் நினைத்துக் கொண்டது மைனா.
***
