PUBLISHED ON : ஏப் 08, 2011

இதுவரை: மின்னல்புரியை நோக்கிச் சென்றவர் பொன்னனும், பூங்குழலியும், ஏழைகளுக்கு உதவும் நோக்கோடு இலவசமாக பல்லக்கில் அமர்ந்து சென்றனர் இருவரும். இனி-
படகோட்டிகள் துடுப்புப் போட்டு படகை செலுத்தும்போது, கஷ்டமும், சிரமமும் தெரியாதிருக்க, ஒருவர் பாட, மற்றவர் 'ஐலசா... ஐலசா' என்று கூடச்சேர்ந்து பாடுவர். அதுபோல, பல்லக்கு தூக்கிகளும், பல்லக்கைத் தூக்கிச் செல்லும் சிரமம் தெரியாதிருக்க பாட ஆரம்பித்தனர்.
ஒருவன் பாட, இன்னொருவன் பதில் சொல்ல, பூங்குழலியும், பொன்னனும், உற்சாகத்துடன் கவனித்தனர்.
அவர்களது பாடலில் 'பல்லக்கை தூக்கிட்டுப் போற நாம என்னைக்கு பல்லக்குலே உக்காந்து போகப் போறோம்கிறது தான்...' என்றான்.
பூங்குழலியும், பொன்னனும் கேட்டனர்; அவர்கள் கண்கள் கலங்கின. இவர்கள் அனைவரது மனதிலும், ராசப்பா சொன்னதுபோல, அந்த குறை இருக்கத்தான் செய்யும். அதை எப்படி தீர்ப்பது?
''பாவம் அப்பா இவங்க!'' என்றாள் பூங்குழலி.
பல்லக்கு தூக்கிகளிடம், பல்லக்கை கீழே வைக்க சொல்லிவிட்டு, பல்லக்கை விட்டு இறங்கினான் பொன்னன்.
''ஐயா! உங்கள் மனக்குறையை நான் தீர்த்து வைக்க விரும்புகிறேன். உங்களில் ஒருவர், பல்லக்கினுள் சென்று அமர்ந்து கொள்ளுங்கள். அவர்களிடத்தில் நான் இருந்து, சிறிது தூரம் பல்லக்கு தூக்கி வருகிறேன். இப்படி மாறி மாறி செய்வோம். நாம் மின்னல்புரியை சென்று அடைவதற்குள், உங்கள் மனக்குறையை நீங்கி விடலாம்!'' என்றான் பொன்னன்.
''அப்படியே செய்யுங்கள் நண்பர்களே! எங்களை தூக்கி வரும் உங்களுக்கு, எங்கள் நன்றியை காட்ட இது ஒரு வாய்ப்பாக இருக்கட்டும்!'' என்றாள் பூங்குழலியும்.
சுலபத்தில் ஒத்துக்கொள்ளவில்லை பல்லக்கு தூக்கிகள். பூங்குழலியும், பொன்னனும், மிகவும் வற்புறுத்தியபின் ஒப்புக் கொண்டனர்.
ஒரு பல்லக்கு தூக்கி, பூங்குழலியின் எதிரே, பொன்னன் உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டான். அவன் பல்லக்குத் தூக்கிய இடத்தில், தோளில் துண்டை மடித்துப் போட்டு, பல்லக்கின் நீண்ட பிடியை வைத்துக் கொண்டான் பொன்னன்.
பல்லக்கு மீண்டும் புறப்பட்டது.
எதிரே இருந்த பல்லக்குத் தூக்கியிடம், ''ஐயா! உங்கள் மேக நாட்டைப் பற்றியும், அரசர் அமரசிம்மனைப் பற்றியும், அரண்மனை, மகாராணி, தளபதி, அமைச்சர் பற்றி எல்லாம் சிறிது கூறுங்கள். மின்னல்புரியை சென்றடையும் முன், நாங்கள் ஓரளவாவது அதுபற்றி தெரிந்து கொள்ளலாம்!'' என்றாள் பூங்குழலி.
''சொல்கிறேன் குழந்தாய்! மேக நாடு, எல்லா வளங்களையும் உடையது. முப்போகம் விளையும் நிலங்கள்... மாதம் மும்மாரி பொழியும் தேசம். இந்நாட்டை ஆளும் அமரசிம்மன், சத்திய சீலர்; நீதிமான். ஆயகலைகள் அறுபத்து நான்கையும், முத்தமிழையும் வளர்ப்பவர். தன் நாட்டு மக்கள் வறுமையில் வாடக்கூடாதென்று எண்ணுபவர்...
''மாறு வேடத்தில் நகர்வலம் வந்து, மக்கள் குறைகளை கேட்டறிந்து, அதை உடனடியாக தீர்த்து வைப்பார். அடிக்கடி ஏதாவது விழா நடத்தி நாட்டு மக்களுக்கு விருந்து வைப்பார்!'' என்றான் பல்லக்கு தூக்கி.
பல்லக்கு நின்றது. அவன் இறங்க, மற்றொருவன் பல்லக்கில் ஏறிக் கொண்டான். அவனிடமும் அப்படியே கேட்டாள் பூங்குழலி. முதல் பல்லக்குத்தூக்கி எதுவரை கூறினான் என்பதையும் சுருக்கமாக கூறினாள் அவள்.
''அரசரை பற்றி அவன் கூறியது சரியே! நான் மகாராணியைப் பற்றி கூறுகிறேன்...
''மகாராணியின் பெயர் மாணிக்கவல்லி. உண்மையில் அவர் ஒரு மாணிக்கம்தான். நாட்டு மக்களை, அடிமை பிரஜைகள் என்று எண்ணாமல், தன் குழந்தைகளாக, உறவினர்களாகவே மகாராணி கருதுவார். மதிப்பும், மரியாதையுமாக நடத்துவார். ஏழைப் பெண்களுக்கு அரசு செலவில் திருமணம் செய்து வைப்பார்; இலவச பிரசவம் பார்ப்பார்...
''நாட்டு மக்கள் எவர் வீட்டில் ஏதாவது விசேஷம் நடந்தால், அங்கு சென்று அவர்களை மகிழ்வித்து பரிசளிப்பார். எல்லாரையும் மகிழ்விக்கும் மகாராணியாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும், அவருக்கு மகிழ்ச்சியே இல்லை. காரணம், திருமணமாகி பல ஆண்டுகளாகியும், ஒரு புழு பூச்சி கூட அவர்கள் வயிற்றில் ஜனிக்கவில்லை!'' என்றான் அவன்.
''குழந்தை பிறப்பதை, 'ஒரு புழு, பூச்சி கூட பிறக்கவில்லை' என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா? புழு தான், இருக்கிற கூட்டிலேயே வாழும். பூச்சி, இறக்கை முளைத்ததும், தான் பிறந்த இடத்தை விட்டு பறந்து சென்று விடும். புழு என்பது ஆண் பிள்ளை. அவனுக்கு திருமணமானாலும், தாய், தந்தையருடனேயே இருப்பான். பூச்சி என்பது பெண் குழந்தை. திருமணமானதும், கணவன் வீட்டிற்குச் சென்று விடுவாள்!'' என்றாள் பூங்குழலி.
''குழந்தாய்! நீ எவ்வளவு அறிவு மிக்கவள்!'' என்று அவளை பாராட்டிவிட்டு, பல்லக்கு தூக்கி, பல்லக்கைவிட்டு இறங்கிக் கொண்டான்.
மூன்றாமவன் பல்லக்கில் ஏறி உட்கார்ந்ததும், அவனிடமும் நாட்டைப்பற்றி கூறும்படி கேட்டுக் கொண்டான். முன்னிருவரும் எதுவரை சொன்னார்கள் என்பதையும் கூறினாள்.
''நான், அமைச்சர் அறிவுமதியைப் பற்றி கூறுகிறேன்... அமைச்சரின் பெயர் தான் அறிவுமதியே தவிர, அவன் கொழுமதி கொண்டவன். அரசனிடமிருந்து நாட்டை அபகரிக்கவும்; தன் மகன் பேரறிவாளனை அரசனாக்கவும் அவன் திட்டம் போட்டு, அவ்வப்போது ஏதாவது செய்துகொண்டே இருப்பான். ஆனால், அது தோல்வியடைந்து கொண்டேயிருக்கும். அரசருக்கு வாரிசு இல்லாதது தான் அவன் பேராசைக்கு காரணம்!'' என்றான் மூன்றாவது பல்லக்குத் தூக்கி.
அவன் இறங்கிக் கொள்ள, நான்காவது பல்லக்குத் தூக்கி, பல்லக்கினுள் ஏறி அமர்ந்து கொண்டான். அவளிடம் மற்ற மூன்று பல்லக்கு தூக்கிகளும் கூறியதை கூறி, அவனை மேலும் சொல்லச் சொன்னாள் பூங்குழலி.
''அரசருக்கும், அரசியாருக்கும், தங்களுக்குப் பிறகு நாட்டையாளவும், குலத்தின் பெயரை விளங்க வைக்கவும் ஒரு வாரிசு இல்லையே என்ற கவலை அதிகம். ஏதாவது ஒரு குழந்தையை தத்தெடுப்பதன் மூலம், அக்குழந்தையை பெற்ற தாயிடமிருந்து பிரிக்க அவர்களுக்கு மனமில்லை. அதனால், அமைச்சர் அறிவுமதி, 'பட்டத்துயானையிடம், ஒரு மலர் மாலையை கொடுத்து நகர்வலம் செல்லச் சொல்வோம். அது எவர் கழுத்தில் மாலையை போடுகிறதோ... அவர்கள் அரச குமாரனாகவோ, அரச குமாரியாகவோ அறிவிக்கலாம்' என்று யோசனை கூறினார். மன்னரும், மகாராணியும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதோ மின்னல்புரி வந்துவிட்டது,'' என்றான் நான்காமவன்.
பூங்குழலியும், பொன்னனும் பல்லக்கை விட்டு இறங்கினர்.
எதிரே, துதிக்கையில் மலர் மாலையை தூக்கிபிடித்தபடி வந்து கொண்டிருந்தது பட்டத்து யானை.
(-தொடரும்)
***
