PUBLISHED ON : மே 31, 2019

வறுமையை விரட்டிய குகை!
கடந்த ஆண்டு, உலகிலேயே அதிக அளவு, செய்திகளில் இடம் பெற்றது, 'தும் லுவாங்' மலைக் குகை. ஆசியா கண்டம், தாய்லாந்தில் உள்ளது. இந்த குகையில் சிக்கிய, 12 இளம் கால்பந்து வீரர்களும், பயிற்சியாளரும் மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டனர்.
மீட்பு பணியின் போது, அங்கு தேங்கியிருந்த நீரை, மின் மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதனால், மலையைச் சுற்றியிருந்த, காய்கறி, பழத்தோட்டங்கள் வெள்ளக்காடானது. பயிர்கள் அழிந்தன.
அங்கு, அர்ச்சாவின் மொபோவாக் என்பவர், அன்னாசி சாகுபடி செய்திருந்தார். அவரது தோட்டமும் அழிந்தது. பிழைக்க வழியின்றி, குகை நுழைவு வாயிலுக்கு வந்தார். மீட்பு நடவடிக்கையில், மூங்கில்களை அறுத்து கொடுத்து ராணுவத்துக்கு உதவினார்.
அவரது நிலம், சாகுபடிக்கு தயாராகததால், குகையைக் காண வரும் பயணிகளுக்கு, ஆரஞ்சுப் பழங்களை விற்று வருகிறார். அன்னாசி உற்பத்தியில் கிடைத்ததை விட, அதிக லாபம் கிடைப்பதாக கூறுகிறார்.
இந்த குகைக்கு மேலே உள்ள மலைத்தொடருக்கு, 'நேங் நோங்' என்று பெயர். புராண கால தாய்லாந்து இளவரசியின் பெயர் இது. அவள் படுத்திருப்பது போல், இந்த மலைதொடர் உள்ளதாக, தாய்லாந்து மக்கள் நம்புகின்றனர். அந்த இளவரசி பெயரில் ஒரு கோவில் உள்ளது.
குகையில் சிக்கியவர்கள், வியப்பூட்டும் வகையில் மீட்கப்பட்டதால், இளவரசிக்கு மாய சக்தி இருப்பதாக நம்பிக்கை அதிகரித்துள்ளது; அதிர்ஷ்ட தேவதையாக பார்க்கின்றனர். இதனால், வழிபாட்டுக்காக வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு, 6,000 பேர் வரை வருகின்றனர்.
இப்போது, மற்றொரு கோவிலும் கட்டப்பட்டுள்ளது. மீட்பு பணியின் போது உயிரிழந்த, தாய்லாந்து நீச்சல் வீரர் சமன் குனனின் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
குகையில் மீட்கப்பட்ட சிறுவர்களை, தாய்லாந்து அரசு பாதுகாத்து வருகிறது. பொது இடங்களுக்கு வந்தால், சிறுவர் நல அதிகாரிகள் பாதுகாப்பு கொடுக்கின்றனர். சிறுவர்களை, எளிதில் சந்திக்க முடியாது. இப்போதும், அந்த சிறுவர்கள் கால்பந்து பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
மீட்பு பணியை மையமாகக் கொண்டு, மூன்று சினிமாக்கள் தயாராகி வருகின்றன. முதல் சினிமாவுக்கு, 'தி கேவ்' என்று பெயர். இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது.
அந்த குகை உள்ள பகுதி, தாய்லாந்தில் ஏழ்மையானது. மீட்பு நடவடிக்கையால், அதன் தலையெழுத்து மாறியுள்ளது. அங்கு, சுற்றுலா தொழில் மூலம், வருமானம் அதிகரித்து வருகிறது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
