PUBLISHED ON : ஜூன் 21, 2019

தினமும் கொஞ்சம்...
பிரியமானவர்களை, 'தேன்' என்று கொஞ்சுவதோடு, கொஞ்சம் உண்ணவும் கொடுங்கள்!
மலர்களில், இனிமையான தேன் இருக்கிறது. தேனை, வயிற்றில் உள்ள பையில் நிரப்பி, கூட்டில் சேமித்து வைக்கிறது தேனீ.
இறக்கைகளால் விசிறி, வயிற்றில் சுரக்கும் அமிலத்துடன் கலந்து, நீண்ட காலம் கெடாமல் மாற்றுகின்றன.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், ஆப்ரிக்கா கண்டம், எகிப்திய கல்லறைகளை திறந்த போது, தேன் பானைகள் காணப்பட்டன.
அவற்றில், நீண்ட காலமாக தேனை கெடாமல் இருப்பதை, தொல்பொருள் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
'அமிலத்தன்மை, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவற்றின் கலவையே, தேன், பல, 100 ஆண்டுகள், கெடாமல், வைத்திருக்கிறது...' என, ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
சுத்தமான தேன், எளிதில் செரிக்கும் தன்மையுள்ளது; அதிக சத்துள்ளது.
பாஸ்போர்ட்!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள் பற்றி, 2019ம் ஆண்டிற்கான பட்டியலை, 'ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது.
'விசா' இல்லாமல், எத்தனை நாடுகளுக்குப் பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில், 'உலகின் அதிசக்தி வாய்ந்த பாஸ்போர்ட்' என்ற பெருமையை, ஆசியா கண்டம், ஜப்பான் நாடு பெற்றுள்ளது.
ஜப்பான் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி, 190 நாடுகளுக்கு, விசா இன்றி சென்று வர முடியும்.
அடுத்த இடம், ஆசியா கண்டம், சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய பாஸ்போர்ட்டுகளுக்கு கிடைத்துள்ளது. இவற்றை பயன்படுத்தி, 'விசா' இன்றி, 189 நாடுகளுக்குச் சென்று வர முடியும். மூன்றாவது இடத்தில், ஐரோப்பா கண்டம், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் உள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, ஓசியானா கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பாஸ்போர்ட்டுகள் முறையே, ஏழாம், எட்டாம் இடங்களில் இருந்து, 10ம் இடத்துக்கு, பின் தள்ளப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில், இந்தியா, 79வது இடத்தைப் பெற்றுள்ளது. ஆசியா கண்டம், சீனா, கொஞ்சம் முன்னேறி, 74வது இடத்தில் உள்ளது.
ஆசிய கண்டத்தில் உள்ள, வங்க தேசம், 97வது இடத்திலும், இலங்கை, 95வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான், 104வது இடத்தைப் பிடித்துள்ளது.
- என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
