தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஏப் 29, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தே மாதரம்!
என் தாய் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!

தாத்தா எறும்புகளுக்கு மரியாதை!

'மனிதர்களை போலவே எறும்புகளும், வயதான எறும்புகளுக்கு மரியாதை செய்கின்றன. மேலும், கடினமான வேலைகளை செய்வதில் இருந்து வயது முதிர்ந்த எறும்புகளை விடுவிக்கின்றன...' என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுறுசுறுப்புக்கும், ஒழுங்கிற்கும் கூட்டு முயற்சிக்கும் உதாரணமாக எறும்பை கூறலாம். எறும்புகளில் சித்தெறும்பு, பிள்ளையார் எறும்பு, கட்டெறும்பு, கரையான் உள்ளிட்ட பலவகைகள் இந்தியாவில் உள்ளன. மனிதர்களை போலவே, எறும்புகளும் அவற்றிக்கென ஒரு சமூக அமைப்பை கொண்டவையாக உள்ளன. வளை தோண்டி முட்டையிட்டு கூட்டமாக வாழ்கின்றன.

மத்திய அமெரிக்காவில் காணப்படும் இலைகள் துண்டிக்கும் எறும்புகள் குறித்து சமீபத்தில், ஆய்வு ஒன்று நடந்தது. இதில், இளைய மற்றும் உடல் வலிமை மிக்க எறும்புகள் கொண்ட கூட்டம், இலைகள் துண்டிக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றின. இவை செயல்படும் திறனுக்கு ஏற்றவாறு தங்களின் பணிகளை மேற்கொள்கின்றன.

இந்த எறும்புகளின் பற்கள் கூர்மையாக இருப்பதால் விரைவாக இலைகளை கடித்து துண்டாக்குகின்றன. வயதான எறும்புகளின் பற்கள் கூர்மை இழந்து விடுகின்றன. இதனால் இலைகளை துண்டிக்கும் பணிகளை இளைய மற்றும் பலம் பொருந்திய எறும்புகள் மேற்கொள்கின்றன.

உணவுகளை வளைகளுக்கு கொண்டு செல்லுதல், உணவை பாதுகாத்தல் போன்ற பணிகளை பற்கள் கூர்மை இழந்த வயதான எறும்புகள் செய்கின்றன. இந்த வகையில், எறும்புகளும் மனிதர்களை போன்று வயதான எறும்புகளுக்கு மரியாதை கொடுக்கின்றன. இலைகள் துண்டிக்கும் எறும்பு கூட்டத்தில் செயல்படும் திறனுக்கு ஏற்றவாறு பணிகளை எறும்புகள் மேற்கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ள தகவல்களை ஓரிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஏற்று கொள்கின்றனர்.

எறும்புகளின் செயல்வேகம் அவற்றின் பற்கள் மற்றும் வயது ஆகியவற்றை பொறுத்து உள்ளது. பற்களை கூர்மையாக வைத்துள்ள எறும்புகள், எறும்பு கூட்டத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

எறும்புகளுக்கு இலைகளை துண்டிப்பது கடினமான பணி. இளைய மற்றும் உடல் பலம் வாய்ந்த எறும்புகளின் தாடைகள் பலமாகவும், 'வி' வடிவத்திலும், பற்கள் கூர்மையான சவரக்கத்தி முள் போல் இருப்பதாலும் இலைகளை துண்டித்து விடுகின்றன. ஆனால், காலப்போக்கில் பற்களின் கூர்மை மழுங்கி விடுகின்றன. இதனால் இலைகளை கடிக்கும் வேகம் இவற்றிற்கு குறைந்து விடுகிறது என்கிறார் அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஸ்சோபீல்ட்.

அப்பவே இருந்த ஆஸ்பிடல்!

இப்ப ஊருக்கு ஊர் இருக்கிறது... நகரம் என்றால் தெருவிற்கு தெரு இருக்கிறது... வேறென்ன ஆஸ்பிடல்தான். உங்களுக்கு தெரியுமா? 900 ஆண்டுகளுக்கு முன் 15 படுக்கைகளுடன் ஆஸ்பத்திரி இருந்தது பற்றிய கல்வெட்டு காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிலில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆலய சுவரில் இருந்து பழைய கால கல்வெட்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வெட்டில் 900 ஆண்டுகளுக்கு முன் அந்த கோவிலுடன் இணைந்த ஒரு ஆஸ்பத்திரி செயல்பட்டது பற்றி அரிய தகவல்கள் கிடைத்து உள்ளன.

இந்த கல்வெட்டை ஆய்வாளர், கே.வி.சுப்பிரமணியம் கண்டுப்பிடித்து உள்ளார். இதுபற்றி தொல்பொருள் ஆய்வு துறையினர் கூறியதாவது;- பாலாறு, வேகவதி ஆறு மற்றும் செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் கரையோரம் திருமுக்கூடல் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் கல்வெட்டுகள் சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டன.

இதன்மூலம் இந்த ஆலயத்தில், 'வீர சோழன்' என்று பெயரிடப்பட்ட 15 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி இருந்தது தெரிய வந்துள்ளது. இதில் நிறைய ஊழியர்கள் பணியில் இருந்து உள்ளனர். கோதண்டராமன், அஸ்வத்ததாமன், பகத்தன் என்று அறுவை சிகிச்சை நிபுணர்களும் பல செவிலியர்களும் (நர்சுகளும்) ஊழியர்களும் இங்கு பணியில் ஈடுபட்டு வந்து இருப்பது தெரிய வந்தது.

இந்த ஆஸ்பத்திரியில் எலும்புருக்கி நோய், சிறுநீரக கோளாறு, மூல வியாதி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், இங்கு 20 வகையான ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மருந்து கிடங்கும் அங்கு செயல்பட்டு இருந்தாக கல்வெட்டில் உள்ள தகவல் தெரிவிக்கிறது. இந்த ஆஸ்பத்திரியில் டி.பி., நோய்க்கும் பஞ்சக தைலம் மூலம் நோய் குணப்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இந்த ஆலயத்தின் கிழக்கு பிரகார முதல் தூணில் வீரராஜேந்திர சோழர் காலத்தின் முக்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

11-ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கல்வெட்டு மூலம் அங்கு வேத கல்லூரி செயல்பட்டதும் இந்த கல்லூரியில் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் இருந்துள்ளதும் தெரியவருகிறது. மேலும், மாணவர்கள் தங்கி படிப்பதற்கு உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதியும் இங்கு அமைந்துள்ள விவரம் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. இவ்வாறு தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தெரிவித்தனர்.

வாவ்! வாட் ஆன் இன்ட்ரஸ்டிங் நியூஸ்!

அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!

இது 'ரவா பொங்கல்' செய்முறை;

தேவையானவை:

பாம்பே ரவை - 1 கப், பாசிப்பருப்பு - அரை கப், மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், பெருங்காயம்-1, டீஸ்பூன், கறிவேப்பிலை-சிறிது, நெய் -2 டீஸ்பூன், உப்பு- தேவைக்கு.

தாளிக்க:

மிளகு-2 டீஸ்பூன், சீரகம், மிளகாய்-2, முந்திரி-10, நெய்-2 டேபிள் ஸ்பூன், எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை-சிறிது.

செய்முறை:

சிறிது நெய்யை காய வைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள்.பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேக வையுங்கள். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடியுங்கள். நெய், எண்ணெயை காய வைத்து பொடித்த மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து ரவையையும் தேவையான உப்பையும் சேருங்கள்.

மற்றொரு அடுப்பில் வெந்த பருப்பு, அதில் அதிக தண்ணீர் இருந்தால் அதனுடன் சேர்ந்து மூன்றரை கப் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள்.

தண்ணீருடன், பருப்பு சேர்ந்து நன்கு கொதித்ததும் ரவை கலவையில் தூக்கி ஊற்றுங்கள். அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைத்து மூடிபோட்டு நன்கு வேக விடவும். பூப்போல வெந்ததும் சூடாக பரிமாறுங்கள்.

என்றென்றும் அன்புடன்,

அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us