PUBLISHED ON : ஏப் 29, 2011

முன்னொரு காலத்தில் கோசல நாட்டை பிரசேனஜித் என்ற அரசன் ஆண்டு வந்தான். திடீரென்று அவனுக்கு சுவையான உணவு வகைகளைச் சாப்பிடுவதில் ஆசை ஏற்பட்டது. எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தான். அவனால் எந்த வேலையிலும் ஆர்வமாக ஈடுபட முடியவில்லை. தூங்கி வழிந்தபடியே இருந்தான்.
அவனுடைய மைத்துனன் சுதர்சனன் எப்போதும் அவனுடனேயே இருந்தான். கோசல நாட்டின் தலைநகரத்திற்குப் புத்தர் வருகை தந்தார். அங்கிருந்த மேடை ஒன்றில் அமர்ந்து மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
அவருடைய அருளுரைகளைக் கேட்பதற்காக அரசனும், சுதர்சனனும் வந்திருந்தனர். புத்தரின் அருளுரைகளை அரசனால் ஈடுபாட்டுடன் கவனிக்க முடியவில்லை. அவனுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. தூக்கம் வராமல் இருப்பதற்காகத் தன்னையே கிள்ளிக் கொண்டான். புத்தரின் அருளுரை நிறைவுக்கு வந்தது. அவரை வணங்கினான்.
அவனின் நிலையைக் கவனித்த புத்தர், ''அரசே! இங்கு வருவதற்கு முன் நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லையா?'' என்று கேட்டார்.
''புத்தரே! ஓய்வு எடுத்துக் கொண்டுதான் இங்கே வந்தேன். இப்போது எல்லாம் என்னால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை,'' என்றான்.
''அரசே! நீங்கள் அளவுக்கு அதிகமாக உண்பதாக நினைக்கிறேன். அதிக உணவு உண்பவர்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை தூக்கத்தில் கழிக்கின்றனர். அவர்களால் பிறவா நிலையை அடைய முடியாது. மீண்டும் பிறந்து பிறந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டும்!'' என்றார் புத்தர்.
இதைக் கேட்டுத் தலை கவிழ்ந்து நின்றான் அரசன். ''நான் உங்களுக்குப் பொன்மொழி ஒன்றைச் சொல்லித் தருகிறேன். அதைச் சொல்லிக் கொண்டே சாப்பிடுங்கள். அளவாகச் சாப்பிடுவீர்கள்,'' என்றார் புத்தர்.
''புத்தரே! இப்போது எதையும் என்னால் நினைவில் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை,'' என்று தயக்கத்துடன் சொன்னான் அவன்.
''அதிக உணவு உண்பதால்தான் மறதியும் தோன்றுகிறது. உங்கள் மைத்துனரிடம் அந்தப் பொன்மொழியைச் சொல்கிறேன். நீங்கள் அதிகம் உண்ணும் போது அவர் அந்தப் பொன்மொழியைச் சொல்வார்,'' என்று பொன்மொழியைச் சொன்னார் புத்தர்.
அவர்கள் இருவரும் புத்தரை வணங்கிவிட்டு அரண்மனைக்கு வந்தனர். உணவு உண்ண அமர்ந்தான் அரசன். ''ஆ! எனக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கலா?'' என்றபடியே அதை உண்டான்.
''யாரங்கே? இன்னொரு தட்டுப் பொங்கலைக் கொண்டுவா!'' என்று கட்டளை இட்டான்.
அங்கே இருந்த சுதர்சனன், ''யார் அளவாக உண்கிறாரோ அவர் இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பார். நீண்ட காலம் வாழ்வார்!'' என்று புத்தரின் பொன்மொழிகளைச் சென்னான்.
இதைக் கேட்ட அவன், ''பொங்கல் வேண்டாம்!'' என்று எழுந்தான். இப்படியே அவன் அதிக உணவு உண்ண முயலும்போது சுதர்சனன் அந்தப் பொன்மொழியைச் சொன்னான்.
உடனே அவனும், ''எனக்கு உணவு போதும்!'' என்று எழுந்து விடுவான்.
இப்படியே இரண்டு வாரங்கள் சென்றன.
அன்று வழக்கத்திற்கு மாறாக சிறிதளவே உண்டு எழுந்தான் அரசன்.
''அரசே! நான் அந்தப் பொன்மொழியைச் சொல்லவே இல்லை. அதற்குள் எழுந்து விட்டீர்களே!'' என்று கேட்டான் சுதர்சனன்.
''சில நாட்களாக நான் சிறிதளவே உண்டேன். அதனால் அரச வேலைகளை ஆர்வத்துடனும், சுறுசுறுப்புடனும் செய்ய முடிந்தது. புத்தர் அவர்களின் அறிவுரை என்னைத் திருத்தி விட்டது. இனி நீ அந்தப் பொன்மொழியைச் சொல்ல வேண்டி இராது!'' என்றான் அவன்.
***
