PUBLISHED ON : ஏப் 29, 2011

சீனா என்று அந்த நாட்டுக்குப் பெயர் வந்ததற்குக் காரணமே அங்கு தயாராகும் பட்டுத்துணிகள்தான். சீன மொழியில் 'டிஸின்' என்றால் பட்டு: மென்மையானது என்று பொருள். டிஸின் என்பதே நாளடையில் ட்ஸின் என்றும் ஸின் என்றும் ஸினாய் என்றும் மாறிக் கடைசியில், சீனா என்று ஆகிவிட்டது. புத்த மதம் சீனாவில் இருந்துதான் ஐப்பானுக்குப் பரவியது.புத்தத் துறவிகள் ஜப்பான் போலச் சீனாவிலும் நிறைய பேர் இருந்தனர்.
சீன குரு என்பதே ஸின் குரு என்றாகி, ஜென் குரு என மாறியது என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். புகழ்பெற்ற சீனக் குருக்களில் முதன்மையானவர் கன்பூசியஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக, இன்றுவரை அவரது பொன்மொழிகள் உலகெங்கும் போற்றப்படுகின்றன. சிறிய குடிசையில் எளிமையான வாழ்ந்த அவரிடம் பாடம் கற்க ஏராளமாக பிரபுக்கள், மன்னர்கள் தங்களுடைய பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். கன்பூசியசிடம் பாடம் கற்றவன் என்ற ஒரு தகுதியே அந்நாளில் அரசுரிமை பெறுவதற்கான தகுதிகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கியது.
ஒருநாள் குருகுலத்தில் கன்பூசியஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
''குருவே! என்னை அரசு அதிகாரியாக நியமிக்கப் போகிறார்கள். எனக்குத் தாங்கள் கூறும் அறிவுரை...?'' என்று கேட்டான் ஒரு மாணவன்.
''நீ செய்யும் எந்தக் காரியத்திலும் உடனே பலன்கள் ஏற்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதே. அதற்காக அவரசப்படாதே. குறுகிய காலத்தில் லாபம் ஏற்படவேண்டுமென்றும் எதிர்பார்க்காதே. நீ செய்யும் முதலாவது தவறு உன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு இழக்க வைக்கும்; இரண்டாவது தவறு பெரும் சாதனைகளைக் கூடக் கோட்டை விடச் செய்யும்.'' என்றார் கன்பூசியஸ்.
''அரசு அதிகாரி என்ற முறையில் என்னிடம் என்ன குறைகள் இருக்கக் கூடாது?'' என்றார் அந்த மாணவர்.
''பாரபட்சம் அவரசப்பட்டு முடிவெடுத்தல், சுயநலம், பிடிவாதம் இவை கூடாது.'' என்றார் கன்பூசியஸ்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளவரசன் எழுந்து கேட்டான்.
''குருவே முன்னோர்களின் ஆவிகளுக்கு எப்படி நம் கடமைகளைச் செய்வது?''
''உயிருடன் இருப்பவர்களுக்கு முதலில் உன் கடமைகளைச் செய். ஆவிகளைப் பிறகு கவனிக்கலாம்.'' என்றார்.
''ஆட்சி சிறப்பானதாயிருக்க எவை எவை தேவை?'' என்றார் இளவரசன்.
''மூன்று விஷயங்கள் தேவை. முதல் தேவை போதிய உணவு, இருப்பு; இரண்டாவது தேவை, மக்களின் பாதுகாப்புக்காக பலமான ராணுவம்; மூன்றாவதாக, மக்களின் நம்பிக்கையை அரசு பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்றிலும் தன்னிறைவு பெற்றதே சிறந்த நிர்வாகம்.''
''இதில் ஏதேனும் ஒன்றை விடவேண்டும் என்றால் முதலில் விட வேண்டியது எது?''
பளிச்சென்று, ''ராணுவம்!''என்றார் கன்பூசியஸ்.
''இரண்டாவதாக விட வேண்டுமென்றால்...?''
''உணவு, இருப்பு.''
மாணவர்கள் இதைக் கேட்டுத் திகைத்தனர். குரு அவர்களுக்கு விளக்க ஆரம்பித்தார்.
''உணவு இல்லையென்றால் பஞ்சம் ஏற்படும். மக்கள் மடிவார்கள். அப்படிப் பலமுறை மனித சமூகத்திற்கு நேரிட்டிருக்கிறது. இருப்பினும் மனித சமுதாயம் மீண்டும் துளிர் விட்டு எழாமல் இருந்ததில்லை. ஆனால், அரசு மீது உள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால் அந்த நாட்டின் கதி அதோகதிதான்.'' என்றார் குரு.
***
