PUBLISHED ON : நவ 30, 2019

வறுத்தலும் பொரித்தலும்
ஒன்றை தேடும்போது, மற்றொன்றை கண்டுபிடிப்பது விஞ்ஞான உலகில் புதிதல்ல. அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்களில் நடந்த விபத்துக்கள், புதுமையான வெற்றிக்கதவுகளை திறந்ததுண்டு. இதுபோல், சமையல் கூடங்களிலும், எதிர்பாராத வகையில் உணவு வகைகள் உருவாகி பிரபலமாவதுண்டு.
இளைய தலைமுறையை கவர்ந்துள்ள உணவு, உருளைக்கிழங்கு வறுவல். இது, 'சைடுடிஷ்' என்ற பக்க உணவாகவும், நொறுக்கு தீனியாகவும் வலம் வருகிறது.
மெல்லியதாக சீவிய உருளைக்கிழங்கை, எண்ணெயில் வறுத்து, 'மொறு மொறு' என, பரிமாறினால், வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சியுடன் உண்பர். இதை கண்டுபிடித்த விதம், ருசிகரமானது.
ஐரோப்பிய நாடான பிரான்சில், 1700ல் உருளைக்கிழங்கு வறுவல் அறிமுகமானது. உருளைக்கிழங்கை, சுண்டுவிரல் தடிமனில் வெட்டி, எண்ணெயில் வறுத்து அல்லது தீயில் சுட்டு பரிமாறினர். இதை, 'பிரைஸ்' என்றனர். பிற நாட்டவர், 'பிரஞ்சு பிரைஸ்' என, பெயரிட்டு ருசித்தனர். இந்த வறுவலை, முள்கரண்டியில் குத்தி சாப்பிடுவது வழக்கம்!
சமையல் கலைஞர் தாமஸ் ஜெபர்சன், இதை அமெரிக்காவில் பிரபலமாக்கினார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில், 1802ல் சமைத்த போது, ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அன்று முதல், அமெரிக்காவில் பிரபலம் ஆனது. தொடர்ந்து, உலகில் மிகவும் விரும்பும் உணவுப்பட்டியலில் சேர்ந்துவிட்டது.
அமெரிக்க நகரான நியூயார்க்கில், சார்டோகா ஸ்ப்பிங்க்ஸ் என்ற பிரபல உணவுவிடுதியில், தலைமை சமையல் கலைஞராக, ஜார்ஜ் க்ரம் பணியாற்றினார். அந்த உணவு விடுதிக்கு, கார்மிலியஸ் என்பவர், அடிக்கடி சாப்பிட வருவார். அவர், பிரெஞ்சு பிரைஸ் ருசியாக இல்லை என்றார். 'சரியாக வேகவில்லை; சரியான பதத்தில் பொரிக்கவில்லை' என, குறைபட்டு வந்தார்.
எரிச்சல் அடைந்த ஜார்ஜ், உருளைக்கிழங்கை மெல்லிதாக சீவி, மொறுமொறுப்பாக வறுத்து பரிமாறினார். இதை, முள்கரண்டியில் குத்தி சாப்பிட முடியாது. கார்மிலியசை, வறுவல் மணம் துாண்டியது. சாப்பிட்டதும் சுவையில் மயங்கி, 'பிரமாதம்...' என புகழ்ந்தார்.
இதைத் தொடர்ந்து, 'பொட்டட்டோ சிப்ஸ்' என்ற உருளைக்கிழங்கு சீவல் அமெரிக்காவில் பிரபலம் ஆகியது. இதை, 'ஸார்டோகா சிப்ஸ்' என்ற பெயரில் சிறப்பு உணவாக்கியுள்ளனர். இதை தயாரித்த ஜார்ஜ் க்ரம், 1860ல், ஓர் உணவு விடுதியை துவங்கி, 1914ல், 92ம் வயதில் மரணமடையும் வரை வெற்றிகரமாக நடத்தினார். இந்த உணவால் புகழ்பெற்றார்.
ஆய்வுகளால், உருளைக்கிழங்கு வறுவல் பலவகை வடிவங்களை எடுத்துள்ளது. வித்தியாசமான சுவைகளில் வலம் வருகிறது. சிறிய பைகளில் அடைத்து, பெட்டிக்கடையில் விற்கும் அளவு உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டது.
உருளைக்கிழங்கு சீவல் அதிகம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம், ரத்த நாளங்களில் கொழுப்பு சேரும் ஆபத்து போன்றவை வர வாய்ப்பு உள்ளது என, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
அளவோடு உண்டு, நலமோடு வாழுங்கள்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
சொல்லறிவோம்
சைடுடிஷ் : பக்க உணவு
சிப்ஸ் : சீவல்
பிரஞ்சு பிரைஸ் : பிரஞ்சு வறுவல்
