தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : டிச 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆசிய உணவு அரிசி!

புல் வகை தாவரம் நெல். நீர் வசதியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. அதிகபட்சமாக, 10 அடி உயரம் வரை வளரும். ஒரே நாளில், எட்டு அங்குலம் வரை வளரும் ரகமும் உண்டு. 60 முதல், 220 நாட்களில் அறுவடையாகும். வறண்ட பிரதேசங்களில் வளரும் ரகங்களும் உண்டு.

நெல் விதையில், உமியை நீக்கினால் அரிசி கிடைக்கும். கோதுமை, சோளம், வாழைக்கு அடுத்து, உலகில் அதிக அளவில் உற்பத்தியாகிறது. உலக மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டோரின் முதன்மை உணவாக உள்ளது.

உலகம் முழுவதும், 1.2 லட்சம் நெல் ரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சிவப்பு, மஞ்சள், கறுப்பு, வெண்மை என, பல வண்ணங்களிலானவை. சன்னம், மோட்டா என, பல அளவு, வடிவங்களைக் கொண்டுள்ளது.

ஆசிய நாடான சீனாவில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நெல் பயிரிட்ட விவரம் கிடைத்துள்ளது. அங்கு, யாங்சி நதிக்கரையில் உள்ள கிமுது கிராமத்தில், 7000 ஆண்டுகளுக்கு முன், அரிசி உணவை பயன்படுத்தியதை, தொல்பொருள் ஆய்வறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கி.மு.400ல் பயன்படுத்திய நெல் தானியக்குதிர் ஒன்றை, கிழக்காசிய நாடான ஜப்பானில் கண்டறிந்துள்ளனர். தமிழகத்தில், ஸ்ரீரங்கம் கோவிலில் மிகப்பெரிய நெல்குதிர் உள்ளதை இப்போதும் காணலாம். ஆசியா கண்டத்தில், அரிசி உணவே பரவலாக இருந்ததற்கு, இது போல் பல ஆதாரங்கள் உள்ளன.

பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி... இவை போல், தமிழகத்தில், 200க்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டன. இப்போதும், சில இடங்களில் விளைகின்றன.

இயற்கை முறையில் விளைவிக்கும் அரிசியை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அரிசியில், மாவு சத்து அதிகம். அடுத்தபடியாக, நீர் சத்து உள்ளது. பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், வைட்டமின் - பி போன்ற சத்துக்களும் உள்ளன. காய்கறிகளுடன் கூடிய அரிசி உணவு, உடல் நலனை மேம்படுத்தும்.

தமிழகத்தில், பெரும்பாலும், வெள்ளைப் பொன்னி அரிசி போன்ற சன்ன ரகங்களையே அதிகம் விரும்புகின்றனர். ஐரோப்பிய உணவுகளின் வருகையும், உணவுகள் மீதான பார்வையும், தமிழகத்தில் அரிசி உணவின் மீதான முக்கியத்துவத்தை குறைத்து வருகிறது.

எந்த ரக அரிசியையும், அதிகம் தீட்டினால் அதாவது, 'பாலிஷ்' செய்தால், நுண் சத்துகள் நீங்கிவிடும். மாவுச்சத்து மட்டுமே மிஞ்சும். இது முழுமையான உணவாவதில்லை. மாவு சத்துக்கள் மட்டும் உள்ள உணவை உண்டால் உடல் பருமன், நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கைக்குத்தல் அரிசி சத்துக்கள் நிறைந்தது. இதில் தயாரிக்கும் உணவு, ஆரோக்கியத்தை காக்கும். பாரம்பரிய சிவப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம். சாப்பிட்டால் சுலபமாக செரிக்கும். பால், பருப்பு, முட்டை, இறைச்சிக்கு அடுத்தபடியாக, சிவப்பு ரக அரிசியில் புரதம் நிறந்துள்ளது.

இந்த ரக அரிசியில் கஞ்சி, இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளை தயாரிக்கலாம். இவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அரிசியுடன் பல தானியங்கள், காய்கறிகள் சேர்த்து கலப்பு உணவுகளை உண்டு, ஆரோக்கியம் காப்போம்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us