PUBLISHED ON : டிச 14, 2019

செல்வமாகும் குப்பை!
குப்பை, கழிவு அல்ல; அதை, உரிய முறையில் பயன்படுத்தி செல்வமாக்கலாம். தரம் பிரிக்கும் முறை அறிமுகமான பின், பல நிலைகளை அடைந்துள்ளது குப்பை.
உணவுக்கழிவை, ஆறு மணிநேரத்திலும், மாமிசக் கழிவை, மூன்று மணி நேரத்திலும், காய் கனி கழிவை, நான்கு மணி நேரத்திலும் சேமித்தால், சிறப்பாக பயன்படுத்த முடியும். இதைப் புரிந்து, திட்டம் தீட்டினால், மதிப்பு மிக்க செல்வமாக மாறும்.
வீட்டில் உருவாகும் குப்பையை, மக்குவது, மக்காதது என, பிரித்துச் சேகரிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. பொது இடங்களிலும், இத்தகைய சேகரிப்பு கலன்களை காணலாம். இவை பச்சை, சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.
மக்கும் குப்பையை, 21 வகைகளாகவும், மக்காத குப்பையை, 24 வகைகளாகவும் பிரிக்கின்றனர். பிரித்து தரப்படுத்தப்பட்ட பொருட்களை விற்று காசாக்கி விட முடியும்.
ஒரு வாழை இலை, மக்கி உரமாவதற்கு, 120 நாட்கள் ஆகும். ஆனால், அதையே மாட்டுக்கு உணவாக தந்தால், எட்டு மணி நேரத்தில், சாணமாகி, 72 மணி நேரத்தில் உரமாக மாறி விடும்; சாணத்திலிருந்து, சமையல் எரிவாயு உற்பத்தி செய்யலாம்.
மீன், மாமிச கழிவை சேகரித்து, கோழி, வாத்துக்கு, தீவனமாகக் கொடுக்கலாம். ஒரு வாத்து, மாதத்துக்கு, 24 முட்டைகளை தரும். அதன் மூலம் சிறப்பான வருமானம் பெறலாம்.
முடித்திருத்தகம், அழகு நிலையங்களில், ஆறு வித கழிவுகள் வெளிவருகிறது. இவற்றை, மற்ற குப்பையுடன் சேர்க்காமல், தனியாகச் சேகரிக்க வேண்டும். இதில், பெண்களின் தலைமுடி, கிலோ 2,500 ரூபாய் வரை விலை போகிறது.
எந்த வகையிலும் பயன்படாத, 15 குப்பை வகைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தும் முறை பற்றிய ஆய்வு நடந்து வருகிறது.
ஒரு வீட்டில் விழும் குப்பையில் தினமும், மூன்று ரூபாய் வருமானம் கிடைக்கும். அதன்படி, 25 லட்சம் வீடுகளையும், ஐந்து லட்சம் வணிக நிறுவனங்களையும் கொண்ட, பெங்களூரு நகர குப்பையில், ஒரு மாதத்தில், 27 கோடி ரூபாய் சம்பாதிக்க முடியும். இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் சீனிவாசன் என்ற குப்பை நிபுணர்.
இவர் வகுத்துள்ள திட்டத்தை, முறையாக செயல்படுத்தினால், சென்னை போன்ற பெருநகரங்களில் குப்பை குவிந்து சூழல் சீர்கெடுவதை தடுக்க முடியும். இவரது திட்டம், குஜராத், ராஜஸ்தான், டில்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட, 15 மாநிலங்களில் செயல்பட துவங்கியுள்ளது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
