தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தவறு குற்றமல்ல!

தவறு குற்றமல்ல!

தவறு குற்றமல்ல!


PUBLISHED ON : டிச 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கீர்தம் நாட்டை, மன்னர் வேதராஜ் ஆண்டு வந்தார். அவரது மந்திரிசபையில், புத்திகூர்மையும், நேர்மையும் நிறைந்த மந்திரி இருந்தார்.

மன்னர் முன்கோபக்காரர். அரண்மனையின் உள்ளே, காவலாளிகளோ, வேலைக்காரர்களோ சிறு தவறு செய்தாலும், உடனே, சிறையில் அடைத்து விடுவார்.

இந்த போக்கு, மந்திரிக்கு பிடிக்கவில்லை.

மன்னர் நல்லெண்ணம் படைத்தவர்; ஆனால், முன்கோபத்தால் அறிவிழந்து செயல்பட்டு வந்தார். அவரின் குணத்தை மாற்றி, சிறையில் வாடும் பணியாட்களை காப்பாற்ற முடிவு செய்தார்.

ஒரு நாள் -

'மன்னா... வெளிநாட்டில் இருந்து, வித விதமான பூச்செடிகள், நம் அரண்மனைக்கு வந்துள்ளன. அவற்றை அரண்மனை தோட்டத்தில், நட்டு வைக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதை, தாங்கள் பார்வையிட வேண்டும்...' என்றார் மந்திரி.

அழைப்பை ஏற்று, மந்திரியுடன் தோட்டத்துக்கு சென்றார்.

'இதோ வலது புறமாக நிற்கிற பூச்செடிகளைப் பாருங்கள்... செடிகளின் இலைகளை கிள்ளி நுகர்ந்தாலே நல்ல வாசனை இருக்கும்...' என்று அறிமுகம் செய்தார் மந்திரி.

அதை அறியும் ஆசையில், ஆர்வத்தோடு ஒரு செடியில் இலையைக் கிள்ள முயன்றார் மன்னர். உடனே, வேரோடு பிடிங்கி வந்தது; அடுத்த செடி இலையையும் கிள்ள முயற்சித்தார். அதுவும், வேரோடு வந்து விட்டது.

'மன்னா... என்ன காரியம் செய்து விட்டீர்... இரண்டு செடிகளையும் பிடுங்கி வீணாக்கி விட்டீரே... இவை, மிகவும் உயர்ந்தவையாயிற்றே... நீங்கள் பெரும் குற்றம் செய்து விட்டீர்கள்...' என்றார் மந்திரி.

'மன்னிக்க வேண்டும் மந்திரியாரே... செடிகள் வேரோடு பிடுங்கிக்கொள்ளும் என்று, எதிர்பார்க்கவில்லை...'

'செடியைப் பிடுங்கி விட்டீர்; யார் தவறுசெய்தாலும் அதிகபட்ச தண்டனை கொடுக்கும் நீங்கள், செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்...'

மந்திரி இவ்வாறு கூறியதும், மன்னர் யோசனை செய்தார்.

'சிலர், அறியாமையால் தவறு செய்து விடுகின்றனர்; அதை குற்றமாக எடுத்துக் கொள்வது சரியல்ல. அவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுத்து, துன்புறுத்துவது பெரிய தவறு...

'இதுநாள் வரை, இந்த குற்றத்தை செய்து வந்திருக்கிறேன். அதை தான் சுட்டிக் காட்டியுள்ளார் மந்திரி. இனிமேல், இப்படி செய்யக் கூடாது; சிறையில் இருப்போரை, உடனே விடுதலை செய்ய வேண்டும்' என்று முடிவு செய்தார்.

'மன்னித்து விடுங்கள் மந்திரி; என் அறிவுக் கண்களை திறந்து விட்டீர்; இனி கோபத்துடன் நடந்து கொள்ள மாட்டேன்; தவறுகளை பொறுத்து, திருந்தும்படி, அறிவுரை வழங்குவேன். சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறேன்...' என்றார்.

மந்திரி மகிழ்ச்சியடைந்தார். திருத்திய மந்திரிக்கு, பரிசுகள் கொடுத்து கவுரவித்தார்.

செல்லங்களே... பிறர் செய்யும் தவறுகளை பெரிதுபடுத்தாமல், திருந்த சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். சரியா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us