தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அன்பும் தங்க காசும்! (1)

அன்பும் தங்க காசும்! (1)

அன்பும் தங்க காசும்! (1)


PUBLISHED ON : டிச 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாளிகை போன்ற வீட்டில் தனியாக இருந்தாள் வினோ. வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார், அவள் கணவர். அன்று மாலை, மாளிகை வாசலில், ஒரு கார் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய முதியவர், 'இதோ பார், இது என் தம்பியின் வீடு; இங்கே தங்கி விட்டு நாளை போகிறேன். இருந்தாலும், உன்னிடம் பேசியபடி கார் வாடகையைக் குறைக்காமல் கொடுக்கிறேன்...' என்று டிரைவரிடம் கூறி, பணத்தைக் கொடுத்தார்.

முதியவர் பேசியதைக் கேட்டு திகைத்த வினோ, 'என் கணவரின் அண்ணனா நீங்கள்... வீடு தவறி வந்து விட்டீர்கள்; தயவு செய்து சரியான விலாசத்தை விசாரித்து போங்கள்...' என்று பதைபதைத்தாள்.

பதட்டம் தணிந்த நிலையில் முதியவர், 'நான் வேண்டுமென்றே தான் அப்படிக் கூறினேன்; கார் டிரைவரைப் பார்த்தால், நடுவழியில், என் பெட்டியைப் பிடுங்கிப் போய் விடுவானோ என்று தோன்றியது. பயம் ஏற்பட்டதால், பொய் சொல்லி, இங்கே இறங்கினேன். இன்றிரவை கழித்து, நாளை காலை போய் விடுகிறேன்...' என்றார்.

முதியவரின் நிலையைப் பார்த்து, வினோவின் மனம் இரங்கியது.

'சரி... அப்படியே செய்யுங்கள்; இங்கேயே சாப்பிடலாம்...' என கூறினாள். வத்தல் குழம்பு வைத்து, சாப்பாடு போட்டாள்.

நிதானமாகச் சாப்பிட்ட முதியவர், 'என் பெயர் பஞ்சாட்சரம்; எனக்கு மூன்று மகன்கள்; மூவருக்கும் திருமணமாகி, இந்த ஊரில் வியாபாரம் செய்கின்றனர். என் மனைவி, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள்... கிராமத்திலிருந்த என் வீட்டையும், வயல்களையும் விற்று, மூன்று மகன்களிடம் கொடுத்து விட்டேன்...

'மிஞ்சியது, 60 பவுன் தங்க ஒட்டியாணமும், 60 பவுன் காசுகளுமே; இவையும் கிடைக்கும் என்பதை, மூன்று மருமகள்களும் அறிவர். இவற்றை அடைய போட்டி போடுகின்றனர்...

'மூவரும் என்னை நன்றாகவே கவனித்துக் கொண்டனர். அதில் யாருக்கு என் மீது அதிக பாசம் என்பதை அறிந்து, ஒட்டியாணத்தை கொடுத்து, மீதியுள்ள வாழ்நாளை, அவர்களுடன் கழிக்க நினைக்கிறேன்...' என்று முழு விவரத்தையும் கூறினார்.

இதைக் கேட்ட வினோ சிரித்தாள்.

'ஏன் சிரிக்கிறாய் அம்மா...'

'நீங்களோ... வீடு, வயல்களை விற்று, மகன்களுக்குக் கொடுத்து விட்டீர்கள்; இனி மிஞ்சி இருப்பது, இந்த தங்கநகையும், காசுகளுமே... இவற்றையும் கொடுத்து விட்டால், உங்களிடம் ஒரு காசு கூட கிடையாது...

'அந்த நிலையில், யார் மதித்து காப்பாற்றுவர்; மருமகள்கள் சாப்பாடு போடுவர் என்பது சந்தேகமே... எடுத்துக்காட்டாக என் அனுபவத்தை சொல்கிறேன். என் தந்தை பணத்தை எல்லாம், இரு மகன்களுக்கும் கொடுத்து விட்டார்; தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளவில்லை...

'இந்த நிலையில், வீட்டை விட்டு அவரை துரத்தி விட்டனர்; என் வீட்டில் வந்து தங்கி இருக்கும்படி வேண்டினேன். அவரோ, முதியோர் இல்லத்தில் சேர்ந்து விட்டார்...

'இந்த அன்பு, பாசம் எல்லாம் பணத்திற்கு முன்னால், பஞ்சாய்ப் பறந்து விடும். அதனால், இந்த உடமைகளை நீங்களே வைத்திருங்கள். அப்போது தான் மதிப்பு; இல்லா விட்டால், என் தந்தையைப் போல திண்டாடி, முதியோர் இல்லத்தில் சரண்புக வேண்டிய நிலை வரும்...' என்று அறிவுரைத்தாள்.

'சேச்சே... என் மகன்களும், மருமகள்களும் அப்படி எல்லாம் நடக்க மாட்டார்கள்; என் மீது, அன்பும், பாசமும் கொண்டுள்ளனர்... அவர்களை சந்தேகப்படுவது தவறு...'

'சரி... அதையும் பரிசோதனை செய்து பார்த்து விடலாம்; நான் சொல்கிறபடி செய்கிறீர்களா...'

அவள் பேச்சுக்கு, முதியவர் ஒப்புக்கொண்டார். ஒரு திட்டத்தைக் கூறி, பத்திரம் எழுதிக் கொடுக்கச் சொன்னாள்.

தொடரும்...

- கண்ணப்பன் பதிப்பகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us