PUBLISHED ON : டிச 14, 2019

திருச்சி, புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1986ல், 9ம் வகுப்பு சேர்ந்தேன்.
கிராமத்தில் வசித்த என்னை, பள்ளி விடுதியில் சேர்த்ததை விரும்பவில்லை. புதிய அனுபவமாக இருந்தது. வெறுப்புடன் தங்கியிருந்தேன். விடுமுறையில் வீடு செல்லும் போதெல்லாம், 'இனி விடுதிக்கு செல்ல மாட்டேன்' என, அழுது புரள்வேன்.
அப்போதெல்லாம், 'விடுதியில் தங்கி படி; இல்லை என்றால் மாடு மேய்க்கப் போ...' என, கண்டிப்புடன் திட்டுவார் அப்பா. விடுதிக்கு திரும்பியதும் சாப்பிடாமல், அழுதபடியே சோகமாக இருப்பேன்.
இதை கவனித்த ஆங்கில ஆசிரியை கவுசல்யா, தாய் போல் தேற்றி, 'பெண் பிள்ளைக்கு படிப்பு முக்கியம்...' என, அறிவுரை கூறுவார். அவரது பரிவும், அன்பும் கவர, என்னை மாற்றிக் கொண்டேன். அவரைப் போல, ஆசிரியராகும் எண்ணம் மனதில் பதிந்தது. அதை லட்சியமாக கொண்டு, படித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.
தற்போது, என் வயது, 45; அந்த ஆசிரியை தேற்றி, அறிவுரைத்திருக்கா விட்டால், என் வாழ்க்கை திசை மாறி போயிருக்கும். எனக்கு வழிகாட்டியவரை, நன்றி பெருக்குடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- பா.ஜெயந்தி, கோவை.
தொடர்புக்கு: 94866 16143
