PUBLISHED ON : மே 16, 2020

வண்ணத்து பூச்சி பூங்கா!
ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய வண்ணத்து பூச்சி பூங்கா, திருச்சி அருகே, 25 ஏக்கரில் அமைந்துள்ளது. ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே, காவிரி - கொள்ளிடம் ஆறுகள் பிரியும் முக்கொம்பு அருகே அணைக்கரை என்ற இடத்தில் உள்ளது.
இங்கு, 27 நட்சத்திரங்களை குறிக்கும் விதமாக, 27 வகை மரங்களுடன், சிறிய வனம் அமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்து பூச்சிகளுக்கு விருப்பமான சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, கோபி, அஸ்காப்பியா போன்ற செடிகள் வளர்க்கப்படுகிறது. 39 வகையான வண்ணத்து பூச்சிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. வண்ணத்து பூச்சி மாதிரிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறுவர், சிறுமியருக்கு விளையாட்டு பூங்காவும் உண்டு.
இந்த பூங்காவை, காலை 9:00 மணி முதல், மாலை 5:00 வரை பார்த்து குதுாகலிக்கலாம். செவ்வாய்க்கிழமை விடுமுறை. இதை, தமிழக வனத்துறை பாராமரித்து வருகிறது.
மலைக்கோட்டை!
திருச்சி என்றால் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை; இது, 273 அடி உயர குன்றில் உள்ளது. இந்த மலைப்பாறை, 100 கோடி ஆண்டு பழமையானது. கி.பி., 580ல், பல்லவர் ஆட்சி காலத்தில், இங்கு உருவாக்கப்பட்ட குடைவரை தனி சிறப்புள்ளது.
டில்லியை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி, மாலிக் கபூர் இக்கோட்டையை, கி.பி., 14ம் நுாற்றாண்டில் கைப்பற்றினார்.
மலைக் கோட்டையில், கீழே மாணிக்க விநாயகர் கோவிலும், மேலே உச்சி பிள்ளையார் கோவிலும், இடையே தாயுமானவர் கோவிலும் அமைந்துள்ளன.
மஞ்சள் மகிமை!
மங்களமானது மஞ்சள் நிறம். சட்டென்று கண்ணுக்குப் புலப்படும்; இருள் விலகாத வேளையிலும், 'பளிச்' என்று தெரியும்.
சாலையில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, மஞ்சள் வண்ணத்தை பயன்படுத்தலாம். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் பிராங்க், இது தொடர்பாக ஆய்வு செய்து, மஞ்சள் வண்ண பாதுகாப்பை உறுதி செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் அமெரிக்காவில், பள்ளி பேருந்துகள் அனைத்தும், மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்ற சட்டம், 1933ல் இயற்றப்பட்டது. காலப்போக்கில் பிற நாடுகளிலும், பள்ளி, கல்லுாரி பேருந்துகள் மஞ்சள் வண்ணத்துக்கு மாறின. சாலையை பிரிக்கும் மஞ்சள் கோடும் விபத்தை குறைக்கும் வகையில் வரைவது தான்.
துாக்கணாங்குருவி!
இந்தியா முழுவதும், பரவலாக உள்ள பறவை துாக்கணாங்குருவி; நீர் நிலை ஓரமாக, மரங்களில் நார்கள் கோர்த்து, கூடு அமைக்கிறது. கூடி வாழும் பழக்கமுள்ளது.
அறுவடைக்குப் பின், சிதறும் தானியங்களை உண்ணும். இதற்காக வயல்வெளிக்கு கூட்டம் கூட்டமாக வரும். தவளை, பல்லிகளை பிடித்து உண்ணும். வயல்வெளியில் உலவும் பூச்சிகளையும் சாப்பிடுவதால், விவசாயத்துக்கு மிகவும் உதவி செய்கிறது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.
