தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!

அதிமேதாவி அங்குராசு!


PUBLISHED ON : ஜூலை 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்... தெய்... தெய்...

கேரள மாநிலம், ஆலப்புழை, புன்னமடக்காயலில், உலகப்பிரசித்தி பெற்ற, பாம்பு படகு போட்டி ஆண்டுதோறும் நடக்கிறது. இதற்கு, நேரு நினைவு போட்டி என்று பெயர். இந்த பெயர் வந்த வரலாற்றை பார்ப்போம்.

கேரளாவின் தென்பகுதியில் இருந்த திருவிதாங்கூர் ராஜ்யத்தில், தெக்கும்கூர், வடக்கும்கூர், செம்பகசேரி என்ற குறுநில நாடுகள் இருந்தன. இவற்றில், 'வள்ளப்படை' என்ற அமைப்பு இருந்தது. இந்த படை வீரர்கள், கடற்போரில் வல்லவர்கள். இவர்கள் தான், படகு போட்டியில் முதலில் பங்கேற்றனர்.

நம் நாடு சுதந்திரம் பெற்ற பின், அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, 1952ல் கேரளா வந்தார். அவரை வரவேற்க படகுப்போட்டி நடத்தப்பட்டது. படகு ஓட்டிகளின் ஆவேசம், வேகத்தால் நெகிழ்ந்து, வெற்றி பெற்ற படகில் ஏறி வாழ்த்தினார் நேரு.

டில்லி திரும்பியதும், வெள்ளியிலான சிறிய படகு பொம்மை ஒன்றை, நினைவுப்பரிசாக அனுப்பி வைத்தார். அது தந்த உற்சாகத்தில், 'பிரைம்மினிஸ்டர்ஸ் டிராபி' என, படகுப்போட்டி அழைக்கப்பட்டது. நேரு மறைவுக்குப்பின், அவர் நினைவாக, இந்த பெயர் சூட்டப்பட்டது.

இதை காயல் ஒலிம்பிக் என சிறப்பித்து குறிப்பிடுவர்.

'தெய்... தெய்... தெய்... தித்தைத்த தெய்தெய்தோம்!' என்ற புகழ்மிக்க வஞ்சிப் பாட்டின் ஊடே, படகுகள் பாய்ந்து வருவதை கண்டால் ஆனந்தம் பொங்கும். இதன் விவரத்தை பார்ப்போம்.

* போட்டியின் துாரம், 1,400 மீட்டர்

* படகின் நீளம், ௧௨௮ அடி

* படகில், 100 முதல், 120 வீரர்கள் அமர்ந்து துடுப்பு போடுவர். நிமிடத்துக்கு, 80 முறை வரை துடுப்பு போடுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது

* ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தன்று, கேரளாவில் ஓணம் பண்டிகை. இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, போட்டி துவங்கும்.

இந்த போட்டி, 68ம் ஆண்டாக, வரும் ஆகஸ்ட் இரண்டாம் சனிக்கிழமை நடைபெற வேண்டும். கொரோனா தொற்று காரணமாக, இது நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வங்கியின் கதை!

ஒருவருக்கு வியாபாரம் செய்யத்தெரியும். ஆனால், முதலீடு செய்ய பணம் இல்லை. நண்பரிடமிருந்து, 1000 ரூபாய் கடன் வாங்கினார். அந்த பணத்தில் சிறப்பாக வியாபாரம் செய்து, 1300 ரூபாயாக பெருக்கினார்.

வியாபாரத்தில் கிடைத்த லாபம், 300 ரூபாய். கடன் கொடுத்த நண்பருக்கு, 1100 ரூபாயை திரும்பி தந்தார் வியாபாரி. இது போன்ற காட்சிகளை, கிராமச் சந்தைகளில் இன்றும் காணலாம்.

வங்கி செயல்படுவதும், இது போன்ற எளிய விதியின் அடிப்படையில் தான்.

பணம் சம்பாதிப்பதில் உள்ள சிரமம், அதை பாதுகாப்பதிலும் உண்டு. திருடர்களிடம் இருந்து, பாதுகாக்க பூட்டி வைக்கலாம். அதற்கு, தரமான இரும்புப் பெட்டி போதும். அது, பணத்துக்கு சிறைத்தண்டனை கொடுப்பது போல் ஆகும்.

அடைத்து பூட்டிய அலமாரிக்குள், பணம் வளராது. அப்படி வைத்திருப்பது பயனற்ற செயல். பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்; அதே நேரம் வளரவும் வேண்டும். அங்குதான் இருக்கிறது, வங்கியின் பயன்பாடு.

நாணயம், ரூபாய் நோட்டு என்ற பண மாற்று உருவாகும் முன்னரே வங்கி போன்ற சிறு அமைப்புகள் இருந்தன. மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில், வழிபாட்டு இடங்கள் தான், வங்கியாக செயல்பட்டு வந்தன.

மேற்காசியா பகுதியில் செழித்திருந்தது மெசபட்டோமிய நாகரிகம். இங்கு, கி.மு., 3ம் நுாற்றாண்டில், விலையுயர்ந்த பொருட்களையும், உலோகங்களையும் பாதுகாக்க, வழிபாட்டு இடங்களையே நம்பியிருந்தனர்.

ஆங்கிலத்தில், 'பேங்க்' என்ற சொல்லின் பிறப்பிடம், ஐரோப்பிய நாடான இத்தாலி. பழங்காலத்தில் தெருவோர வியாபாரிகளிடம் தங்கம், வெள்ளி வாங்குதற்கு ஈடாக, நாணயம் கொடுப்பர். இந்த நாணயத்தை பரப்பி வைக்க, 'பாங்கா' என்ற, பெஞ்ச் பயன்பட்டுள்ளது. இது தான் பின்னாளில், 'பேங்க்' என்ற சொல்லாக மாறியது. இதே பெயரில் தான், இன்றும் இயங்குகிறது.

வங்கி செயல்பாட்டுக்கு அடிப்படையே பணம் தான். பணத்தை தமிழில், 'சக்கரம்' என்றும் சொல்வதுண்டு. சக்கரம் சுற்றிக்கொண்டேயிருக்கும்; அதுபோல் தான் பணமும். வங்கி செயல்பாட்டின் அடிப்படையும் அது தான்.

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us