
குழலுாதி மனமெல்லாம்!
மனித மனதை ஆற்றுப்படுத்தும் கலைகளில் முக்கியமானது, இசை. இயன்ற போதெல்லாம் வரம்பின்றி கேட்டு ரசிக்கலாம். இசைக்கு இன்றியமையாதவை கருவிகள். மயங்க வைக்கும் காற்றிசைக் கருவிகளில் ஒன்று புல்லாங்குழல். மிக எளிதாக உருவாக்கலாம். எடுத்துச் செல்வதும் சுலபம். இதுபோன்ற காரணங்களால், மிகப்பழங்காலத்திலே உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டது.
புல்லாங்குழல் பற்றிய சுவாரசியங்களைப் பார்ப்போம்...
காற்று இசைக்கருவி வகையைச் சேர்ந்தது புல்லாங்குழல். துளை வழியே காற்றை ஊதி இசையை உருவாக்குவதால், துளைக்கருவி எனவும் அழைப்பர். ஸ்வரங்களை அடிப்படையாக கொண்ட துளைகளை மூடித் திறக்கும் திறனுக்கு ஏற்ப, ஒலிக்கோர்வையை வித்தியாசமாக உருவாக்கலாம்.
இந்தியாவில், இரண்டு வகை புல்லாங்குழல்கள் உள்ளன. பன்சூரி என்ற வகையில், காற்று ஊதும் முத்திரை துளை ஒன்றும், ஸ்வரங்களுக்காக விரல் துளைகள் ஆறும் இருக்கும். இது, இந்துஸ்தானி இசையில் அதிகம் பயன்படுகிறது.
வேணு என்ற வகையில், ஒன்பது துளைகள் உண்டு. இது, கர்நாடக இசையில் பயன்படுகிறது.
மூங்கில் மரத்தில் செய்யப்பட்ட புல்லாங்குழல் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெண்கலம், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களிலும் உள்ளன. ஐரோப்பிய நாடான இத்தாலியில் பயன்படுத்தும், 'பிகாலோ' என்ற இசைக்கருவி புல்லாங்குழலின் சகோதரன் போன்றது.
புல்லாங்குழலில் துளையின் ஆழம், விரல்களை மூடித்திறக்கும் வேகத்துக்கு ஏற்ப, ஒலி அதிர்வு மாறுபடும்; இசையின் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும். துளைகளை மூடாமல், காற்றால் அழுத்தம் கொடுத்தாலும் விதவிதமான ஓசை எழும்.
செங்குத்து மற்றும் கிடைமட்டமாக பயன்படுத்தும் புல்லாங்குழல் வகைகள் உண்டு. ஆசிய நாடுகளான சீனா, கொரியாவில், கிடைமட்ட வகை தான் பயன்பாட்டில் உள்ளன.
இணைக்கும் வகை புல்லாங்குழல், 16ம் நுாற்றாண்டில் அறிமுகமானது. ஊதும் தலைப்பகுதியை மாற்றும் வகையில் அமைந்தது. இதை தனித்தனியே கழற்றி மாட்டும் வகையில் உள்ளது. -நாதஸ்வர இசைக் கருவியும் இந்த வகையில் உள்ளது.
பொழுதுபோக்கு, கலை, பாரம்பரியம் மிக்க சடங்குகளில் முதன்மை இசை கருவியாக விளங்குகிறது. சினிமா, கச்சேரி மற்றும் பலவகை கலைநிகழ்ச்சிகளிலும் புல்லாங்குழல் இசை இடம் பெற்று வருகிறது.
எல்லா வகை புல்லாங்குழலும் ஒரே மாதிரி இசையை தராது. பருவநிலையும், காற்றும் ஒலியை மாற்றக்கூடியவை. தரமறிந்து புல்லாங்குழல் வாங்கினால் இசையின் இனிமையை முழுமையாக அனுபவிக்கலாம்.
புல் குழல்!
புல் இன தாவரமான மூங்கில் மரத்தில் செய்யப்படுவதால், புல்லாங்குழல் என பெயர் பெற்றது. இளமையும், மூப்புமின்றி, நடுவயதுள்ள மூங்கிலை வெட்டி, ஓராண்டு நிழலில் உலர்த்தி பதப்படுத்தி புல்லாங்குழல் தயாரிப்பர். சீரான விட்டமுள்ள ஒடுங்கிய குழாய் தான் இசை எழுப்ப பயன்படும்.
சாதாரணமாக, 15 அங்குல நீளம், மூன்று அங்குல சுற்றளவு இருக்கும். குழலின் இடப்பக்கம் மூடியிருக்கும். இந்திய புல்லாங்குழல், ஒன்பது துளைகள் கொண்டது.
எண்ணிக்கையில் மாறுபட்டவையும் உண்டு. வாயால் ஊதும் துளையை, முத்திரை என்பர். அதை, ஆற்றுவாய் என்பதும் உண்டு.
ஆசிய நாடான சீனாவில் பயன்படுத்தும் புல்லாகுழலில், 11 துளை வரை இருக்கும்.
புல்லாங்குழலின் நீளம், விட்ட அளவு அதிகரிக்கும்போது, சுருதி குறையும். வாசிப்பவரின் மூச்சின் அளவுக்கு ஏற்ப ஸ்வரங்கள் நுட்பமாக ஒலிக்கும்.
உலகம் முழுவதும் சிறு மாற்றங்களுடன், பலவகை புல்லாங்குழல்கள் பயன்பாட்டில் உள்ளன.
வரலாற்றில்...
* புராதன புல்லாங்குழல் பாகங்கள், புதைபொருள் ஆய்வாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை, 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது
* ஐரோப்பிய நாடான ஜெர்மனி, ஸ்வாபியன் ஜீரா பகுதியில் கிடைத்துள்ள புல்லாங்குழலே மிக பழமையானதாக கருதப்படுகிறது
* பயன்பாட்டில் உள்ள இசைக்கருவிகளில் மிகப்பழமையானது
* ஆங்கில இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் ஜெப்ரி சாசர், கி.பி., 1380ல் எழுதிய, 'த ஹவுஸ் ஆப் பேம்' என்ற நுாலில், புல்லாங்குழலை குறிக்கும், 'புளூட்' என்ற ஆங்கிலச்சொல் இடம் பெற்றுள்ளது
* பழந்தமிழர் படைத்த இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில், புல்லாங்குழல் பற்றிய குறிப்புகள் உள்ளன. தமிழர்களின் முதன்மை நீதிநுாலான திருக்குறள், புல்லாங்குழல் பற்றி நேரடியாக பேசுகிறது
* சுமேரியர், எகிப்தியர், கிரேக்கர், சீனர், ஜப்பானியர் என உலகின் பல பகுதிகளில் தோன்றிய நாகரிகங்களிலும், புல்லாங்குழல் இசைக்கும் கலாசாரம் உள்ளது. இசைக்கும் விதம் தான் வேறுபடும்
* பழங்காலத்தில் எலும்பு, யானைத் தந்தத்தில் கூட புல்லாங்குழல் உருவாக்கப்பட்டுள்ளது. பறவை இறகில் உருவாக்கப்பட்டதற்கும் தொல்லியல் சான்று கிடைத்துள்ளது
* இந்துக்களின் கடவுள் கிருஷ்ணர், புல்லாங்குழல் இசைக்கருவியின் அடையாளமாக திகழ்கிறார். அவரது இசைக்கு, உலகே மயங்கும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

