
அரும்பாவூர் நாட்டை ஆட்சி செய்தார் மன்னர் வர்மன். கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து, கோபமாக பேசுவார். அன்பு மொழியை பகிர்ந்ததேயில்லை.
மன்னரின் செயலை, அனைவரும் வெறுத்தனர்.
'சிறு வயது பழக்கம்; மாற்றிக் கொள்ளாமல் உள்ளார்; பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். கோப பேச்சால், வெறுப்பை தான் சம்பாதிக்க முடியும் என்பதை புரிய வைக்க வேண்டும்' என தீர்க்கமாக முடிவு செய்தார் மந்திரி.
மற்றவர்கள் எல்லாம் வெறுப்பைக் காட்ட, அமைதியாக பழகிய மந்திரி மீது மன்னருக்கு தனி பிரியம் ஏற்பட்டது; மந்திரி சொல்வதை, ஓரளவு கேட்டுவந்தார்.
ஒரு நாள் -
மன்னரை, நகர்வலம் அழைத்தார், மந்திரி; அழைப்பிற்கு இணங்கி அன்று இரவு, இருவரும் மாறுவேடம் அணிந்து, முக்கிய வீதியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, 'மன்னரே... உலகத்தில் தாங்கள் சிறப்பாக கருதுவது எது...' என்றார் மந்திரி.
'உலகில் சிறப்பாக கருதுவது, என் கண்டிப்பான கட்டளைகளைத் தான்; கட்டளைப்படி நடக்க மறுப்பவருக்கு, சரியான தண்டனை கொடுப்பேன்! இது உங்களுக்கும் தெரியும் தானே...'
சற்று கோபத்துடன் கூறினார் மன்னர்.
'எல்லாவற்றுக்கும் மேலாக, அன்பு இருக்கிறது; நான், ஒருவரிடம் அன்பாக பேசுகிறேன்! அதன் விளைவை பாருங்கள். அதே நபரிடம் கோபமாகப் பேசுங்கள்; அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதையும் பாருங்கள். மாறுவேடம் அணிந்துள்ளதால், இந்த பரிசோதனையை சிறப்பாக நடத்தலாம்...' என்றார் மந்திரி.
உடன்பட்டார் மன்னர்.
தெருவில், ஒரு காவலன், கண்ணும் கருத்துமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தான்; அவனிடம், பேச முடிவு செய்தனர்.
'நீ என்ன வேலை செய்கிறாய்... ஒரு இடத்திலே நிற்காமல், அங்கும் இங்கும் அலைந்து கண்காணிக்க வேண்டாமா...'
காவலனிடம் கோபத்துடன் கூறினார் மன்னர்.
'மன்னரை விடவும், பெரிய கோபக்காரனாக இருப்பாய் போல தெரிகிறதே... அறிமுகமில்லாமலே என்னை அதட்டுகிறாய்! பேசாமல் போ... இல்லையென்றால், மரியாதை கெட்டு விடும்...'
கோபத்தை கொப்பளித்தான் காவலன்.
'ஐயா... அந்த பேச்சைப் பொருட்படுத்த வேண்டாம்; அவர் சுபாவமே அப்படித்தான்! நீங்கள் சாப்பிட்டீர்களா... காவலர் வேலை கடுமையானது. உதவி வேண்டுமானால் கேளுங்கள்; தாராளமாகச் செய்கிறேன். உங்கள் திடகாத்திர உடலும், கம்பீர தோற்றமும், அழகிய முகமும் காவலர் பணிக்கு பொருத்தமாக உள்ளது...'
அன்புடன் கூறினார் மந்திரி.
'மிக்க மகிழ்ச்சி... முதல் பார்வையிலேயே, மனதை கவர்ந்து விட்டீர். எங்கே செல்ல வேண்டும் என்று தெரிவித்தால், குதிரை வண்டியில் அனுப்புகிறேன்...'
மிகவும் பணிவாக கூறினான், காவலன்.
'பரவாயில்லை...'
மன்னருடன் புறப்பட்டார் மந்திரி.
அரண்மனை திரும்பும் வரை, மன்னர் பதில் ஏதும் பேசாதது, வியப்பாக இருந்தது.
மறுநாள் -
மன்னர் நடவடிக்கையில் பெரும் மாற்றம் தெரிந்தது; அரண்மனையில் மிக அன்புடன் நடந்து கொண்டார். கனிவான வார்த்தைகளை பேசினார்.
குழந்தைகளே... அன்புக்கு ஈடான ஆயுதம் எதுவுமே இல்லை; எதிரிகளையும் காலடியில் விழ வைக்கும் அன்பான சொற்கள். அதை கடைபிடியுங்கள்.

