
படிப்போம்... மாற்றுவோம்!
புத்தகங்கள் பல வடிவங்களில் உள்ளன. படிக்க தான் ஆளில்லை.
காசு கொடுத்து வாங்குவது, தேடி சேகரிப்பது, நுாலகங்களில் படிப்பது போன்ற வழிகளில் அறிவுத்தேடல் மிக இனிமையானது.
உலகளாவிய தகவல்களை விரல் நுனியில் அறியும் காலம் இது. அணுக எளிமையாக, 'டிஜிட்டல்' என்ற மின்னணு முறையிலான புத்தகங்கள் வர துவங்கியுள்ளன. மின்னணு நுாலகங்களும் வளர்ந்து வருகின்றன.
போர்களை தவிர்த்து, நிம்மதியாகவும், நிதானமாகவும் வாழ விரும்புகிறான் மனிதன். இதற்கு பொதுவான தகவல் பரிமாற்றம் தேவை. அறிவுத்தேடலும் அவசியம்.
இந்தக் கருத்தின் அடிப்படையில், பல கோடி புத்தகங்கள், படங்கள், ஆடியோ என்ற ஒலிகோப்புகள் மற்றும் வீடியோ என்ற காணொலிகளை ஒருங்கிணைத்து, பரிமாறும் வகையில், தேடுவதற்கு இணைய தளங்கள் பெருகிவருகின்றன.
இது, கற்பனைக்கு எட்டாத அதிசயம். பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு புத்தகத்தை அல்லது தகவலை சில வினாடிகளில் பெறலாம். சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை
காகித நுாலகத்தில்...
* புத்தகங்களை வகைப்படுத்தி, தொகுத்து பட்டியல் தயாரித்து பராமரிப்பர்
* நேரில் வரும் வாசகர்கள் மட்டுமே படித்து பயனடைய முடியும்.
மின்னணு நுாலகத்தில்...
* இணைய வழியில் தகவல் சேமிக்கப் படுகிறது
* ஒரே நேரத்தில், 'இ புக்' என்ற மின் நுாலை பலரும் படிக்கலாம். காகித நுாலகத்தில் இது சாத்தியமே இல்லை
* உரைநடை, ஒலிகோப்பு, காணொலி, படங்கள், புகைப்படங்கள் என எல்லா வகை ஆவணங்களும், மின்னணு வடிவில், வகைபடுத்தப்படுகின்றன
* இணைய வசதியிருந்தால், 24 மணி நேரமும், மின்னணு நுாலகத்தை பயன்படுத்தலாம்
* உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் கவலைப்பட அவசியம் இல்லை
* அச்சு நுால் போல் கிழிந்து வீணாவதும் இல்லை மின் நுால்கள்
* எப்போதும் புத்தம் புதிதாக தோன்றும்
* அரிதான பழைய நுால்களையும் சிறிதும் பழுதின்றி, எளிய தொழில் நுட்பத்தால் மின் நுாலாக மாற்ற முடியும்
* பழைய நுால்களையும் எளிதாக தேடிப்படிக்க முடியும்
* மின்னணு நுாலக அனைத்து தகவல்களையும், புத்தகங்களையும் மற்றொரு மின்னணு நுாலகத்துக்கு எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.
வழக்கமாக நுாலகங்களுக்கு இடவசதி அதிகமாக தேவைப்படும். மின்னணு நுாலகங்களில் அந்த பிரச்னை இல்லை. கணினியின் கொள்திறனுக்கு ஏற்ப நுால்களை சேமிக்கலாம். வாசகர்களின் சந்தேகத்தை மின்னஞ்சலில் தீர்த்து வைக்கலாம்.
இதன் விரிவாக்கம் அலைபேசியில் பரிமாறவும் வாய்ப்பு உள்ளது.
கல்வி, அறிவியல், மருத்துவம், வியாபாரம், விளையாட்டு, பொறியியல் போன்ற அனைத்து துறை வளர்ச்சிக்கும் மின்னணு நுாலகம் வரப்பிரசாதம்.
அலைபேசியில் புத்தகம் படிக்கும் செயலிகளை, சிறுவர், சிறுமியருக்கு அறிமுகப்படுத்துவது மிக அவசியம். படிப்பறிவே, உலகை, வசதி மிக்கதாக மாற்றும்.
பசியும் ருசியும்!
பசி வந்தால் பத்தும் பறந்து விடும் என்பது முதுமொழி. பசி, ருசி, வாசனை, உணவில் நிறைவு போன்ற உணர்வுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
எல்லாம் உண்பதை ஒட்டிய விஷயங்கள்.
'பசியில் உயிர் போகுதே...'
'ஒரு வாய் கஞ்சி தர யாரும் இல்லையா...'
இதுபோல் பரிதவித்து ஏங்குவோர் கூட்டம் ஒருபுறம்.
'பசியே எடுக்க மாட்டேங்குதே டாக்டர்...'
இப்படி புலம்பித் திரியும் சிறுகூட்டம் மறுபுறம்.
பசிதான், இரு தரப்புக்கும் பிரச்னை.
பசி உணர்வு குறித்து பார்ப்போம்...
மனிதனின் ரத்தத்தில், 80- முதல், 120 மில்லிகிராம் வரை, குளுக்கோஸ் இருக்க வேண்டும். இதுதான் உடல் பாகங்களுக்கு சக்தியை அளிக்கிறது.
உண்டு முடித்தவுடன், உடலில் ரத்த குளுக்கோஸ் அளவு, 140 மி.கி., வரை இருக்கும். அதைவிட அதிகம் இருந்தால் கழிவாக சிறுநீரில் வெளியேறும். பலருக்கு நோயாகி படுத்தும்.
ரத்த குளுக்கோஸ் அளவு, 90- மில்லி கிராமை விட குறைந்தால், பசிக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறையும்போது, வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகரிக்கும். 'காஸ்ட்ரின்' என்ற ஹார்மோனும் சுரக்கும். இவை சேர்ந்து, ஒட்டு மொத்தமாக வயிற்றுக்குள் ஏற்படுத்துவது தான் பசி என்ற உணர்வு.
குளுக்கோஸ் குறைந்தால், எதிர்ப்பு தெரிவித்து ரத்தத்தை ஏற்க மறுக்கும் மூளை.
உடலில் மிகச்சிறிய பகுதிதான் மூளை. ஆனால் அதற்குத்தான், சுத்த ரத்தத்தில் பெரும்பகுதி தேவைப்படுகிறது.
'ஆஹா... வாசனை துாள் கிளப்புதே... சாப்பிடணும் போல இருக்கே...'
இது போன்ற எண்ணம் வந்தவுடன் சாப்பிட்டால் தான், மருத்துவ ரீதியாக உடலுக்கு பலனைத் தரும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவின் வாசனையை முகர்வதால், உட்கொள்ளும் அளவு மாறுபடுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக, கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பண்டங்களில் வெளிப்படும் வாசனையை முகர்ந்தால், பசியுணர்வு குறையும்.
மகிழ்ச்சியை, மூளையால் துல்லியமாக வேறுபடுத்தி பார்க்க முடியாததே இதற்கு காரணம். பசியுணர்வைக் கட்டுப் படுத்துவதில், ஒரு வகை நறுமணமும் முக்கிய காரணம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பசி உணர்வை கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதால் தான், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
பசியால் தவிப்பவருக்கு, தயங்காமல் உணவிடுவோம். அது, எந்த வகை உயிரினமாகவும் இருக்கட்டும். பசி பிணி போக்க, அணையா சுடரை ஏற்றி வைத்தார் வள்ளலார் சுவாமி. பெருங்கருணையுடன் பட்டினியை விரட்ட, இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது அவர் மூட்டிய அடுப்பு.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

