
பணம் தட்டும் விளையாட்டு!
பொம்மையை வைத்து குழந்தைகள் ஆடுவதல்ல, வீடியோகேம். உலகம் முழுவதும் பெரியவர்களால் ஆடப்படுகிறது. இதன் மூலம் பணத்தை குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
ஓடுவது, குதிப்பது, சண்டை போடுவது, சமைப்பது, வரைவது என, நம்ப முடியாத வகைகள் இதில் உள்ளன. பல்லாயிரம் கோடி பணம் குவிக்கிறது.
இணையம் சார்ந்து லாபம் குவிக்கும் தொழில்கள் பல உள்ளன. அதில், 'வீடியோகேம்' முதன்மையானது. அதன் பின்னணியில் உள்ள வணிகம் வியக்க வைக்கும்.
உலகம் முழுதும் வீடியோகேம் விளையாடுவோர் எண்ணிக்கை, 250 கோடி. ஐரோப்பிய அமைப்பு, 2017ல் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. தற்போது, மேலும் உயர்ந்திருக்கும். 
இந்த விளையாட்டுச் சந்தையில், 5.6 லட்சம் கோடி ரூபாய், 2017ல் புரண்டது. இது நடப்பு ஆண்டில், 6.4 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில், பொழுதுபோக்க, வீடியோகேம் ஆடியவர்களே அதிகம்.
இந்த தொழிலில், 80 சதவீதம் தொகை மென்பொருள் விற்பனையில் கிடைக்கிறது. உலகில் மிகப்பெரும் நிறுவனங்களான டென்சென்ட், சோனி, ரியாட், ஆக்டிவிஷன், பிலிஷ்ஷர்டு உள்ளிட்டவை இதில் முதலீடு செய்துள்ளன. 
ஆசிய நாடான சீனாவை சேர்ந்த டென்சென்ட் மற்றும் ஜப்பானிய நிறுவனமான சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின் நிறுவனங்கள், கிட்டத்தட்ட பாதி அளவு சந்தையை கைப்பற்றியுள்ளன. டென்சென்ட் நிறுவனம், 2018-ல், 32 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.
வீடியோகேம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நாடு சீனா தான். இது, 2017ல், 41 சதவீதம் அளவில் பங்களித்தது. அமெரிக்காவின் பங்கு, 32 சதவீதமாக உள்ளது.
வீடியோகேமில் ஆர்வம் இருப்பின், சும்மா ஆடிக்கொண்டு இருக்க வேண்டாம். இத்துறையில் புதிய விளையாட்டு மென்பொருட்களை உருவாக்கி பணத்தை குவியுங்கள்.
மண் மகத்துவம்!
சமைத்த உணவு மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படும் பாத்திரங்கள் கூட உடல் நலத்தை தீர்மானிக்கும்.
மண் பாத்திரங்களில் சமைத்தால், உணவின் சூட்டை நீண்ட நேரம் தக்க வைத்துக்கொள்ளும்; சத்துகள் வீணாகாது; சீக்கிரமே வெந்துவிடும். செரிமான கோளாறு ஏற்படாது. உலோக பாத்திரங்களில் சமைத்தால் அமில பாதிப்பு ஏற்படும். 
புதிதாக வாங்கிய மண் பாத்திரத்தை, இரண்டு நாட்கள் நீரில் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து வெயிலில் உலர்த்திய பின்னரே, சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். 
இயற்கை மிளிரட்டும்!
உலக இயக்கத்தின் உயிர் நாடி மின்சாரம். முடிவற்ற எரி பொருள் வளம் கொண்ட சூரியனிடம் இருந்து, மின்னாற்றல் தேவையை பூர்த்தி செய்யலாம். இதை முன்னெடுக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இதை நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் நிலவுகிறது. அதிக பொருட் செலவு, தடையாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு தீர்வாக புதிய தொழில் நுட்பங்கள் பேசு பொருளாகியுள்ளன. 
திரவ நிலையிலான சோலார் பேனல் தயாரிப்பு தொழில் நுட்பம் பற்றிய பேச்சு பரவலாகியுள்ளது. 
சூரிய ஒளித்தகடு, திட நிலையில் உள்ளது. ஆனால், திரவ நிலையில் உள்ள பெயின்ட் பயன்படுத்தி, சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற உத்தி, பரிசோதனை நிலையில் உள்ளது. 
இந்த ஆய்வு, விரைவில் வெற்றி இலக்கை தொட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர் அறிஞர்கள். வெற்றி பெற்றால், தரைத்தளம், சுவர்கள் எல்லாம் சோலார் பேனலாகச் செயல்பட்டு மின் உற்பத்தி செய்யும்.
ஒளி ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றும் செல்களின் தொகுப்பே, 'சோலார் பேனல்' எனப்படுகிறது. இது, 'பாலி கிரிஸ்டலைன் சிலிகான்' என்ற வேதிப்பொருளால் உருவாக்கப்படுகிறது.  தற்போது பயன்பாட்டில் உள்ளது மிகவும் தடிமனான தகடு. இதை, மெல்லியதாக உருவாக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இதற்கு மாற்றாக, 'பிளாஸ்மோனிக்' என்ற, 'ஆர்கானிக்' வகைப் பொருட்களை பயன்படுத்தி, சூரிய சக்தி மின் ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என்ற கருத்தும் உருவாகியுள்ளது. இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கும் செலவு மிக குறைவு. 
திரவ வடிவிலான இதை எளிதாக பயன்படுத்தலாம். சுவர், தரை பகுதியில் சுலபமாக பூசி, மின் உற்பத்தி செய்ய முடியும்.
இது மட்டுமின்றி, கார்பன் மூலக்கூறு மற்றும் பாலிமர் பயன்படுத்தி, மெல்லிய சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளது. 
இந்த நுட்பங்கள், வெற்றி பெற்றால், தேவையான மின்சாரத்தை, எளிதாக வீட்டிலே உற்பத்தி செய்து, தன்னிறைவு பெற முடியும்.
இயற்கையால் மிளிரட்டும் உலகு.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

