
மொழியறிவு!
அன்று சுவையான திண்பன்டங்களை மகனுக்கு அடையாளம் காட்டியது தாய் எலி. இரண்டும் ரசித்து ருசித்து சாப்பிட்டன.
மறுநாள், 'உனக்கான பொந்து ஒன்றை பார்க்கச் சொல்லியிருந்தேனே... கண்டுபிடித்து விட்டாயா...' என்றது தாய்.
'இன்னும் இல்லை... அம்மா'
'மகனே... திடீரென்று பூனை அரக்கன் வந்தால் என்ன செய்வது... பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டாமா...'
'சரியம்மா... உடனே கவனிக்கிறேன்...'
'வேறொன்றும், கூறியிருந்தேனே...'
'மன்னிக்க வேண்டும் அம்மா... அதையும், இன்னும் செய்யவில்லை...'
'தவறு மகனே...'
தாய் எலி பேசிக் கொண்டிருந்த போதே, ஜன்னல் வழியாக, 'மியாவ்' என அலறியப்படி, அறையில் குதித்தது பூனை.
உடனே, சுறுசுறுப்பாக பொந்தில் புகுந்தது தாய். 
'எச்சரித்தும், கவனக்குறைவாக இருந்து விட்டேனே; ஓடவும் வழியில்லை; பூனை பாய்ந்து, என்னை கொல்லப் போகிறதே' என, பயத்தில் உறைந்தது எலிக்குட்டி. 
கண்களை இறுக மூடியபடி, பூனையின் தாக்குதலை எதிர்பார்த்து நின்றது.
அப்போது, 'லொள்... லொள்...' என, நாய் குரைக்கும் ஒலி கேட்க, திடுக்கிட்டது பூனை. எலியை பின்னர் பார்த்து கொள்ளலாம்; இப்போது, தப்ப வேண்டும் என எண்ணியபடி ஓடியது பூனை.
காப்பாற்றிய நாய்க்கு நன்றி சொல்ல எண்ணி, மெதுவாக கண்களை திறந்தது குட்டி எலி; எதிரில் நின்ற தாய், 'மற்றொரு மொழி கற்றுக் கொள்... உபயோகமாக இருக்கும் என, கூறியது இப்போது புரிகிறதா...' என்றது.
அப்போது தான், நாய் போல் குரைத்தது தாய் தான் என, எலிக்குட்டிக்கு புரிந்தது. அன்று முதல், தாயின் பேச்சை மதித்து ஒழுகியது. 
குழந்தைகளே...மூத்தோர் சொல்லை மதித்து நடக்க பழகுங்கள்.
சிறந்த ஆயுதம்!
ஏளம் நாட்டில் புத்திசாலி மன்னர் இருந்தார். தளபதி, மந்திரி பிரதானிகள் சூழ, நகர்வலம் வந்தவர், 'திடீரென ஆபத்து சூழ்ந்தால் தற்காப்புக்காக பயன்படும் ஆயுதம் எது...' என்றார்.
'வாள்...' என்று பதில் கூறினார் தளபதி.
'வாள் பிடித்த கை செயலற்று போனால்...' என, எதிர் கேள்வி எழுப்பினார் அமைச்சர்.
'ஈட்டி...' என்றார் பிரதானி. 
'குறி தவறி விட்டால்...'
எதிர் கேள்வி போட்டார் அமைச்சர்.
'சரி... நீங்களே சொல்லுங்கள்...' என்றார் மன்னர். 
'சமயோசித அறிவே தலைசிறந்த ஆயுதம்...' என்றார் அமைச்சர்.
இதை ஏற்க மறுத்து, 'ஆபத்து ஏற்படும் போது, மூளை செயலற்று போய் விடும். அதனால், ஆயுதங்களே கை கொடுக்கும்...' என முடித்தார் மன்னர்.
அப்போது திடீரென, கூச்சலும், கூக்குரலும் எழுந்தது. 
பரபரப்புடன் ஓடி வந்தனர் மக்கள்.
'ஆபத்து, பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது; இந்த பக்கம் தான் வந்து கொண்டிருக்கிறது; ஓடிவிடுங்கள்...' என்றனர்.
மன்னரும், பிரதானிகளும் வாளை உருவி நின்றனர். 
மதம் கொண்ட யானையின் சீற்றத்தின் முன், வாளோ, ஈட்டியோ பயன்படாதது புரிந்தது. 
வகையாக சிக்கிய உணர்வு எழ, செயலற்று நின்றனர்.
அவர்களை நோக்கி வந்தது யானை.
அங்கிருந்த பூனையை துாக்கிய அமைச்சர், திடீர் என யானை முதுகில் எறிந்தார் அமைச்சர். 
மிரண்ட பூனை பிராண்டியது. வலி பொறுக்க முடியாமல் தும்பிக்கையால், பூனையை பிடிக்க முயன்றது யானை. குதித்து ஓடியது பூனை.
யானையின் கவனம் திரும்பியது. பூனையை துரத்தியபடி ஓடியது.
'சபாஷ்... அறிவு தான் சிறந்த ஆயுதம்; புரிய வைத்து விட்டீர் அமைச்சரே...' 
வெகுவாக பாராட்டினார் மன்னர்.
செல்லங்களே... சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படுத்தும் அறிவே, சிறந்த ஆயுதம்!
- குரு

