sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

தமிழர் திருநாள் பொங்கல்!

/

தமிழர் திருநாள் பொங்கல்!

தமிழர் திருநாள் பொங்கல்!

தமிழர் திருநாள் பொங்கல்!


PUBLISHED ON : ஜன 09, 2021

Google News

PUBLISHED ON : ஜன 09, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கைக்கு, நன்றி செலுத்துவதே தைத்திருநாள். இயற்கையின் சக்தியை உலகிற்கு உணர்த்தும் பெருநாள். விவசாயத்துடன் சம்பந்தப்பட்டது. இது, பொங்கல், உழவர் திருநாள், அறுவடைத் திருநாள் என வழங்கப்படுகிறது.

பொங்கல் தினத்தில் முக்கிய பங்கு வகிப்பது சூரிய வழிபாடு. அனைத்து உயிரினங்களும் இயங்க, சக்தியை அளிப்பது சூரியன். அதை வணங்கினால் மகிழ்ச்சியுடன் வாழ வழி பிறக்கும் என்பது நம்பிக்கை.

தை மாதத்தில், உத்ராயண புண்ய காலம் துவங்குகிறது; உத்தர் என்றால் வடமொழியில், வடக்கு என்றும், அயனம் என்றால், வழி என்றும் பொருள். தென்திசையிலிருந்து, வடதிசை நோக்கி சூரியன் பயணம் செய்வதே, உத்தராயணம் எனப்படுகிறது.

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாதங்கள் உத்தராயண காலமாகும். உத்தராயணம் துவங்குவதை, தை பிறந்தால் வழி பிறக்கும் என குறிப்பிடுகின்றனர்.

கலாசார வளம் கொண்டது இந்தியா. அதற்கு ஏற்ப மாநிலங்களில் பல பெயர்களில் அறுவடை நாள் கொண்டாடப்படுகிறது. அது பற்றி பார்ப்போம்...

கர்நாடகா:

மகர் சங்கராந்தி என்ற பெயரில், ஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தான் கடைபிடிக்கின்றனர். அறுவடை செய்த தானியங்களுடன், வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வர்.

பூஜையில் வைக்கும் இளநீரை, மலையிலிருந்து வேகமாக துாக்கி எறிவர். அது விழும் துாரத்துக்கு, கிராம எல்லை விரியும் என்பது நம்பிக்கை.

மைசூரு மற்றும் மாண்டியா பகுதிகளில், காளைப் பந்தயம் நடக்கிறது. வெல்லம், கரும்பு, வேர்க்கடலை, எள்ளு போன்றவற்றை உற்றார், உறவினருக்கு கொடுத்து மகிழ்கின்றனர்.

ஆந்திரா:

மகர் சங்கராந்தி என்றே அழைக்கப்படுகிறது. மூன்று நாட்கள் கொண்டாட்டம் உண்டு. முதல்நாள், பல வண்ணக் கோலம் போடுவர். மறுநாள், மகர் சங்கராந்தியாக கொண்டாட்டம். மூன்றாம் நாளை, 'கன்னுமா' என்பர். இது மாட்டுப் பொங்கல். இந்த நாளில், காளைப் பந்தயம், கோழிச்சண்டை போன்றவை உண்டு.

மகாராஷ்டிரா:

இங்கும், மகர சங்கராந்தி என்றே அழைப்பர். பண்டிகையன்று, கறுப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்பு பரிமாறுகின்றனர். கறுப்பு நிற உடை அணிவதை பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்.

விளை நிலத்தில் கரும்பு, வெல்லம், எள்ளு தானியத்தை பானையில் வைத்து பூஜை செய்கின்றனர். பல வண்ண பட்டங்கள் செய்து பறக்க விட்டு மகிழ்வர்.

ஒடிசா:

பழங்குடி மக்கள் மட்டும், ஆட்டம், பாட்டம் என, மகர சங்கராந்தியை ஒரு வாரத்திற்கு கொண்டாடுகின்றனர். புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில், வழிபடுகின்றனர். சத்தீஸ்கர் மாநிலக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு உண்டு!

உத்தரபிரதேசம்:

உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் மாநிலங்களில், மகர சங்கராந்தி நாளில், பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

கும்பமேளாக்கள் இந்த நாளில் தான் துவங்கும். கங்கை, யமுனை, நர்மதா என நதிகளில் குளிப்பதை கடமையாக கருதுகின்றனர். கேழ்வரகில் பச்சடி செய்து சாப்பிடுகின்றனர்.

அசாம்:

அசாம் மாநிலத்தில், போக்லி பிஹு, மாக் பிஹு என, இரு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கு கூடி சாப்பிட்டு மகிழ்தல் என்று பொருள். அறுவடை முடிந்து, களங்கள் நிறைந்து காணப்படும். இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவே கொண்டாடுகின்றனர்.

ஆறுகளின் ஓரம், பனை, தென்னை ஓலைகளால் சிறு குடிசைகள் அமைக்கின்றனர். அங்கு விருந்து உண்டு, மறுநாள் காலை குடிசைகளை எரித்து விடுகின்றனர். மாடு, கோழி சண்டைகளும் உண்டு. முட்டையால் அடித்து விளையாடி மகிழ்கின்றனர். இந்த நாளை, 'உருக்கா' என்பர்.

பீகார்:

மகர சங்கராந்தி மற்றும், 'சக்ராட்' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். எள், வெல்லம் கலந்த இனிப்பு வழங்கி மகிழ்கின்றனர். காய்கறிகள், பால், தயிர், பழங்கள் போட்டு உணவு தயாரிக்கின்றனர்.

குஜராத்:

ஜனவரி 14ம் நாள், உத்தராயணி என்ற பெயரிலும், 15ம் நாள், வாசி உத்தராயணி என்ற பெயரிலும் இங்கு கொண்டாடுகின்றனர். பதங் என்ற, பட்டம் விட்டு மகிழ்வர். குளிர் பருவத்தில் விளையும் காய்கறிகளால், 'உந்தியு' என்ற வகை உணவை தயாரித்து உண்டு மகிழ்வர்.

இமாச்சலப்பிரதேசம்:

இங்கு, 'மஹாசாஜா' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்; மகர ராசியில், சூரியன் பிரவேசித்து, மகம் மாதப் பிறப்பையே கொண்டாடுகின்றனர். அதிகாலையில் எழுந்து, புனித நீராடி, சூரியக்கடவுளை வணங்குகின்றனர்; உறவினருடன் விருந்துண்டு மகிழ்கின்றனர்.

உத்தரகாண்ட்:

'உத்ராயணி' என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இனிப்பு மாவில் செய்த உருண்டைகளை, நெய்யில் வேகவைத்து, மாலையாகக் கட்டி அணிந்து கொள்கின்றனர். இதற்கு, 'காலேகவ்வா' என்று பெயர்.

இவ்வாறு, வாழ்நிலை, விளை நிலத்துக்கு ஏற்ப, பொங்கல் பல வண்ணங்களில் கொண்டாடப்படுகிறது.






      Dinamalar
      Follow us