
கடலில் பயணிக்கும் கப்பல், பாதுகாப்பாக துறைமுகத்தில் நுழைய வழிகாட்டுகிறது கலங்கரை விளக்கம். கடலில் பவழப்பாறை, மலை மீது, மோதி விடாமல் தடுக்கவும் செய்கிறது.
இந்திய கடற்கரை, 7 ஆயிரத்து, 517 கி.மீ., நீளமுள்ளது; இதில், 189 பகுதிகளில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக கடற்கரையில், 25 பகுதிகளில் உள்ளன.
பண்டைய தமிழர்கள், கப்பல் போக்குவரத்துக்கு உதவ பல இடங்களில், கலங்கரை விளக்கம் கட்டியிருந்தனர். சோழர் ஆட்சி காலத்தில் கட்டியதை, நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரையில் இன்றும் காணலாம்.
தமிழரின் தொன்மை காப்பியமான சிலப்பதிகாரம், கலங்கரை விளக்கங்கள் இருந்ததற்கான ஆதாரங்களை தருகிறது.
உலகம் முழுவதும், 18 ஆயிரத்து, 600 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. மிக உயரமானது, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா, ஜெட்டா நகரில் அமைந்துள்ளது. இதன் உயரம், 133 மீட்டர். ஒளி வீச்சு, 46 கிலோ மீட்டர் துாரம் வரை படரும்; விளக்கு, 20 வினாடிகளுக்கு, ஒரு முறை சுழன்று மினுக்கும்.
மிக சிறிய கலங்கரை விளக்கம், ஐரோப்பிய நாடான இங்கிலாந்து அருகே ஹில்பரி தீவில் உள்ளது; இது, மூன்று மீட்டர் மட்டுமே உயரம் கொண்டது.
கலங்கரை விளக்கம் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா. அங்கு, 1764ல் கட்டப்பட்டது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
வட கிழக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து, அலெக்சாண்டிரியா நகரில், கி.பி.,300க்கு முன்பே, கலங்கரை விளக்கம் இயங்கியதாக ஆதாரங்கள் உள்ளன.
உலகம் முழுவதும், பெரும்பாலும் வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் பூசப்பட்ட நெடிய துாணில் இயங்கி வருகின்றன. வெகு துாரத்திலிருந்து பார்த்தாலும் புலப்படும் வண்ணங்கள் அவை.
கலங்கரை விளக்கம், 1910க்கு பின்தான், மின்சாரத்தில் இயங்க துவங்கியது. அதற்கு முன், தீ வட்டி, பெரிய மெழுகுவர்த்தி, திமிங்கல கொழுப்பு எண்ணெயில் எரியும் விளக்கு போன்றவை பயன்படுத்தபட்டன.

