
கப்ப கிழங்கின் கதை!
குச்சிக்கிழங்கு, மரச்சீனி, கப்பக்கிழங்கு என, பலவாறாக அழைக்கப்படும், மரவள்ளி செடியின் தாயகம் ஆப்ரிக்கா. மரம்போல வளர்வதால், மரவள்ளி என பெயர் பெற்றது.
போர்ச்சுகீசிய மாலுமிகள், 17ம் நுாற்றாண்டில், இந்தியா கொண்டுவந்தனர். கேரள மாநிலம், கொச்சி துறைமுகப்பகுதியில் பயிரிட்டனர்.
கப்பலில் கொண்டு வந்ததால், கப்பல் கிழங்கு என, அழைக்கப்பட்டது. பின், கப்பக்கிழங்கு என மருவியது. இதன் தோலை உரித்தால் பளபளப்பாக, யானைத் தந்த வண்ணத்தில் இருக்கும். கார்போஹைட்ரேட் சத்து நிறைந்தது; சுவை அபரிமிதமானது.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் அதிகம் உற்பத்தியாகிறது. இந்தியாவில், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட, 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. பணப்பயிராக மதிக்கப்படுகிறது.
இந்தியாவில், 1860ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. கேரளாவும் அதிகம் பாதிக்கப்பட்டது. அப்போது கேரளாவின் தென் பகுதியில் திருவிதாங்கூர் மன்னராக இருந்தவர் விசாகம் திருநாள் ராமவர்மா. இயற்கையை நேசித்தவர். தாவரவியலில் அதிக நாட்டம் கொண்டவர்; கேரளத்தில் புதிய செடி, மரங்களை அறிமுகம் செய்தவர்.
பஞ்சம் வாட்டிய போது, மரவள்ளி செடியை, போர்ச்சுகீசியரிடம் பணம் கொடுத்து வாங்கி, சாகுபடி செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
மறுப்பவருக்கு கசையடி உட்பட தண்டனைகள் அறிவிக்கப்பட்டன. ஊரெங்கும் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், மக்கள் சாகுபடிக்கு முன்வரவில்லை.
நிதானமாக சிந்தித்து, ஒரு தந்திரம் செய்தார் மன்னர்.
அரசு நிலத்தில் மரவள்ளியை பயிரிட உத்தரவிட்டார். அது விளைந்த போது, மற்றொரு உத்தரவை பிறப்பித்தார் மன்னர்.
அதன்படி, 'மிகுந்த சத்துள்ள ராஜ உணவு பயிரிடப்பட்டுள்ளது. இதை யாராவது திருடினால் கடும் தண்டனை வழங்கப்படும்...' என அறிவிக்கப்பட்டது.
மன்னரின் முயற்சி வீண்போகவில்லை.
அரசு தோட்டங்களில் பயிரிட்டிருந்த மரவள்ளி செடிகள், இரவுடன் திருட்டு போனது. அவற்றை, வேருடன் பிடுங்கி சென்று, தண்டை துண்டாக்கி சாகுபடி செய்தனர் விவசாயிகள்.
உற்பத்தி பரவலான போதும் உணவாக்கும் விதம் தெரிய வில்லை. உடனே, ஊர் ஊராக சென்று, உள்ளூர் பிரமுகர்களுடன் அமர்ந்து விருந்துண்டார் மன்னர். விருந்தில் மரவள்ளிக்கிழங்கு முக்கிய உணவாக பரிமாறப்பட்டது. அது கேரள மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்றானது.
இவ்வாறு பஞ்சத்திலிருந்து கேரள மக்களைக் காத்தது மரவள்ளி. பின், வனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு, மரவள்ளி பயிர் ஆதிக்கம் பெற்றது.
உணவின் வரலாறு!
உணவுக்காகப் பயிரிடப்படும் மரவள்ளி, 'எஸ்கியூலெண்டா' என்ற தாவர இனத்தின் துணை இனமான, 'பிளபெலிபோலியா' இனத்திலிருந்து உருவானதாகக் கருதப்படுகிறது.
இது, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாகுபடி செய்யப்பட்டதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. வட அமெரிக்க நாடான மெக்சிகோ குடா தொல்லியல் களத்தில், மரவள்ளி மகரந்தப்பொடி கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில், 1,400 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன் நாகரிக காலத்தில் மரவள்ளிப் பயிர்செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பியர் வருகைக்கு முன்பே, தென் அமெரிக்க கண்ட பகுதியில் மரவள்ளி முக்கிய உணவாக இருந்துள்ளது. இது புராதன ஓவியங்களிலும் இடம்பெற்றுள்ளது.
மரவள்ளியின் பயன்கள்!
மரவள்ளியில் பலவகை உணவு தயாரிக்கப்படுகிறது. அதில் உள்ள நச்சு நீக்கி, முறையாக சமைக்க வேண்டும். மரவள்ளியுடன், இஞ்சி கலந்து சமைக்கக்கூடாது. கலந்தால் ஆபத்து விளைவிக்கும்.
தோலுரித்த மரவள்ளிக் கிழங்கை அவித்து உண்பது பொதுவான பழக்கம். துணைக் கறிகளுடன் பயன்படுவதும் உண்டு. அவித்த கிழங்கில், மிளகாய், உப்பு சேர்த்து, இடித்து உண்பதும் உண்டு.
கிழங்கை, மெல்லியதாக சீவி, எண்ணெயில் பொரித்து உண்பதும் உண்டு. இது, பல நாட்கள் கெட்டுப்போகாது. கிழங்கு மாவு, அரிசி மாவிற்கு மாற்றாக பல நாடுகளில் பயன்படுகிறது
தொழில்துறையில்...
* ஸ்டார்ச், தெக்கிரின், குளுக்கோஸ் மற்றும் எத்தில் தயாரிக்கும் மூல பொருளாக பயன்படுகிறது
* எளிதில் கெட்டு போகாது என்பதால் வணிக ரீதியாக வடகம், அப்பளம், சிப்சாக தயாரித்து விற்கப்படுகிறது. இவை ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
* பருத்தி மற்றும் சணல் ஆடைகள் உற்பத்தி, காகிதம் மற்றும் கெட்டி அட்டை தயாரிக்க, மாவு பயன்படுகிறது.
மரவள்ளி மாவை, எளிதாக திரவ குளுக்கோஸ் மற்றும் டெக்ஸ்ட்ரோசாக மாற்ற முடியும். எனவே மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
ஜவ்வரிசி!
தெற்காசிய நாடுகளில், சதுப்பு நிலப்பகுதியில் வளரும் ஒருவகைப் பனைமரத்தில் கிடைக்கும் பதநீரை காய்ச்சினால் கிடைக்கும் மாவு, சேகோ. அதை, அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி, இந்தியாவில் விற்பனை செய்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, ஜாவா பகுதியில் இருந்து கொண்டுவரப் பட்டதால், அதை, 'ஜாவா அரிசி' என்றனர். அது மருவி, ஜவ்வரிசி என்றானது.
இதுவும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது, மரவள்ளி மாவில் இருந்து, ஜவ்வரிசி தயாரிக்கும் கலையை உருவாக்கினர் தமிழர்கள். இப்போது, பெரும்பாலும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளது, மரவள்ளியில் தயாராகும் ஜவ்வரிசிதான்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

