
தொப்பியின் கதை!
தலையை பாதுகாப்பது தொப்பி. சூரிய வெப்பம் மற்றும் குளிரில் இருந்து காக்கிறது. இதில், பல வகை உள்ளன. ஆண், பெண் அணியும் தொப்பியில் வேறுபாடுகள் உண்டு. வட்டம், நீள்வட்ட வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.
சமய சடங்குகளில் பாரம்பரியமாக தொப்பி அணியும் வழக்கம் பல இன மக்களிடம் உண்டு. ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு போன்ற பிரிவுகளில் பணியாற்றுவோர் கட்டாயமாக தொப்பி அணிகின்றனர்.
அதிகார நிலையில் உள்ள வித்தியாசங்களைக் குறிக்கவும் பயன்படுகிறது தொப்பி. மருத்துவத் துறையில், பாதுகாப்புக் கவசமாக உதவுகிறது.
அழகிய தொப்பியை விரும்பாதவர் இல்லை. அயல் நாட்டினர் வாழ்வில் தொப்பி ஓர் அங்கம். ஆனால், அதுபோன்ற பழக்கம் இங்கு இல்லை. தமிழில், 'தொப்பி வியாபாரியும் குரங்கும்' என்ற கதை மிகவும் பிரபலம்.
தொப்பி தோன்றிய கதையை பார்ப்போம்...
இது, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் உள்ளது. கி.மு., 3ம் நுாற்றாண்டில் வடிக்கப்பட்ட பெண் சிலை, தொப்பி அணிந்து காட்சி தருகிறது. இதை, கிரேக்கர்கள் செதுக்கியுள்ளனர்.
வட ஆப்பிரிக்கா பகுதியில் வாழ்ந்த எகிப்தியர், தலைமுடியை மழித்து தொப்பி அணியும் வழக்கம் கொண்டிருந்தனர். மத்திய கிழக்கு பகுதியில் தலையை குளிர்ச்சியுடன் பேண, குல்லா அணிந்தனர்.
உலகம் முழுவதும் பரவலாக தொப்பி அணியும் வழக்கம், சில நுாற்றாண்டுகளுக்கு முன் தான் ஏற்பட்டது.
ஐரோப்பாவில், ஜான் கேதரிங்டன் என்பவர், கி.பி., 1797ல், 'டாப் ஹேட்' எனப்படும் வட்டவடிவ தொப்பி அணிந்து தெருவில் நடமாடி, பொதுமக்களை பயமுறுத்தியதாக, அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அபராதமும் விதிக்கப்பட்டது.
எல்லா வகை தொப்பியையும், 'ஹேட்' என்ற ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். அவற்றில் பல ரகங்கள், பல பெயர்களில் உள்ளன.
ஐரோப்பிய நாடான பிரான்சில், 'பெரெட்' என்ற ரக தொப்பி பிரபலம். பிறந்தநாள் விழாவில் அணியும், கூம்பு வடிவத் தொப்பியும் இங்கு தான் தோன்றியது.
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்தில், 'பால்மோரல்' என்ற தொப்பி அணிகின்றனர். இது, வட்ட வடிவிலானது.
மாயா ஜாலம் செய்பவர் அணியும், மேஜிக் தொப்பி, 'பீவர் ஹேட்' எனப்படும். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், இந்த வகை தொப்பியை விரும்பி அணிந்து வந்தார். பின், மிகவும் பிரபலமானது.
அமெரிக்காவில் பிரபலமாக உள்ளது, 'டெர்பி' வகை தொப்பி. கோமாளியின் அடையாளமாக உள்ளது, கூம்பு வடிவத் தொப்பி. குதிரை மேய்ப்பவர் அணிவது, 'கவ்பாய் தொப்பி' எனப்படுகிறது.
ஒரு வகை தொப்பி, தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிகம் தயாரிக்கப் படுகிறது. அதன் அண்டை நாடான பனாமாவில், அதிகம் விற்பனையாவதால், 'பனாமா தொப்பி' என பெயர் பெற்றுள்ளது.
ஆசிய நாடுகளில், பனை, தென்னை ஓலை மற்றும் இலைகளில் தயாரித்த தொப்பியை அணிகின்றனர்.
ஆண்,பெண் அணியும் தொப்பிகளுக்கு பெயர் மாறுபாடு இல்லாவிட்டாலும், அதை வினியோகிப்போருக்கு, வேறுவேறு பெயர்கள் உள்ளன.
ஆண்களுக்கு தொப்பி வினியோகிப்பவரை, 'ஹோட்டர்ஸ்' என்ற பெயரால் குறிப்பர். பெண்களுக்கு வினியோகிப்பவர், 'மில்லினர்ஸ்' எனப்படுகின்றனர்.
ஐரோப்பாவில், 19-ம் நுாற்றாண்டில், 'பேஸ்பால்' என்ற விளையாட்டில், தொப்பி அணிந்தே நடுவர் பங்கேற்றார். இப்போது கிரிக்கெட் போட்டியிலும் நடுவர் தொப்பிவுடன் தோன்றுவதைக் காணலாம்.
சமையல் கலைஞர்கள் அணியும் தொப்பியில், 100 மடிப்புகள் இருக்கும். அவர்களால், 100 வகையில் முட்டையை சமைக்க முடியும் என்பதே இதற்கு விளக்கம்.
கைத்தொழிலாக இருந்தது தொப்பி தயாரிப்பு. 19-ம் நுாற்றாண்டிலிருந்து தொழிற்சாலைகளில் உற்பத்தியாகிறது. உலகின் முதல் தொப்பி தயாரிப்புத் தொழிற்சாலை, அமெரிக்கா, டான்பர் நகரில், 1851ல் துவங்கப்பட்டது.
தொப்பியின் பரிணாம வளர்ச்சி தான் முகக்கவசம்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

