
உலக பணக்காரர் வீடு!
உலகின் மிகப் பெரும் பணக்காரர் அமெரிக்கரான பில் கேட்ஸ். அவரது வீட்டுக்கு, 'ஸாநாடு' என பெயர் சூட்டியுள்ளார். இதன் பொருள், கம்பீரமும், அழகும் நிறைந்த கற்பனையான பகுதி என்பதாகும்.
கற்பனையை நிஜமாக்கி, வீட்டின் பெயராகவும் வைத்திருக்கிறார். இது அமெரிக்கா, வாஷிங்டன் நகரில், வாஷிங்டன் ஏரி அருகே உள்ளது. இதை கட்டி முடிக்க, ஏழு ஆண்டுகள் ஆனது.
இந்த சொகுசு மாளிகை, 66 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. இந்த மாளிகையை வெளியிலிருந்து பார்க்க முடியாது. காரணம் மரங்கள் அடர்ந்துள்ளன.
இதற்குள்...
* ஒரு ஜிம், 2,500 சதுர அடியில் உள்ளது
* உணவு தயாரிக்கும் அறையின் பரப்பளவு 1,000 சதுர அடி
* படுக்கை அறைகள் ஏழு உள்ளன. ஆனால், 24-க்கும் அதிகமான குளியலறைகள் உள்ளன
* நீச்சல் குளம், 60 அடி நீளம் கொண்டது
* நீருக்குள்ளேயே இசைகேட்கும் வசதி உண்டு
* நீச்சல் குளத்தில் கண்ணாடிச் சுவர் ஒன்றும் இருக்கிறது
* வரவேற்பு அறையில், 200 பேர் வரை அமரலாம்.
ஒரு விருந்தாளி, இந்த மாளிகைக்குள் நுழைந்தால், அனுமதி அட்டை போல், ஒரு குறியீடு எண் தரப்படும். அது, 'டிஜிட்டல்' என்ற எண்ம அனுமதி அட்டை. நெருங்கிய நண்பர், அலுவலக பணியாளர், புதிய நபர் என வகை பிரித்து இந்த அனுமதி வழங்கப்படும். சில குறிப்பிட்ட அறைகளில் மட்டுமே உலாவ, குறியீடு எண் வழிவிடும். புது நபர் என்றால் வரவேற்பு அறை வரை தான் செல்ல முடியும். நெருங்கிய நண்பர் என்றால் வரவேற்பு அறை, நீச்சல் குளம், நுாலக அறை வரை போகலாம்.
அறைகளின் வெப்ப நிலை, 'சென்ஸார்' அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த மாளிகையை உருவாக்க, 300 தொழிலாளர்கள் பணி செய்தனர். அதில், 100 பேர் எலக்ட்ரீஷியன்கள்.
நுாலகத்தில் நிறைய புத்தகங்கள் உள்ளன.
ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த பிரபல ஓவியர் லியனார்டோ டா வின்ஸி கைப்பட வரைந்த தொகுப்பு ஒன்றையும் வைத்திருக்கிறார்.
அந்த மாளிகையின் மதிப்பு, 171 மில்லியன் டாலர். அதாவது, இந்திய மதிப்பில், 1,000 கோடி ரூபாய் என்கிறது, ஜில்லோ ரியல் எஸ்டேட் நிறுவனம்.
பத்திரப்படுத்துங்க!
சில குறிப்புகள் ஆச்சர்யப்படுத்தும். நினைவில் வைத்துக் கொள்ள தோன்றும். ஆனால் மறந்து விடுவோம்.
அது போல் சில...
* பீரோவை சுத்தம் செய்து, பயன்படுத்திய கொசு மேட் சிலவற்றை தட்டுகளில் பரப்பி அதன் மீது பேப்பர் விரித்து துணிகளை அடுக்கினால், ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது
* பிரண்டையை சாறு பிழிந்து, மஞ்சள் துாள், உப்பு அளவாக சேர்த்து காய்ச்சி, ஆறியபின், உடலில் சுளுக்கு ஏற்பட்ட பகுதியில் தடவ சரியாகும்
* சமையல் அறையில் எண்ணெய் பிசுக்கு ஒட்டி இருந்தால், வெதுவெதுப்பான நீரில் சலவை சோடாவைக் கலந்து, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சிடும்
* கண்ணாடி பாட்டிலில், பாதிஅளவு தண்ணீர் ஊற்றி, சிறிது கடுகு போட்டு குலுக்கி, ஊற வைத்துக் கழுவினால் துர்நாற்றம் போகும்
* மருதாணி இலையை ஆலிவ் எண்ணெயில் அரைத்து, தலையில் பூசி வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்; முடி கொட்டுவதும் நிற்கும்
* குங்குமம் இடுவதால், சிலருக்கு நெற்றி கறுப்பாகும். எலுமிச்சை பழச்சாறை மூன்று நாட்கள் தடவினால் கருப்புப் புள்ளி மறைந்துவிடும்
* தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து மோரில் கரைத்துக் குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராது.
- என்றும் அன்புடன், அங்குராசு.

