
துச்சம்பாளையம் கிராமத்தில், ஒரு துறவி வாழ்ந்து வந்தார்.
அவர் ஆசிரமத்திற்கு அருகில், புறம்போக்கு நிலம் கொஞ்சம் இருந்தது. ஆசிரமத்திற்கு, வருவோர் அதை, பாதையாக பயன்படுத்தி வந்தனர்.
அந்த பாதை அருகே, குடிசை கட்டி வாழ்ந்து வந்தான் வியாபாரி திருப்பதி.
குடிசைக்கு, முன் இருந்த வேப்ப மரக் கிளையில், பறவைகள் கூடு கட்டி, குஞ்சு பொரித்திருந்தன; கூட்டிலிருந்த குப்பை, குடிசை முற்றத்தில் விழுந்ததால் எரிச்சல் அடைந்தான் திருப்பதி.
குச்சியால் அந்த கூட்டை கலைத்தான்.
இதை பார்த்து திடுக்கிட்டார் துறவி.
'தம்பி... என்ன முட்டாள் தனமான காரியம் செய்கிறாய்...'
சற்று கடுமையாக கேட்டார் துறவி.
'சுவாமி... பறவைக் கூட்டை அகற்றுகிறேன்...'
பதில் அளித்தான் திருப்பதி.
'நீயும், உனக்கு சொந்தமில்லாத இடத்தில் குடிசை கட்டியிருக்கிறாய்... இந்த வழியை பயன்படுத்தும் மக்கள், பெருந்தன்மையுடன், விலகிப் போகவில்லையா...'
'அதற்காக, என் முற்றத்தை பறவை பாழாக்குவதை ஏற்க முடியுமா...'
'நீ... இந்த இடத்திற்கு, குடிவந்து சில மாதங்களே ஆகின்றன; ஆனால், இந்த வேப்ப மரம் நுாற்றாண்டு பழமை வாய்ந்தது; இதில், பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன. இந்த நிலத்தில், குடியிருக்க உனக்குள்ள உரிமை, மரத்தில் வாழும், பறவைகளுக்கும் உண்டு... மனிதனுக்கு, நிலத்தில் வீடு; பறவைகளுக்கு, மரத்தில் கூடு... கூட்டை கலைத்து இடைஞ்சல் செய்ய கூடாது...' என, அறிவுரை கூறினார்.
அதை கேட்டதும் மனம் மாறி, கூட்டை அகற்றும் முயற்சியை கைவிட்டான் திருப்பதி.
தளிர்களே... பறவைகளை நேசிக்க வேண்டும்; துன்புறுத்த கூடாது.
பி.கனகராஜ்

