
ஜெயிக்க பிறந்த ஜேம்ஸ்பாண்ட்!
ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, பவுண்டைன் பிரிட்ஜ், எடின்பர்க் பகுதியில், ஆகஸ்ட் 25, 1930ல் பிறந்தார், சீன் கானரி.
தொழிற்சாலையில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்தார் தந்தை. சலவை தொழிலாளியாக இருந்தார் அம்மா. இரண்டு பேரின் வருமானத்தில் தான் பட்டினி இன்றி வாழ்க்கை ஓடியது.
குழந்தை பருவத்தில், 'எவ்ளோ சின்னதா இருக்கு இந்த வீடு... ஒரு வசதியும் இல்ல...' என, தன் வீட்டைப்பார்த்து வருந்துவார், ஜேம்ஸ் பாண்டாக நடித்து புகழ் பெற்ற சீன் கானரி. கொடும் வறுமையுடன் போராடி இளமை காலத்தை கழித்தார்.
வறுமைக்கு மத்தியிலும் பள்ளிக்குச் சென்றார். கணக்கில் புலியாக இருந்தார். ஆசிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். நண்பர்கள் மத்தியிலும் பிரபலம். வகுப்பில் மிகவும் உயரம்; அவர், 12 வயதில் ஆறடி உயரத்தில் இருந்தார். இதனால், 'பிக் டோமி' என்ற புனைப்பெயர் சூட்டியே அழைத்தனர்.
வறுமை கொடுமையால் பள்ளி செல்ல முடியவில்லை. படிப்பை நிறுத்தி வேலைக்குச் செல்ல துவங்கினார். வீடு, வீடாக பால் விநியோகித்தார். பின், கடற்படையில் சேர்ந்தார். வயிற்றில் புண் பாதிப்பு ஏற்படவே வெளியேற்றப்பட்டார்.
பின், செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை, சவப்பெட்டிக்கு வண்ணம் பூசும் வேலை என, பல பணிகள் செய்தார். கிடைத்த வருவாயில் சேமித்து, 'வெயிட் லிப்டிங்' கிளப்பில் பயிற்சிக்கு சேர்ந்தார்.
நண்பர்கள் வற்புறுத்தலால், 'மிஸ்டர் யூனிவர்ஸ்' என்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்கும் பயிற்சியில் கலந்து கொண்டார். அப்போது, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது துடிப்பு மிக்க நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இதற்கிடையே, மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில், 3ம் இடத்தை பிடித்து புகழ் பெற்றார். நடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பிரபல ஹாலிவுட் சினிமா நிறுவனம், 'டிவண்டியத் சென்சுரி பாக்ஸ்' தங்கள் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது.
அது சாகசங்கள் செய்யும் பிரிட்டீஷ் உளவாளி பாத்திரம். பிரபல எழுத்தாளர் அயன் பிளமிங் உருவாக்கியது. ஜேம்ஸ்பாண்ட் என்ற வேடம். அதன் ரகசிய குறியீட்டு எண், 007 என்று அறியப்பட்டது. அந்த பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தினார், சீன் கானரி.
அழகு, புத்திகூர்மை, சமயோசிதம் என, அவரது நடிப்பு பளிச்சிட்டது. இது, உலகெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. பெரும் புகழ் பெற்றார்; பணமும் குவிந்தது.
அவர் கதாநாயகனாக நடித்த, 'டாக்டர் நோ' என்ற படம், 1962ல் பெரும் வெற்றி பெற்றது.
பின், ஜேம்ஸ்பாண்ட் வேடமேற்று நடித்தப் படங்கள் எல்லாம், வெற்றியைக் குவித்தன. அவர் நடித்த, 'நெவர் சே நெவர் அகைன்' என்ற படம், 1983ல் வெளியானது. கிட்டத்தட்ட, 20 ஆண்டுகள் ஜேம்ஸ் பாண்ட் என்ற பாத்திரத்தில் வலம் வந்து ரசிகர்களை மகிழ்வித்தார் சீன்.
உலக அளவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளை பெற்றார். அவர் நடித்த, 'தி அன் டச்சப்ள்ஸ்' என்ற படம், 1988ல் வெளியானது. அதில், ஐரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதற்காக, 'ஆஸ்கர் விருது' கிடைத்தது. அத்துடன், மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் வென்றார். பெரும் புகழ் பெற்ற சீன், அக்டோபர் 31, 2020ல் காலமானார்.
கடின உழைப்பு இருந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம் என்பது சீன் கானரியின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்.
உலக அழகன்!
உலகில், அதிக ரசிகர்களை ஈர்க்கும் ஆற்றலுள்ள ஆண் என்ற பெருமையை பெற்றிருந்தார் சீன் கானரி. இதற்காக அமெரிக்க நிறுவனம் ஒன்று, 1989ல் விருது வழங்கி கவுரவித்தது. அப்போது நடந்த விழாவில், 'சவப்பெட்டிகளுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்த போது, படுக்க இடம் இன்றி சவப்பெட்டியிலே துாங்கினேன்...' என பேசினார் சீன்.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து, ஆறு பேர் புகழ் பெற்றுள்ளனர். அவர்களின் முதன்மையானவர், சீன் கானரி. பிரபல நடிகர்கள் ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், திமோத்தி டால்ட்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் கிரெய்க் ஆகியோரும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து புகழ்பெற்றுள்ளனர்.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு

