
எங்கும் ஓடும் தேர்!
கோவில் கோபுரம் போல் கலைச் சின்னமாக திகழ்கிறது தேர். தென் மாநில கோவில்களில் தேரோட்டம் நிகழ்ச்சி வண்ணமயமானது. தேரின் பொலிவுக்கும், கட்டழகுக்கும் அதன் சிகரப் பகுதியும், வண்ணத் திரைச் சீலைகளும், மிளிரும் சிற்பங்களுமே காரணம்.இறைவன் லீலைகளையும், வாழ்வின் விநோதங்களையும் சித்திரிக்கின்றன தேர்ச்சிற்பங்கள். சிறந்த கலைப் படைப்புகளாக விளங்குகின்றன. பண்டைய கலைஞர்களின் நுட்பத் திறனுக்கு சான்றாக திகழ்கின்றன. அற்புத படைப்புகளாக, அபூர்வ சித்திரிப்புகளாக, உயரிய கற்பனையின் வெளிப்பாடாக விளங்குகின்றன.தேரோட்டிகளுக்கு அதிரதர், மகாரதர், தசரதர் போன்ற பட்டப்பெயர்கள், திறன் அடிப்படையில் பழங்காலத்தில் வழங்கப்பட்டிருந்தன. மகாகவி பாரதி, 'மாரத வீரர் மலிந்த நந்நாடு' என்று பாடியுள்ளார்.தேர் அமைப்பு முறையை, 'மானஸாரம்' என்ற சிற்பநுால் கூறுகிறது. இரண்டு முதல் ஒன்பது சக்கரங்கள் வரை கொண்ட தேர்கள் உண்டு. தேரின் பருமன், அடிப்பாக வேலைப்பாடு ஆகியவற்றை பொறுத்து சக்கரங்களின் எண்ணிக்கை அமையும். தேரின் இருசின் என்பது, இரு சக்கரங்களையும் இணைக்கும் கம்பி. இதன் மேல் பாகம், ஒன்றின் மேல் ஒன்றாக, பல தட்டுகளால் ஆனது. ஒவ்வொரு தட்டும், எட்டு முதல், 10 கோணங்கள் கொண்டது. வட்டமான தட்டுள்ள தேர், தமிழகத்தின் பல கோவில்களில் இருக்கின்றன.சக்கரங்களின் பருமன், எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து தேரின் அளவு அமைகிறது. தட்டுகளால் ஆன பாகத்தின் மேல் கால்களை நிறுத்தி, அதன் மேல் விமானம் போல் கலைநயம் மிக்க தேர் எழுப்புகின்றனர்.அடிப்பாகத்தில் உள்ள கோணங்களை கணக்கிட்டு, தேரின் மேல் கலச எண்ணிக்கை அமையும். தேர்க்கட்டுமானத்தில், அதன் எடைக்கு ஏற்ற வலு உள்ள சக்கரங்களை இணைத்து, வண்ணத்திரைச் சீலைக் கட்டிவிட்டால், அழகுத்தேர் பவனிக்கு தயாராகிவிடும்.தேரின் வசீகரம், எழில் சிற்பங்கள் கொலு வீற்றிருக்கும் அடிப்பாகம்தான்! இதில் பூலோக வாழ்க்கை, ஆகாய வாழ்க்கை, சொர்க்க வாழ்க்கை என்ற நிலைகள் சித்திரிக்கப்பட்டிருக்கும்.பூலோக வாழ்க்கையை சித்திரிக்கும் சிற்பங்களில், அரசர்கள் கொலு வீற்றிருப்பதையும், மனிதர்களின் இன்ப, இல்லற வாழ்க்கையையும் காணலாம்.ஆகாய வாழ்க்கையைப் படம் பிடிக்கும் சிற்பங்களில் யட்சன், யட்சி, கிண்ணரர், கந்தர்வர், தேவதை ஆகியோரின் பேரழகு கோலங்களை பார்க்கலாம். சொர்க்க வாழ்க்கைச் சிற்பங்களில் இறைவன்- - இறைவி திருக்கோலங்களை கண்டு வியக்கலாம்.இறைவனின் தர்ம ஆட்சியை விளக்கும் சிற்பங்களில் நரசிம்ம அவதாரம் போன்ற சத்திய வெற்றியைப் புலப்படுத்தும் புராணக் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.தேர்ச் சிற்பங்களில் பெரும்பாலும் கண்ணன் திருவிளையாடல், கோபியருடன் நடத்திய லீலைகள், கட்டழகு பெண்கள், ரதி-, மன்மதன் காதல் கோலம், மிதுன தம்பதியரின் எழில் வடிவங்களை காணலாம்.இல்லற வாழ்க்கை கடமைகளை முடித்து, இறைவனை நினைத்து துறவற வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகின்றன இந்த சிற்பங்கள்!யாழி வடிவங்கள், அன்னக்கொடி, சிங்கம், யானை, மலர்கள், நுாதன வேலைப்பாடுகள் தேர்களில் இடம் பெறும். இவை, எழிலை கூட்டுவதுடன் கலைஞனின் திறனை வெளிப்படுத்துவதாகவும் அமையும்.ஆசியா கண்டப் பகுதியில், சீன யாத்ரிகர் பாஹியான் எழுதிய பயண குறிப்புகளில், தேர்த் திருவிழா பற்றிய செய்தி சொல்லப்பட்டுள்ளது. 10ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் சிலவற்றில் தேர்த் திருவிழா பற்றிய குறிப்புகள் உள்ளன.விஜயநகர ஆட்சி காலத்தில், 10 மற்றும் 16 நாட்கள் தேர்த்திருவிழா நடத்தும் வழக்கம் இருந்தது. தமிழகத்தில், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேர், திருவாரூர், தியாகராஜர் தேர், கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேர் ஆகியவை பிரமாண்டமானவை. இவற்றின் சிற்ப அழகு நேர்த்தியானது. திருப்பதி, மதுரை, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, சிதம்பரம் கோவில் தேர்களும் அற்புத வடிவமைப்பும், கண்கவரும் சிற்பங்களும் கொண்டவை.தேரோட்டம் என்பது ஒற்றுமை கொண்டாட்டமாக இருந்தது. ஊர் கூடி தேர் இழுப்பது என்ற வழக்கு ஒற்றுமையைக் குறிக்கிறது.- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

